கோவில் 261 - ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-261
கல்வி, ஞானம், செல்வம் அள்ளி வழங்கும் ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோவில்
24.2.2022 வியாழன்
பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
கொருமடுவு
கெம்பநாயக்கன்பாளையம்-638503
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: சத்தியமங்கலத்திலிருந்து 15 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி
தலமகிமை:
முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்காவிலுள்ள கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவிலாகும். பழனியைப் போலவே முருகப்பெருமான் மேற்கு நோக்கிய அருளும் தலம். திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள முருகப்பெருமானை வணங்குகின்றனர். மூன்று கிருத்திகை தொடர்ந்து வேண்டினால் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம். இங்குள்ள தெய்வங்களுக்கு பக்தர்கள் தாங்களே நேரிடையாக பூப்போட்டு வணங்குவதும் இத்தலத்தின் சிறப்பு.
பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வரி அமர்வது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்துக்கு ஈசனுக்கு வலது பாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து வலது காலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்து அம்பாள் அமர்ந்திருப்பது எங்கும் காண முடியாத சிறப்பு.
இந்த கோவிலின் சிறப்பு. ஆண்டுக்கு ஒருமுறை, வைகாசி 26-ந் தேதி, இக்கோவிலில் ‘பார்வதி சுயம்வர யாகம்’ வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணமாகாத ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் செலுத்தி, வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.
இத்திருக்கோவிலில் ஆலமரத்தின் கீழ் தன் துணைவியை மடியில் அமர்த்தியபடி தெற்கு பார்த்து காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர்.. கல்வி ஞானம், திருமணம் நடக்க குருபலம், குடும்ப ஒற்றுமை, மன அமைதி கிடைக்க, செழிக்க தொழில்வளம், நடைபெற இங்குள்ள தட்சிணாமூரத்தியை வழிபடுகின்றனர். சத்தியமங்கலம் மலைவாழ் மக்களின் அபிமான தெய்வம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக இத்தலம் விளங்குகிறது.
தல வரலாறு:
முன்பொரு காலத்தில் குப்பண்ண கவுண்டர் எனும் விவசாயி கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘குப்பண்ணா, இந்த ஊரின் வடபகுதியில் ஊஞ்ச மரங்கள் நிறைந்த கானகத்தில் எனது கால்பட்ட இடம் உள்ளது. அவ்விடத்தில் நான் குடிகொண்டு அருள்பாலிக்க உள்ளேன். அந்த இடத்தில் எனக்கொரு ஆலயம் எழுப்பு’’ என்றும் கூறி மறைந்து விட்டார்.
முருகப்பெருமான் சொன்னபடி ஊஞ்ச மரங்கள் நிறைந்த கொருமடுவு எனும் பகுதியை அடைந்து, அங்கிருந்த மரம், செடி, கொடிகள் அனைத்தையும் சீராக்கி, மேடு பள்ளங்களைச் சமன் செய்து, ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கினார். தேவையான மரங்களையும், சட்டம், விட்டம் போன்றவற்றை செய்வதற்கான உரிய மரங்களையும் தங்களுடைய பட்டா நிலத்தில் இருந்து தருவதாக குத்தியாலத்தூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிப்பாளயம் தாசமாதப்பா என்பவரும், ஜடையருந்தே கவுண்டர் என்பவரும் கூறினர். குப்பண்ண கவுண்டர் அவற்றை பெற்று இந்த சிறப்பு மிக்க ஆலயத்தை எழுப்பினார்.
தல அமைப்பு:
கோவிலினுள், கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி, மேலும் சிவன், பார்வதி, ஏகபாத மூர்த்தி, , காலபைரவர், நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் கிழக்கு பார்த்த சந்நிதியில் சேவை சாதிக்கின்றனர். குலதெய்வமான செல்வநாயகிக்குத் தனி சந்நிதி உள்ளது. கல்லால மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தி தந்து துணவியாருடன் தென்முகமாக அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு.
கருவறையில் இரண்டடி உயரத்தில் வலது கையால் தண்டம் ஊன்றி, இடது கையை இடுப்பில் வைத்து அருளாசி வழங்கும் கோலம், நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பதற்கு இவர் சாட்சியாக விளங்குகிறார். பழனி தண்டாயுதபாணியை நினைவுபடுத்தும் கோலத்தில் காட்சி தருகிறார், இத்திருத்தலத்து பாலதண்டாயுதபாணி.
திருவிழா:
பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம்
பிரார்த்தனை:
கல்வி ஞானம், திருமணம் நடக்க குருபலம், குழந்தைப்பேறு, குடும்ப ஒற்றுமை, மன அமைதி கிடைக்க, செழிக்க தொழில்வளம், நடைபெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 3.30-7.30
மூன்று கிருத்திகை வேண்டினால் திருமண வரமருளும் ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணியை தொழுது எல்லா பலன்களும் அடைவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கல்வி, ஞானம் செல்வம் அள்ளி வழங்கும் ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி
படம் 2 - மூன்று கிருத்திகை வேண்டினால் திருமண வரமருளும் ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி
Comments
Post a Comment