கோவில் 293 - கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-293

கேட்பவருக்கு கேட்ட வரமளிக்கும் கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில்                                                                                                                                                   

28.3.2022 திங்கள்

அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்

முருகன் குன்றம் 

கன்யாகுமரி-629702 

இருப்பிடம்: கன்யாகுமரி ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ, நாகர்கோவில் 20 கிமீ

அலைப்பேசி: 9489 032988


மூலவர்: வேல்முருகன்

உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்


தலமகிமை:

கன்யாகுமரி-சென்னை தங்க நாற்கர சாலையில், கன்யாகுமரியிலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில், வேல் வடிவில் தோன்றிய வேலவன் குடியிருக்கும் தலம் முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் என்றழைக்கப்படுகிறது. சந்தனக் கவசத்தில் வேல்முருகனைக் காணக் கண்கோடி வேண்டும். மலை உச்சியில் ஏறி வந்து மனமுருக வேண்டி நின்றால், வேண்டியதை நிறைவேற்றித் தந்திடுவான் இந்தக் குமரன் என்கின்றனர். வேலுக்கு பூஜை நடப்பது இத்தல சிறப்பு.


மலை உச்சியிலிருந்து பார்த்தால் அழகிய கடல், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, மேற்கு தொடர்ச்சி மலைகள், தங்க நாற்கர சாலை, காற்றாலைகள் ஒருங்கே தெரிவது இத்தலத்தின் சிறப்பம்சம்.                                               


வேல்முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா மற்றும் நிலாச்சோறு விருந்து பிரசித்தம். அன்று ஹோமம், கலச பூஜை, அபிஷேகம், வேல்முருகன் திருமேனிக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு மற்றும் லட்சார்ச்சனையும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். மதியம் அன்னதானமும், மாலையில் லட்சார்ச்சனை நிறைவும் சிறப்பு வழிபாடும் நடக்கிறது. பின்னர் நிலாச்சோறு விருந்து மிகவும் பிரசித்தம். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று குமரனின் அருளைப் பெறுவர். 


ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. விழாவின் முதல்நாள் அதிகாலை 5.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யாகசாலை பூஜை, 10.30 மணிக்கு கொடி ஏற்றப்படும். 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரையும், மற்றும் பஜனை, 8 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமியுடன் அம்பாள் கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. தினமும் விசேஷம்.10-ம் நாள் தைப்பூச திருவிழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதல், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு ஆகியவை நடக்கின்றன.


கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். தினமும் காலை 9 மணிக்கு கும்ப கலச யாக பூஜையும், 10 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடக்கிறது. 6-வது நாளன்று மாலை 6 மணிக்கு மலையடிவாரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 7-வது நாளன்று காலை 8.45 மணிக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன் இந்திர வாகனத்தில் பட்டண பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு கல்யாண விருந்தும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகின்றது.


ஒவ்வொரு மாதமும் விசாக நட்சத்திர நாளில் பக்தர்கள் திருமுருகனின் மந்திரங்களைச் சொன்ன படியே முருகன் குன்றத்தை ஆறுமுறை கிரிவலம் வருகின்றனர். அதனால் அனைத்து பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த கிரிவல நிகழ்ச்சி வைகாசி விசாக நாளில் வெகுகோலாகலமாக நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் திருவிளக்கு பூஜை நடைபெறுகின்றது.

தல வரலாறு:

பண்டையக் காலத்தில் குறுநில மன்னர்கள் இப்பகுதியை ஆண்டபோது இந்த இடம் கோட்டை கொத்தளமாக இருந்தது. காலப்போக்கில் கோட்டை சிதைந்து போய், சில பகுதிகள் மட்டுமே எஞ்சியது. 1971ம் ஆண்டு இந்த சிதைந்து போன கோட்டைப் பகுதியில் இருந்து, செம்பினால் செய்யப்பட்ட பெரிய வேல் ஒன்று கிடைத்தது. வேலவன் அம்சம் நிறைந்ததாகவே கருதி, அதை சித்ரா பௌர்ணமி நாள் ஒன்றில் தற்போது கோவில் இருக்கும் குன்றில் ஸ்தாபித்தனர்.  இறை அம்சம் நிறைந்த அந்த வேலினை பக்தர்கள் கந்தவேளாகவே நினைத்து வழிபட்டதில் கஷ்டங்கள் தீர்ந்தன. பின்னர் அனைவரின் உதவியுடன் வேல்முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழுப்பப்பட்டது.  வேல் மற்றும் வேலவனின் மகிமையால் இத்தலம் மிகவும் பிரசித்தியடைந்தது. சித்ரா பௌர்ணமி நாளில் நிறுவப்பட்டதால், அன்றைய தினம் சிறப்பு ஆராதனைகள் செய்து பின்னர் நிலாச்சோறு உண்ணும் பழக்கமும் ஏற்பட்டது.  


தல அமைப்பு:

81 படிக்கட்டுகள் ஏறி கோபுரவாயிலை கடந்தவுடன் அழகிய மயில்மண்டபம் உள்ளது. மண்டபத்தில் 12 அடி உயர, 6 அடி அகல பிரமாண்ட பெரிய மயில் சிறப்பான தோற்றத்தில் உள்ளது. அதையடுத்து பிரமாண்டமான செம்புக் கொடிமரம் உள்ளது. 


உள்ளே கருவறையில் எழில் கொஞ்சும் முருகப் பெருமான், வேல்முருகன் என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் கையில் வேலுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரே வேலவனைப் பணியும் பாவனையில் மயில்வாகனம் நின்றிருக்கிறது. கருவறைக்கருகில், தனி சந்நிதியில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சியளித்து அருள்கின்றார். 


அகழ்வாராய்ச்சியில் கிடைத்து ஆரம்பத்தில் ஆராதிக்கப்பட்ட வேல், தனி சந்நிதியில் இருக்கிறது. அதையும் முருகப்பெருமானாகவே பாவித்து வணங்குகிறார்கள். தனி சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் வேலுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பாகும்.


விநாயகப்பெருமான், புவனேஸ்வேரி அம்மன் ஆகிய தெய்வங்கள் தனி சந்நிதிகளில் அருளுகின்றனர். விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், புவனேஸ்வரி அம்மனை 11 செவ்வாய்க் கிழமை ராகுகாலத்திலும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் சுப காரியத் தடைகள், தோஷங்கள், உடற்பிணிகள், வறுமை முதலியன அகலும்.  


திருவிழா:

தைப்பூசம் (10 நாள்), கந்த சஷ்டி (7 நாள்), சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை பவுர்ணமி திருவிளக்கு பூஜை, மாத விசாகம், சஷ்டி  

  

பிரார்த்தனை:

வேண்டிய வரம் கிடைக்க, கஷ்டங்கள் தீர, மன அமைதி பெற, ஐஸ்வர்யம் பெருக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், கிரிவலம் 


திறக்கும் நேரம்:

காலை 6.30-11.30 மாலை 5-8 


பக்தர்கள் வேண்டியதையெல்லாம் நிறைவேற்றும் கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகனை சோம வார நாளன்று துதித்து பயனடைவோம்!                                      

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - கேட்பவருக்கு கேட்ட வரமளிக்கும் கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன்



படம் 2 - ஐஸ்வர்யம் பெருக அருளும் வேலை வேலவனாக வணங்கும் தலம் கன்யாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்