கோவில் 237 - மும்பை திருச்செம்பூர் முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-237
தை அமாவாசையன்று நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும், 7-ம் படை வீடு என அழைக்கப்படும் மகாராஷ்டிரா மும்பை திருச்செம்பூர் முருகன் கோவில்
31.01.2022 திங்கள்
அருள்மிகு திருச்செம்பூர் முருகன் திருக்கோவில்
சேடா நகர்
செம்பூர்
மும்பை-400089
மகாராஷ்டிரா
இருப்பிடம்: மும்பை தாதர் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 9.5 கிமீ
மூலவர்: சுப்ரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
திருச்செம்பூர் முருகன் கோவில் மும்பையின் வடகிழக்கு புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள சேடா நகரில் 2300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானை தரிசிப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்களும், மன அமைதியும், புத்துணர்ச்சிகளும் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
பாரம்பரியமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காத்திகேயரின் தலங்கள் மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. அதே போல் இங்கும் முருகப்பெருமானின் கோவில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவில், மும்பை வாழ் தமிழர்களால் 7-ம் படை வீடு என்றழைக்கப்படுகிறது.
முருகப்பெருமானுக்கு தங்க ரதம் 1995-96-ல் அர்ப்பணிக்கப்பட்டது. 14.5 அடி உயரமுள்ள தேர், மரத்தடியில் செப்புத் தகடுகளில் பதிக்கப்பட்ட 8 கிலோ தங்கத்தால் ஆனது. ஒவ்வொரு கிருத்திகை நாளிலும் தேரில் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். 2000-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது கும்பாபிஷேகத்தின் போது, முருகப்பெருமானுக்கு வைரவேல் செய்யப்பட்டது. 4 அடி வைர வேல் 51 கேரட் வெள்ளை வைரங்களால் ஆனது, தங்கத் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பலமுறை சொற்பொழிவாற்றி இக்கோவில் திருப்பணிக்கு பெரும் பணம் ஈட்டி தந்தார் என்பது சிறப்பு. மேலும், சிருங்கேரி சாரதா பீடம், துவாரகா பீடம் ஆச்சாரியர்கள், அமிர்தானந்தமாயி அம்மா மற்றும் பல பெரியோர்கள் இங்கு வந்திருந்து கோவிலை புனிதப்படுத்தி பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்தனர்.
ஆண்டு முழுவதும் பல்வேறு கோயில் திருவிழாக்கள் இங்கு தொடர்ந்து நடைபெறுகின்றன. பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பாயசம் மற்றும் பிரசாதங்கள் விநியோகிக்கப்படுகிறது. நியாயமான வாடகையில் மிக அழகிய திருமண மண்டபங்கள் உள்ளன, பல்வேறு வகுப்புகள், நடனம், சங்கீதம், கச்சேரி, சொற்பொழிவுகள் நடைபெறுவது சிறப்பு, மகா சிவராத்திரி சமயத்தில் 15 நாட்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுவது மும்பைக்கே தனி சிறப்பு.
தலவரலாறு:
மும்பை வாழ் தமிழர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் சேர்ந்து தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில் போல, மும்பையிலுள்ள செம்பூரில் முருகனுக்கு கோவில் எழுப்பினார்கள் இக்கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம், காஞ்சி மகாப்பெரியவரின் அனுமதி மற்றும் அருளாசியுடன் 24 ஜனவரி 1980 அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் புனித ஜகத்குரு சங்கராச்சாரியார், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது., இதற்காக முதன்முறையாக பாத யாத்திரை மூலம் மும்பைக்கு வருகை தந்தார். 1991-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஜீரணார்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு ஸ்வர்ணபந்தனம் மற்றும் துவஜஸ்தம்பம் தங்க முலாம் பூசப்பட்டது.
தல அமைப்பு:
இத்திருத்தலத்திற்கு செல்ல 108 படிகள் உள்ளது. மின்தூக்கி (Lift) வசதியும் உள்ளது. ராஜகோபுரம் 26 அடி உயரத்துடன் அழகாக அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் கம்பீரமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளுகின்றார்.
மூலஸ்தானத்தில், முருகப்பெருமான் 4.5 அடி உயரத்தில் சுப்ரமணியராக [மயிலத்தில் செய்யப்பட்டது] காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தேவியர் வள்ளி, தெய்வானை உடனிருந்து அருளுகின்றனர். மேலும் இங்கு தர்மசாஸ்தா, குருவாயூரப்பன், ஆஞ்சநேயர், சிவன் மற்றும் துர்க்கை, நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் வீற்றிருந்து அருளுகின்றனர். பஞ்சலோகத்தினாலான உற்சவர் சிலை சுவாமிமலையிலிருந்து தருவிக்கப்பட்டது
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், அனைத்து கிருத்திகை (தங்கத்தேர்), பிரதோஷம்,
பிரார்த்தனை:
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, மன அமைதி உண்டாக
நேர்த்திக்கடன்:
திருக்கல்யாணம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-11 மாலை 5-9
இன்று மும்பை திருச்செம்பூர் முருகன் மனமாற வேண்டினால் மன அமைதி உண்டாகும். ! .
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும், 7-ம் படை வீட்டு மும்பை திருச்செம்பூர் முருகன்
படம் 2 - மன அமைதி தந்தருளும் மும்பை திருச்செம்பூர் முருகன்
Comments
Post a Comment