கோவில் 627 - பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-627
அகிலெங்கும் அருளும் பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமி கோவில்
25.2.2023 சனி
அருள்மிகு சிவ சண்முகநாத சுவாமி திருக்கோவில்
139, Rue Lambert
செயிண்ட் லூயிஸ் (Saint Louis-97450)
ரீயூனியன் தீவு (Reunion Island)
பிரெஞ்சு பிராந்தியம் (France Region)
மூலவர்: சிவ சண்முகநாத சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சிவ சண்முகநாதர் வள்ளி, தெய்வானையுடன்
தலமகிமை:
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு ரீயூனியன் தீவு ஆகும். இது பிரான்சின் வெளிநாட்டுத் துறை மற்றும் பிராந்தியமாகும். இது மடகாஸ்கர் தீவின் கிழக்கே 950 கிமீ தொலைவிலும், மொரீஷியஸ் தீவின் தென்மேற்கே 175 கிமீ தொலைவிலும்அமைந்துள்ளது. இது பிரெஞ்சு குடியரசின் ஒருங்கிணைந்த பகுதி. ரீயூனியன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புறப் பகுதியாகும். ரீயூனியன் தீவு, தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரே யூரோ மண்டலமாகும் .
செயிண்ட் லூயிஸ், ரீயூனியனில் உள்ள 5-வது பெரிய பகுதியாகும். இது ரீயூனியன் தீவின் தென்மேற்கு பகுதியில், செயிண்ட் பியர்க்கு அருகில் அமைந்துள்ளது. செயிண்ட் லூயிஸ் பகுதியில் உள்ள Rue Lambert-ல் பிரசித்தி பெற்ற சிவ சண்முகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவராக சிவ சண்முகநாத சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கின்றார். உலகெங்கிலுமுள்ள முருகப்பெருமான் கோவில்களைப் போல இத்திருக்கோவிலிலும் தைப்பூசத் திருவிழா, பால்குடம், காவடி, ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா என மிகவும் கோலாகலமாகவும், அதீத பக்தியுடனும் கொண்டாடப்படுகின்றது.
தல வரலாறு:
ரீயூனியனில் கரும்பு ஆலைகளும், நிலக்கரி சுரங்கங்களும் அதிகமாக உள்ளன. பிரெஞ்சு நாட்டிலிருந்தும், ஆசிய கண்டத்திலிருந்தும் குடியேறிய தமிழர்கள் செயிண்ட் லூயிஸ் பகுதியில் இந்த சிறப்பான சிவ சண்முகநாத சுவாமி கோவிலை எழுப்பியுள்ளனர்.
தல அமைப்பு:
தென்னிந்திய அமைப்பில் கட்டப்பட்ட இக்கோவில் கருவறையில் சிவ சண்முகநாத சுவாமி ஆறுதிருமுகங்களுடன் மயில் மீதமர்ந்தவாறு கையில் வேல் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருகில் வள்ளி, தெய்வானை நின்ற கோலத்தில் வீற்றிருந்து அருளுகின்றனர். மேலும் உற்சவர், விநாயகப்பெருமான், அம்பாள் சமேதராக சிவபெருமான், பத்ரகாளி உட்பட இதர தெய்வங்கள் அருளுகின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம்
பிரார்த்தனை:
நினைத்தது நடக்க, சகல செல்வங்களும் கிடைக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்,
சகல செல்வங்களும் கிடைக்க அருளும் பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமியை மனக்கண்ணால் தரிசித்து மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 627 அகிலெங்கும் அருளும் பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமி
படம் 2 - 627 சகல செல்வங்களும் கிடைக்க அருளும் பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமி
Comments
Post a Comment