கோவில் 265 - திண்டுக்கல் மாவட்டம் ஐவர் மலை குழந்தை வேலப்பர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-265
அற்புதங்கள் நிறைந்த திண்டுக்கல் மாவட்டம் ஐவர் மலை குழந்தை வேலப்பர் கோவில்
28.2.2022 திங்கள்
அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவில்
ஐவர் மலை-624621
திண்டுக்கல் மாவட்டம்
இருப்பிடம்: பழனி-கொழுமம்-உடுமலைப்பேட்டை சாலையில் பாப்பம்பட்டி 15 கிமீ அங்கிருந்து 3 கிமீ ஐவர் மலை கோவில்
மூலவர்: குழந்தை வேலப்பர்
தலமகிமை:
திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் ஐவர்மலை உள்ளது. இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்களையும் உருவாக்கி தந்துள்ளது. அதேபோல் சமணர்கள் இந்த மலையில் ஞானம் பெற்று முக்தி அடைந்துள்ளனர். மகாபாரத இதிகாசம் நடைபெற்ற துவாபார யுக காலத்தில், பஞ்சபாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்து காடுகளில் வசித்தபோது, திரௌபதியுடன் இந்த மலையில் தங்கி இருந்ததால் இம்மலைக்கு ‘ஐவர் மலை’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு நிறுவப்பட்ட ஐவர் மலை திரௌபதி அம்மன் கோவில் மிகவும் விசேஷமானது.
இந்த ஐவர்மலை, தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற சூழலில் அமைந்துள்ளது. தமிழகம், கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் இங்கு வந்து தியானம் செய்து வருகின்றனர். 3 கால பூஜைகள் நடைபெறுகிறது. மாத கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் திருக்கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் குழந்தை வேலப்பரை வணங்கி செல்கின்றனர்.
பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த பல சமண முனிவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களில் பலரும் இந்த ஐவர் மலையில் தங்கி, தியானம் செய்து முக்தி அடைந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு தங்கி தூங்குவதற்கு பயன்படுத்திய கல் படுக்கைகள் இன்றும் இங்கு உள்ளன. இதற்கு சான்றாக, அங்குள்ள திரௌபதி அம்மன் கோவில் அருகே உள்ள மலையில் சமண முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்த கோலத்திலும், நின்ற கோலத்திலும் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சமண சிற்பங்கள் யாவும் பாதுகாப்பாக இருக்க தொல்லியல் துறையினர் ஐவர் மலையை பாதுகாத்து வருகின்றனர்.
ஐவர் மலையில் 2 வற்றாத சுனைகள் உள்ளன. அவை சூரிய புஷ்பகரணி, சந்திர புஷ்பகரணி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. சூரிய புஷ்பகரணியில் தாமரை மலர்களும், சந்திர புஷ்பகரணியில் அல்லி மலர்களும் நிறைந்துள்ளன. சூரிய கதிர்கள் தாமரை மீதும், சந்திர கதிர்கள் அல்லி மீதும் விழும் வண்ணம் இந்த சுனைகள் அமைந்திருப்பது சிறப்பு. ஆடி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைவதாகவும், அப்போது சூரிய-சந்திர கதிர்கள் ஐவர் மலையில் விழுவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது. எனவே ஆடி அமாவாசை நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு வந்து திரவுபதி அம்மன், குழந்தை வேலப்பரை வணங்கி செல்கின்றனர்.
தல வரலாறு:
பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலையை வடிவமைத்த போகர் சித்தருக்கும், ஐவர் மலைக்கும் தொடர்பு இருப்பதாக புராண கதைகள் கூறுகின்றன. சீனாவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது, போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து இருந்தது. இந்த தோஷம் நீங்குவதற்கு அவர் ஐவர் மலையில் வேள்வி நடத்தினார். அதன் முடிவில் அவரின் இஷ்ட தெய்வமான புவனேஸ்வரி அம்மன் தோன்றி, பழனி மலையில் நவபாஷாணத்தால் முருகன் சிலையை நிறுவி வழிபடு என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே போகரால் உருவாக்கப்பட்டதுதான் பழனியில் உள்ள முருகன் சிலை என்று கூறப்படுகிறது.
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் பக்தரான முருகானந்த சுவாமிகள் என்பவர், வாழ்வின் உண்மை பொருளான அமைதியை தேடுபவர்கள் இங்கு வந்து அதன் பயனை அடைய வேண்டும் என்பதற்காக ஐவர்மலையில் வள்ளலார் மடத்தை நிறுவினார். அந்த நேரத்தில் பழனியைச் சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாா். அவர், முருகானந்த சுவாமிகளை நாடியபோது, ஐவர் மலையில் முருகன் கோவிலை நிறுவி வழிபடுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து குழந்தை வேலப்பர் கோவில் கட்டப்பட்டது என்பது செவி வழிச் செய்தி.
தல அமைப்பு:
ஐவர் மலை கோவில் கருவறையில் முருகப்பெருமான் பழனி தலம் போன்றே மேற்கு நோக்கிய படி குழந்தை வேலப்பராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். முருகனின் திருவுருவம் வேறு எந்த கோவிலிலும் காணப்படாத திருவுரு ஆகும். குழந்தை வேலப்பர் தோகை விரித்த மயிலின் முன், மயிலின் கழுத்தை இடக்கையில் அனைத்த வாறும் வலக்கையை இடுப்பில் ஊன்றியபடியும், ஸர்ப்பம் பாதத்தருகே படம் எடுத்த நிலையிலும் அமைந்திருப்பது சிறப்பாகும். இந்த அமைப்புள்ள முருகனை மயூரப்பிரியின்" என்பர். இத்தோற்றத்தை அபிஷேகத்தின் போது மட்டும் தான் காண இயலும் அலங்காரத்தில் இத்தோற்றம் மறைந்து விடும்.
உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி விநாயகப் பெருமானும், தெற்கு நோக்கி ஐம்பொன்னாலான சிவகாமி சமேத நடராஜரும் அருள் புரிகின்றனர்.
கோவில் வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள நவக்கிரக மண்டபத்தில், நவக்கிரகங்கள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. கோவில் முன் சுற்று சுவற்றுக்கு வெளியே விளக்கு தூண் உள்ளது. கோவில் எதிரில் வள்ளலார் ஜோதி மண்டபம் உள்ளது. அருகில் 2 சுனைகள் உள்ளன. பழனி கோவிலை போல் இங்கும் இடும்பனுக்கு தனி சந்நிதி உள்ளது. அதேபோல் இங்கு மலையடிவாரம் மற்றும் உச்சியில் விநாயகருக்கென தனித்தனி சந்நிதிகள் உள்ளன. மலை உச்சியில் உள்ள விநாயகர் கோவிலில் உள்ள தூபத்தில் ஏற்றப்படும் தீபமானது, காற்றினால் அணையாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழா:
மகா சிவராத்திரி, தைப்பூசம், திருக்கார்த்திகை தீபம், ஆடி அமாவாசை கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, விநாயகர் சதுர்த்தி
பிரார்த்தனை:
ஞானம் பெற, முக்தி பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 7 முதல் மாலை 5 வரை
ஞானமும், முக்தியும் பெற்றிட திண்டுக்கல் மாவட்டம் ஐவர் மலை குழந்தை வேலப்பரை வணங்கி, தியானித்து பலன் பெற்றிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment