கோவில் 603 - கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-603
இன்று (1.2.2023) கும்பாபிஷேகம் காணும் சித்தர்கள் வழிபட்ட பழனிக்கு இணையான கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவர் கோவில்
1.2.2023 புதன்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில்
சாலையூர்-641697
பொகளூர் PO
அன்னூர் வட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: அன்னூர் 9 கிமீ கோயம்புத்தூர் 34 கிமீ
செல்: கோவில் ஐயர் சரவணகுமார் 98652 60373/ மனோகர் 98422 64527
மூலவர்: பழனியாண்டவர்
தீர்த்தம்: சுணை
தல விருட்சம்: வன்னி மரம்
தலமகிமை:
சித்தர்கள் வழிபட்ட பழனிக்கு இணையான சாலையூர் பழனியாண்டவர் கோவில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் பொகளூர் PO அருகில் இருக்கும் சாலையூரில் உள்ள ஒரு சிறிய குன்றில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு இன்று (1.2.2023) புதன் காலை 9-10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பழனிக்கு இணையான கோவில் என்று சிறப்பாக அழைக்கப்பெறும் இந்த கோவில் மூலவர் பழனியாண்டவரும் (சுயம்புவாக) மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். பழனி கும்பாபிஷேத்திற்கு செல்ல இயலாத முருக பக்தர்கள் இன்று நடைபெற இருக்கும் இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அனைத்து புண்ணியங்களையும் பெறலாம் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
சித்தர்கள் வழிபட்ட பெருமையுடைய சாலையூர் பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பல கோடி ரூபாய் செலவில் புதிதாக கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. 108 வகையான காய், கனி, கிழங்கு மற்றும் மூலிகை பொருட்கள் வேள்வி குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பேரொளி வழிபாடு நடந்தது. அன்று காலையில் கங்காதர தேசிகரின் திருமுறை கச்சேரியும், மாலையில் சற்குண ஓதுவாரின் திருப்புகழ் கச்சேரியும் நடந்தது. செவ்வாயன்று காலை பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதலும், சண்முகமாலை கச்சேரியும், மாலையில் அனுபூதி கச்சேரியும், இரவு பழனியாண்டவருக்கு எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. இன்று (1.2.2023 புதன்) காலை 6:30 மணிக்கு விநாயகர், கதிர்காமவேல், சித்தர்கள் கோவில்களுக்கு கும்பாபிஷேகமும், காலை 9:45 மணிக்கு விமான கலசத்திற்கும், மூலவரான பழனி ஆண்டவருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து தேச மங்கையர்க்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. மாலையில் வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் திருநாட்களில் அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. கருவறைக்கு முன் வன்னி மரம் தல விருட்சமாக வீற்றுள்ளது. ஆற்றல் மிக்க இம்மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வோருக்கு எண்ணியது நிறைவேறுகிறது. இம்மரத்தை குறிப்பிட்ட எண்களில் சுற்றுவோருக்கு வேண்டிய பலன் ஏற்படுகிறது. இங்குள்ள வற்றாத சுனை தீர்த்த நீர் மூலவர் அபிஷேத்துக்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. இந்த தீர்த்தம் பருகுவோருக்கு தீராத நோய்கள் தீரும்.
தல வரலாறு:
2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் உள்ள சுயம்பு பழனியாண்டவரை சித்தர்கள் வழிபட்டார்கள் என்பது வரலாறு. பஞ்ச பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சென்றதாகவும், கல்வெட்டுகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். தற்போது இக்கோவில் புனரமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் [காலை 9-10.30] நடைபெறுகிறது.
தல அமைப்பு:
சாலையூர் குன்றின் அடிவாரத்தில் பழனியை போன்றே பாத விநாயகர் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்கின்றார். 30-40 படிகள் உள்ள கோவிலுக்கு செல்லும் இடையில் இடும்பன் சந்நிதி உள்ளது. அருகில் கடம்பன், சுயம்பு கணபதி, அம்மன், கருப்பராயன் முதலிய தெய்வங்கள் அருள்கின்றனர். கோவில் கருவறையில் உள்ள மூலவர் பழனியாண்டவர், பழனி முருகனைப்போல நின்ற கோலத்தில் அள்ளி வழங்கும் வள்ளலாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் மகா கணபதி, கதிர்காம வேல் சிவன், பார்வதி, கன்னிகா பரமேஸ்வரி, கருப்பராயன், அருணகிரி முதலிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். பல்வேறு சித்தர்கள், மகான்கள் வழிபட்ட இத்தலத்தில் முருகபெருமான் திருவருளால் அகத்தியர், போகர், புலிப்பாணி சித்தர். கருவூரார் உட்பட 18 சித்தர்களுக்கு தனித்தனி சந்நிதிகள் கட்டப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
தொழில் ஸ்தாபனங்கள் மேம்பட, நோய்கள் குணமாக, திருமணத்தடை அகல, சந்தான பாக்கியம் வேண்டி, கல்வி, ஞானம், செல்வம் பெருக
நேர்த்திக்கடன்:
பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, முடிகாணிக்கை, மடிப்பிச்சை, அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தொழில் ஸ்தாபனங்கள் மேம்பட அருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவரை தரிசித்து நற்பலன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 603 இன்று (1.2.2023) கும்பாபிஷேகம் காணும் சித்தர்கள் வழிபட்ட பழனிக்கு இணையான கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவர் கோவில்
படம் 2 - 603 தொழில் ஸ்தாபனங்கள் மேம்பட அருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சாலையூர் பழனியாண்டவர் (பழனிக்கு இணையான கோவில்)
Comments
Post a Comment