கோவில் 263 - கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-263
சனிக்கிழமை & செவ்வாய்க்கிழமை மட்டுமே காட்சி தந்து அருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகன் கோவில்
26.2.2022 சனி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
சென்னாமலை-641301
சிறுமுகை ரோடு
மேட்டுப்பாளையம் அஞ்சல்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: மேட்டுப்பாலைளையம் 6.5 கிமீ
மூலவர்: பாலமுருகன்
அம்மன்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
மேட்டுப்பாளையத்தில் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள இத்தலத்தில் ஈசனின் இளவல் முருகப்பெருமான் குடி கொண்டுள்ளார். பழநி முருகனைப் போல் இக்கோவில் பாலமுருகனும் மேற்குப் பார்த்து அருள்புரிவது சிறப்பு மிக்கதாகும். பழநியில் சண்முகா நதி ஓடுவது போல இங்கு பவானி ஆறு மலையின் அடிவாரத்தை தொட்டு செல்வது சிறப்பு.
இக்கோவிலின் தனிச்சிறப்பு மற்றும் தனித்துவம், வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளிலும், மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் மட்டுமே திறந்திருக்கும். கிருத்திகையன்று பத்து வகையான விசேஷ அலங்காரம், நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான கலந்துகொண்டு பாலமுருகனின் பெறுகின்றனர் வருட தைப்பூசம் இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு கொடியேற்றுத்துடன் இருந்து பக்தர்கள் காவடி வருவார்கள் மூலவர் பாலமுருகனுக்கும், வள்ளி-தெய்வானை முருகனுக்கும். சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் திருத்தேர் வடம் பிடித்துஇழுக்கப்படுகிறது.
ஏழு செவ்வாய்க்கிழமைகள் சென்னாமலை முருகனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். எதிரிகள் தொல்லை நீங்கி விடும், தொழில் மேன்மை அடையும். நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல வரலாறு:
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு அமைதியை நாடிய ஒருவர் சென்னாமலை உச்சியில் குடிசை அமைத்து, தங்கி தவம் செய்து வந்தார். இரவு நேரங்களில் ‘ஓம் ஓம்’ என்ற ஒலி கேட்க. அங்கே முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக இருப்பதை உணர்ந்தார் ஆறுமுகன் மீது அதீத பக்தி கொண்டதன் விளைவாக ஆற்றல் அதிகமாகி, ஒற்றை ஆளாக ஒரு கிணறைத் தோண்டினார். முருகனுக்கு சிறிய சிலை வடித்து, பிரதிஷ்டை செய்து, கிணற்று தீர்த்தத்தால் தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, ஆசைதீர வழிபட்டு வந்தார். சில நாட்களுக்குப் பிறகு முருகனுக்கு சிறிய சந்நிதி அமைத்து, சுற்றிலும் கற்சுவர் எழுப்பினார். நாளடைவில் முருகப்பெருமானுக்கு மலைமேல் சந்நிதி இருப்பதை அறிந்த பலரும் அங்கு சென்று பாலமுருகன் என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தனர் பாலமுருகனின் அருட்திறத்தால் அநேகர் பலனடைய, அவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பணிக்குழு அமைத்து புதிய கோவிலைக் கட்டி தற்போதுள்ள சிலையை 1977-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.
தல அமைப்பு:
மேட்டுப்பாளையம்-சிறுமுகை பிரதான சாலையில், அழகிய தோரணவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விநாயகர் மற்றும் வீரமாத்தி அம்மன் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர். அதனைத் தொடர்ந்து சற்று தூரம் நடந்தால் நான்கு சக்கர வாகனம் செல்ல வழியும், படிக்கட்டு வழியும் துவங்குகின்றன. மலை உச்சியில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் கொண்டு மேற்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் விநாயகர் வீற்றிருக்க, கோவிலின் எதிரே மயில் வாகனமும், அதையடுத்து கொடிமரமும் உள்ளது
கருவறையில் மூலவர் பாலமுருகனின் நின்ற கோல அழகு தரிசனம் கிட்டுகிறது. அழகு குமரன் கரங்களில் வேல், சேவற்கொடி ஏந்தி, தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வள்ளி-தெய்வானை சமேத முருகன் விசேஷ தினங்களில் தேரில் வலம் வருவது சிறப்பு.
திருவிழா:
சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, கிருத்திகை, தைப்பூசம் (7 நாள்) & முருகனின் விசேஷ நாட்கள் மட்டுமே கோவில் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள்
பிரார்த்தனை:
7 செவ்வாய் தொடர்ந்து வழிபாடு - குடும்பத்தில் அமைதி நிலவ, எதிரிகள் தொல்லை நீங்க, தொழில் சிறக்க, நினைத்த காரியம் கைகூட
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் (செவ்வாய்/சனி/கிருத்திகை/விசேஷ தினங்கள்)
திறக்கும் நேரம்:
காலை 10.30-12 (செவ்வாய், சனி மட்டும்)
காலை 10-3 (கிருத்திகை நாட்களில் மட்டும்)
நினைத்த காரியங்கள் கைகூட செவ்வாய்/சனி/கிருத்திகை தினங்களில் மனமார கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகனை வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - நினைத்த காரியங்கள் கைகூட அருளுகின்ற கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகன்
படம் 2 - சனி & செவ்வாய் தினங்கள் மட்டுமே காட்சி அளித்து அருளுகின்ற கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகன் கோவில்
Comments
Post a Comment