கோவில் 295 - திருவண்ணாமலை மாவட்டம் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                        

தினம் ஒரு முருகன் ஆலயம்-295

அனேக அற்புதங்களை நிகழ்த்துகின்ற திருவண்ணாமலை மாவட்டம் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்                                                                                                                                                

30.3.2022 புதன்

அருள்மிகு தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

விநாயகபுரம் 

ரெட்டிபாளையம்--632312

காட்டுக்காநல்லூர் ஊராட்சி

ஆரணி வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் 

இருப்பிடம்: கண்ணமங்கலம் 3 கிமீ, வேலூர் 24 கிமீ 

அலைபேசி: 94430 36373, 95242 03789


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான்

தல விருட்சம்: கடம்பமரம் 


தல மகிமை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் உள்ள ரெட்டிபாளையத்தில் இருக்கும் விநாயகபுரம் அருகில் உள்ள மலை உச்சியில் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. வேலூர் மாநகரிலிருந்தும் கண்ணமங்கலம் வழியாக இத்திருக்கோவிலுக்கு வரலாம். இக்கோவிலில் உள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுபவர்களுக்கு,  நினைத்தது எல்லாம் நிறைவேறுகிறது என்பதால், பக்தர்களின் வருகை நாளுக்குநாள் பெருகி வருகிறது. தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படுவது என்பது தனி சிறப்பு.


இத்திருக்கோவிலில் வேறெங்குமே காணமுடியாத சிறப்பம்சமாக கார்த்திகை பெண்களுக்கு 6 தனிக் கோவில்கள் உள்ளன. சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் தோன்றினார். முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள் நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பேர். இவர்களுக்கு கோவில் வெளி வளாகத்தை சுற்றி பிரமாண்ட நட்சத்திர வடிவிலும், ஒவ்வொரு நட்சத்திர முனையிலும் நிற்கின்ற நட்சத்திர வடிவில் ஆறு பேருக்கும் தனி தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே கார்த்திகைப் பெண்களுக்கான கோயில் இங்கு மட்டுமே உள்ளது. 


இக்கோவிலில் மயில்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. முருகப்பெருமானுக்கு  பிடித்தமான சேவல்கள் கூட்டமும் மயில்களுடன் ஒற்றுமையுடன் திரிவது சிறப்பு. கோவிலில் மூலவர் சந்நிதி மற்றும் விநாயகர், சிவன் சந்நிதிகளில் மயில்கள் வலம் வருகின்றன. முருகப்பெருமானின் வாகனமான மயிலையும், கொடியில் உள்ள சேவலையும் படத்தில் நெருக்கமாக பார்த்து வந்த நிலையில், இங்கு தினசரி கண் முன் காணும்போது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.2021-ம் ஆண்டு சூரசம்ஹார திருவிழாவில், சிறப்பு பூஜைகளின் போது நிஜ மயில் ஒன்று கருவறைக்கு வந்ததால், அங்கிருந்தவர்கள் பரவசமடைந்தனர். 


இத்திருக்கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப் படுகின்றன, இங்கு கிடைக்கும் பசும் பாலில் மட்டுமே மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடக்கிறது சிறப்பு. மயில்களும் அவைகளின் அறைகளில் தங்குகின்றன. கந்தனின் திருவருளால் இங்கு திருமணங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்திற்கு தேவையான திருமண கூடம், வாத்தியம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருப்பதால் இறையருளுடன் இங்கேயே திருமணம் செய்ய அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வருகின்றனர். மலைகளின் நடுவே அமைந்துள்ள இக்கோவிலின் இயற்கை அழகின் எழிலான தோற்றமும், இறைவனின் அருளும் சேர்ந்து தேவலோகமாக காட்சியளிக்கிறது. ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி இந்த மலைக்கு வந்து 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். இதனால் மலையெங்கும் மரங்களால் பசுமையாக காட்சியளிக்கிறது.


தல வரலாறு:

சில வருடங்களுக்கு முன்னர் நிர்வாகி ஒருவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி  தனக்கு இந்த மலை உச்சியில் கோவில் கட்டுமாறு ஆனையிட்டார். எனவே ஊர் மக்கள் உதவியுடன், அரசின் முறையான அனுமதி பெற்று, இங்கு சுப்பிரமணிய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இத்திருக்கோவில் எழுப்பப்பட்டு 2012-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு வேலவனை சுற்றி வந்த மயில் ஒன்று உடல் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததால், கோவில் வெளி வளாகத்திலயே ஒரு பெரிய அழகிய மயில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 


தல அமைப்பு:

மலை தொடக்கத்தில் ஒரு சிறிய விநாயகர் கோவில் உள்ளது. மலையுச்சியிலுள்ள முருகன் கோவில் செல்வதற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்ல நேர்த்தியான படிக்கட்டுகளும், வாகனங்களில் செல்ல அழகான சாலை வசதியும் உள்ளன. புதிய கோவிலாகியதால், அழகிய கலை வண்ணத்துடன் பக்தர்களை வரவேற்கிறது. கோவிலை சுற்றியுள்ள அறுகோண வடிவில் 6 கார்த்திகை பெண்டிரும் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து மூலவர் முருகப்பெருமானை பார்த்து கொள்வதை போல் காட்சியளிக்கின்றனர்.


கோவிலின் நெடிய கொடிக்கமபத்தின் முன் அழகிய வேல் மற்றும் மயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோவில் கருவறை வாயிலில் இரு புறமும் வள்ளி, தெய்வானை இருவரும் வீற்றிருந்து அருளுகின்றனர். கருவறையில், சேவற்கொடியோன், சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயருடன், கையில் வேல் தங்கி, நின்ற கோலத்தில் அழகிய பொலிவுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழிலேயே அர்ச்சனை நடைபெறுகிறது. அலங்கார முருகனை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.


கருவறையை சுற்றி தட்சிணாமூர்த்தி, கன்னி மூல கணபதி, அம்மன் சமேத சிவபெருமான், மகாலஷ்மி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் அருளுகின்றனர். அருணகிரி நாதர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது சிறப்பு. திருப்புகழ் பாடல் மற்றும் முருகனுக்கு பிடித்தமான பாடல்கள் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உயரமான தங்கத்தேர் இக்கோவில் முருகப்பெருமானுக்காக உள்ளது சிறப்பு. விசேஷ தினங்களில் தங்கத்தேர் ஓடுவது கண் கொள்ளா காட்சியாகும். 

  

திருவிழா: 

தைப்பூசம், சித்திரை முதல் நாள், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்), செவ்வாய், சஷ்டி, கிருத்திகை

  

பிரார்த்தனை:

திருமணம் நடைபெற வேண்டி, வேண்டுவன எல்லாம் நிறைவேற


நேர்த்திக்கடன்:

பால் குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 7 முதல் மாலை 7.30 வரை


வேண்டிய வரங்களை எல்லாம் தந்தருளும் தம்டகோடி சுப்பிரமணிய சுவாமியை நாமும் வணங்கி எல்லா நலங்களும் பெறுவோம்!                                      

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - அனேக அற்புதங்களை நிகழ்த்துகின்ற திருவண்ணாமலை மாவட்டம் தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - பக்தர்களுடன் முருகப்பெருமானுக்கு பிடித்தமான மயில்களும், சேவல்களும் தம்டகோடி  சுப்பிரமணிய சுவாமியை வலம் வந்து வணங்குதல்



Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்