கோவில் 262 - நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில்

 🙏🙏                                                                                                                                           தினம் ஒரு முருகன் ஆலயம்-262

தவ யோக முனிவர்கள் வாழ்ந்த புண்ணியத்தலம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில்

25.2.2022 வெள்ளி

அருள்மிகு தத்தகிரி முருகன் திருக்கோவில்

சேந்தமங்கலம்-637409

நாமக்கல் மாவட்டம் 

இருப்பிடம்: நாமக்கல்லிருந்து 10 கிமீ 

மூலவர்: தத்தகிரி முருகன்


தலமகிமை:

நாமக்கல்லிருந்து 10 கிமீ-ல் ஒரு சிறிய மலையின் மீது சேந்தமங்கலம் தத்தகிரி முருகன்  கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயர் குகாலயம் அமைந்துள்ளது. பக்தி, தியானம் மூலமாக ஆத்மஞானம் பெற்ற பல முனிவர்கள், இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. 


இக்கோவிலின் குகாலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள் சந்நிதானம் உள்ளது. குகாலயத்திற்கு மேல் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் செய்யப்பட்டது. தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவப்பெருமான் உருவம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு பெற்றதாகும். 


ஆதியில் இத்தலம் தத்தகிரி தத்தாத்ரேயர் ஆலயம் என்றழைக்கப்பட்டது. இந்தக் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் பேர் வருவதற்காக சுவாமிகளின் சீடர் சக்தி வாய்ந்த முருகப்பெருமான் விக்கிரகம் பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் இக்கோவில் தத்தகிரி முருகன் கோவில் என்ற சிறப்புப் பெயர் பெற்றது. அதி தீவிர முருக பக்தரான திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்  இந்த கோவிலுக்கு அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து செல்வது வழக்கம். 


கோவிலில் ஆடிக்கிருத்திகை, தைப்பூசவிழா என்று அனைத்தும் கோலாகலமாக நடக்கும். அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபடுகின்றனர். மேலும், பால்குடம் மற்றும் காவடி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலை அடைகின்றனர். சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மாலையில் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு ஆங்கில மாதமும் கடைசி சனிக்கிழமையன்று சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனையும், ஒவ்வொரு மாதமும் முருகனுக்கு கிருத்திகை விழாவும், சிவனுக்கு பிரதோஷ வழிபாடும் நடந்து வருகிறது. .  


தல வரலாறு:

ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள், விழுப்புரம் மாவட்டத்தில் கல்பட்டு அக்ரஹாரத்தில் ராமசாமி சாஸ்திரி-ஜானகியம்மாள் தம்பதியினருக்கு 1817-ம் ஆண்டு 4வது மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே ஆத்மஞானம் பெறும் நோக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது. பின்னர் தஞ்சாவூர் அருகில் ஆடுதுறையில் காவிரி கரையில் தவம்புரிந்தார். திருவிடை மருதூரில் பள்ளிக்கல்வியை பயின்று, நாராயண சாஸ்திரி என்பவரிடம் வேதம் படித்தார். அதன் பிறகு காசி மாநகரில் சுமார் 3 ஆண்டுகள் தங்கியிருந்து, வேதங்களை பயின்றார். அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி, மதுரை மாநகரை சேர்ந்த சதாசிவ பிரேம்மானந்தர் மற்றும் நெரூரை அடைந்து ஜட்ஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.


பின்னர் திருவண்ணாமலை வழியாக சேந்தமங்கலம் குகாலயத்தை வந்தடைந்தார். சேந்தமங்கலம் குகாலயத்தில் தீவிர தவத்தில் இருந்து, சமுதாயம் உய்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு போதித்து வந்தார். சைவம், வைணவம் என்ற பேதங்களை போக்கும் விதமாக இந்த குகாலயத்தில் தத்தாத்ரேயர் [சிவன்+விஷ்ணூ+பிரம்மா] விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடக்க வைத்தார். குருவின் தீவிர சீடரான சாந்தானந்த சுவாமிகள், இக்கோவிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரியவேண்டும் என்ற நோக்கத்தில் குகாலயத்தில் தமிழ்க்கடவுளான முருகன் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தார்.அன்று முதல் இத்திருத்தலம் தத்தகிரி முருகன் குகாலயம் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இத்திருத்தலத்தில் ஆன்மீக பணியாற்றிய சாந்தானந்த சுவாமிகள் சபா மண்டபத்தை அமைத்தார்.


தல அமைப்பு:

சுமார் 60 படிகள் கொண்ட இக்கோவிலுக்குள் உள்ள சபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வன துர்க்கை ஆகிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். சபா மண்டபத்திற்கு வலப்புறம் குருநாதர் பல மாதங்கள் தவம் புரிந்த குகை உள்ளது. குகாலயத்திற்கு மேல் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் கோவில் உள்ளது. 


மூலஸ்தானத்தில், மூலவர் தத்தகிரி முருகப்பெருமான் 6 அடி உயரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றார். வலது கையில் ஞானத்தின் சின்னமான வேலுடனும், இடது கையை ஒய்யாரமாக இடுப்பின் மீது வைத்து புன்னகையுடன் அழகுற காட்சியளிக்கும் இந்த முருகனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். 


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை சோமவாரம், கிருத்திகை, பிரதோஷம்


பிரார்த்தனை:

அமைதி, சாந்தம், நேர்மறை எண்ணங்கள் உண்டாக, ஞானம் பெருக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், அன்னதானம், கிரிவலம்


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 5-7.30 


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகப்பெருமானை இந்த வெள்ளியன்று மனகண்ணால் தரிசித்தால், நமக்கு நேர்மறை எண்ணங்கள் உண்டாகி, மனம் அமைதி பெறும்!

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - நேர்மறை எண்ணங்களை உண்டாக்கி அருளும் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில்



படம் 2 - தவ யோகிகள், முனிவர்கள் சுவாமிகள் வாழ்ந்த புண்ணிய தலம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்