கோவில் 294 - ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-294
செவ்வேளின் செவ்வாய் பரிகாரத் தலம் ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்
29.3.2022 செவ்வாய்
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
கோட்டுப்புள்ளாம் பாளையம்-638453
கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: கோபிசெட்டிபாளையத்திலிருந்து 10 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி
உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்
தல விருட்சம்: கடம்பமரம்
தீர்த்தம்: இடி தீர்த்தம்
தல மகிமை:
ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள கோட்டுப்புள்ளாம் பாளையம் எனும் ஊரில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீது அழகன் முருகப்பெருமான், பாலதண்டாயுதபாணி என்னும் திருநாமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இந்த அற்புத தலத்தை குஹகிரி எனவும் அழைக்கின்றனர். இக்கோவில் மூலவர் பாலதண்டாயுதபாணி திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைப் போல் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது மிகவும் சிறப்பம்சம்.
இக்கோவில் பிரார்த்தனைக்கும், பரிகாரத்திற்கும் ஏற்ற தலமாக அமைந்திருக்கின்றது ரத்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இங்குள்ள இடிதீர்த்தில் நீராடி. கந்தனை வேண்டித் தொழுதவுடன் பூரண குணம் அடைகின்றனர் என்கிறார்கள் பக்தர்கள். கல்வி மேன்மையடைய வணங்கினால் கந்த குரு வெற்றி பெறச் செய்கின்றார். செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்ற பூஜையாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குழந்தை பாக்கியம், திருமண தடை போன்றவற்றுக்காக செவ்வாய் கிழமைகளில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால் நிச்சயம் பலன் கிடைக்கின்றன.
சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். கார்த்திகை தீபம், தைப்பூசம் பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாக்கள். சுற்று வட்டார மக்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக ஆடல் பாடல்களுடன் நேர்த்திக்கடனைச் செலுத்துவது கண்களுக்கு அழகு.
வைகாசி விசாகத்தில் நடைபெறும் படி பூஜை முக்கிய விழாவாகும். அனைத்து படிகளையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு தனித்தனியே ஒவ்வொரு படிக்கும் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தேங்காய், பழம் நெய்வேத்தியம் படைத்து பூஜைகளைச் செய்வர் நாதஸ்வர இசையுடன் கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பண் இசைக்க நடைபெறும்
தல வரலாறு:
இம்மலை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அடர்ந்த தர்ப்பை வனம் மேவிய பகுதியாக இருந்தது. மலையைச் சுற்றிலும் குடிநீருக்கே சிரமப்பட்டிருந்த கிராமம் இம்மலையின் அடிவாரத்தில் தம்பிரான் சுவாமிகள் என்பவர் ஒரு கிணற்றைத் தோண்டினார். நல்ல நீர் கிடைத்தது. இந்த மகான் இக்கிராம மக்களுக்கு ஏற்பட்ட மனநோய்களையும் குணப்படுத்தி வந்தார். அதே சமயத்தில் கருப்பண்ண சித்தர் என்ற மகானும் இங்கு தவம் மேற்கொண்டிருந்தார் மலையில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து ஒரு சிறிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து கோவிலை எழுப்பி, வழிபாடுகளை செய்து வந்தார்
அவருக்கு பின் குப்பண்ண சுவாமிகள் என்ற சித்தர் இக்கோவிலுக்கு வந்து நீண்ட நாட்கள் தங்கி பூஜை செய்து வந்தார். அவர் தியானத்தில் ஈடுபட்டு சித்தராய் ஞானம் பெற்றார். தான் சமாதி ஆகப்போகும் நேரம் நாள் காலம் மற்றும் நட்சத்திரம் குறித்து தியானத்தில் இருக்கும் போதே தெரிவித்தார் அவர் குறிப்பிட்ட அதே நாளில் சமாதியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இம் மகான்களின் சமாதி அடிவாரத்தில் இன்றும் உள்ளன இக்கோவில் பின்னர் சிதிலமடைந்தது. ஊர் பொதுமக்கள் முருகனுக்கு புதியதாக கோவில் எழுப்பி புதிய சிலையை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டு, மலை உச்சியில் ஓர் அழகிய கோவில் உருவானது.
தல அமைப்பு:
அடிவாரத்தில் இருபுறமும் இரண்டு யானைகளின் சிலைகள் பக்தர்களை வரவேற்பது போன்று அமைந்துள்ளது. அருகில் பாத விநாயகர் சந்நிதியும், மண்டபமும் உள்ளன. 98 படிகள் ஏறி கோயிலை அடையலாம். கோவில் வாசல் முன்பு அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய தீப ஸ்தம்பமும் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபமும் உள்ளன். ஸ்தம்பத்தின் அடிப்பகுதியில் மயில், விநாயகர், முருகன் புடைப்பு சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்துள்ள மகா மண்டபத்தில் உயர்ந்த நிலையில் அமைந்துள்ள கருவறையில் வலது கரத்தில் தண்டத்தையும், இடக்கரத்தை இடுப்பில் வைத்தபடியும் நின்ற கோலத்தில் எழிலாய் பாலதண்டாயுதபாணி எழுந்தருளி பக்தகர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவரின் முன் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவராக அருள்கின்றார். மகுடேஸ்வரர், சவுந்தராம்பிகை, வள்ளி, தெய்வானை, மஹாவிஷ்ணு, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்
திருவிழா:
கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் (படிபூஜை), பிரதி செவ்வாய், சஷ்டி, கிருத்திகை, அமாவாசை
பிரார்த்தனை:
செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய் பூஜை, தீராத நோய்களும் (ரத்த சம்பந்த நோய் உட்பட) குணமாக, திருமணத்தடை அகல, புத்திர பாக்கியம் வேண்டி, கல்வி மேம்பட
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், பாதயாத்திரை, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 8-10 மாலை 5-6
ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி சுவாமியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - ரத்த சம்பந்த நோய்களையும் குணமாக்கும் ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி சுவாமி
படம் 2 - ஈரோடு மாவட்டம் கோட்டுப்புள்ளாம் பாளையம் பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவில் சிறப்பு மிக்க படிபூஜை
Comments
Post a Comment