கோவில் 264 - புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🙏                                                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-264

ஒற்றைக்கல்லாலான 900 ஆண்டுகள் பழமையான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்

27.2.2022 ஞாயிறு

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

கண்ணனூர்-622409

புதுக்கோட்டை மாவட்டம் 

இருப்பிடம்: திருமயம்-கோவில் 11 கிமீ, புதுக்கோட்டை-கோவில் 25 கிமீ   

மூலவர்: பாலசுப்பிரமணியர் 


தலமகிமை:

தமிழகத்தில் முருகனுக்கு எழுப்பப்பட்ட முதல் கற்கோவில் (கற்றளி கோவில்) புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் என்ற தலத்தில், அமைந்துள்ளது. 


மூவாயிரம் ஆண்டுகள் பழைமையும், 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்றளிக் கோவிலைக் கொண்ட பெருமையும் உடைய இயற்கை எழில் சூழ்ந்த இந்தத தலத்தில் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். 


வாசல் முதல் விமான கலசம் வரை அனைத்தும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளிலும் யானைகள் உள்ளன.  


தல வரலாறு:

இந்தக் கோவில் முதலாம் ஆதித்த சோழனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கீழ் செயல்படும் இக்கோவில், தமிழகத்தின் பழங்கால கலைச்சின்னமாகப் போற்றப்படுகிறது.


தல அமைப்பு:

கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணியர் என்னும் பெயருடன். கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார் இவரது நான்கு திருக்கரங்களில், வலது மேற்கையில் திரிசூலம் உள்ளது. வலதுகை அபயஹஸ்தமாக பக்தருக்கு அடைக்கலம் அளிக்கிறது. இடது மேல்கை ஆயுதம் ஏந்தியும், இடதுகை இடுப்பில் ஊன்றிய நிலையிலும் உள்ளது இரண்டு தோள்களில் குறுக்காக ருத்ராட்சமாலை, காலில் தண்டையும் உள்ளன. முருகனின் வாகனமான மயிலுக்கு பதிலாக யானை இருப்பது, இக்கோவிலின் பழமையை உணர்த்துவதாகும் சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை இடம்பெற்றுள்ளது. 


இத்தலத்தில் முருகன் சக்தி மிக்கவராக இருப்பதால் கருவறைக்கு நேராக பலகணி என்னும் கல் ஜன்னல் உள்ளது. இதனால், கோவிலின் பக்கவாட்டில் தெற்கு நோக்கி வாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலில் நவக்கிரகங்களை குறிக்கும் விதத்தில் ஒன்பது துவாரங்கள் உள்ளன இதன் வழியே முருகனை தரிசிக்க கிரகதோஷம் நீங்கும்.


கருவறை சுவரிலுள்ள பூதகணங்கள், மேற்கூரைகள் சோழர்கால பாணியில் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. தெற்கு மாடத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். இவரது திருவடியில் முயலகன் இருப்பது சிறப்பு.


திருவிழா:

வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம்


பிரார்த்தனை:

கிரகதோஷம் நீங்க, நினைத்தது நிறைவேற 


நேர்த்திக்கடன்:

வியாழக்கிழமையன்று முருகனுக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து தினை மாவு படைத்து வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்  


திறக்கும் நேரம்:

காலை 10.30-11.30 


புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணிய சுவாமியை மனமுருக வழிபட்டால் கிரகதோஷம் நீங்கிவிடும்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25                                                                                                                                  🙏🙏



படம் 1 - கிரக தோஷம் நீக்கி அருளும் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணியர்


படம் 2 - ஒற்றைக்கல்லாலான 900 ஆண்டுகள் பழமையான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்