கோவில் 235 - மத்திய பிரதேசம் குவாலியர் ஜிவாஜி கஞ்ச் கார்த்திகேயர் கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-235

வருடத்திற்கு ஒரு முறை கார்த்திக் பூர்ணிமா அன்று மட்டுமே திறக்கும் முருகனின் அதிசய தலம் மத்திய பிரதேசம் குவாலியர் ஜிவாஜி கஞ்ச் கார்த்திகேயர் கோவில்

29.01.2022 சனி 

அருள்மிகு கார்த்திகேயர் திருக்கோவில்

ஜிவாஜி கஞ்ச்-474001 

குவாலியர்

மத்திய பிரதேசம் 

இருப்பிடம்: குவாலியரிலிருந்து கோவில் 5 கிமீ 

மூலவர்: கார்த்திகேயர்


தலமகிமை:

இந்த அரிய திருத்தலம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் ஜிவாஜி கஞ்ச் என்னுமிடத்தில் கார்த்திகேயர் திருகோவில் என்ற நாமத்துடன் அமைந்துள்ளது. மிகப் பழமையான இந்த திருக்கோவில் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே, அதாவது கார்த்திகை மாத பவுர்ணமி அன்று மட்டுமே திறந்திருக்கும். பல்லாயிர கணக்கான பக்தர்கள் அன்று சுப்ரமணிய பகவானை தரிசிக்க வருவார்கள். மற்ற நாட்களில் கோவில் மூடியே இருக்கும் என்பது நம் அனைவருக்கும் அரிய தகவல்.


கடந்த 2021-ம் வருடம் நவம்பர் 19-ம் தேதி கார்த்திகை பவுர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் கார்த்திகேயர் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். இந்த வருடம் (2022) டிசம்பர் 7-ம் தேதி கார்த்திகை பவுர்ணமி திதியுடன், திருக்கார்த்திகை திருநாளும் சேர்ந்து வருகின்றது. அந்த நாளில் இந்த திருமுருகனின் காட்சியை நேரில் தரிசிக்க, எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள் நமக்கு கிட்டட்டும்.


கார்த்திகேயர் கோவிலின் கதவுகள் கார்த்திகை பவுர்ணமி நள்ளிரவு திறக்கப்படும்.  ஒரு வருடம் மூடப்பட்ட கோவிலை முதலில் சுத்தம் செய்து நீரால் கழுவ வேண்டும். அதன் பிறகு, கார்த்திகேய பகவானை நீராடி, அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.  பின்பு பொது பக்தர்களுக்காக கோயில் கதவுகள் திறக்கப்படும். பக்தர்கள் இந்த நாளில் கார்த்திகேய பகவானுக்கு பிரசாதம் வழங்குவதன் மூலம் தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பிக்கின்றனர்.  இந்த நாளில் வேண்டுவோரின் வேண்டுதல் நிறைவேறுவதாக ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அடுத்த ஆண்டு கார்த்திகை பூர்ணிமாவில் தரிசனம் செய்ய மீண்டும் வருகிறார்கள்..


தலவரலாறு:

சிவப்பெருமான் மற்றும் அன்னை பார்வதி அவர்களின் இரண்டு மைந்தர்களான விநாயகர் மற்றும் கார்த்திகேயா இடையே ஈசன் ஒரு போட்டியை நடத்தினார். இதில், மூவுலகையும் வலம் வந்து பெற்றோரிடம் யார் முதலில் வருகிறாரோ, அவரே முதலில் வணங்கப்படுவார்.  போட்டி தொடங்கியதும், மூன்று உலகங்களையும் உள்ளடக்கியதால், விநாயகப் பெருமான் பெற்றோரை வலம் வந்தார். அவரது ஞானத்தில் மகிழ்ந்த சிவப்பெருமான், அனைத்து தெய்வங்களுக்கும் முன்பாக அவரை வணங்க வேண்டும் என்று ஆசீர்வதித்தார். மூன்று உலகங்களையும் சுற்றிவிட்டு திரும்பிய கார்த்திகேயர், அண்ணன் விநாயகர் போற்றப்படுவதைக் கண்டார். . இதைக் கண்டு மிகவும் கோபமடைந்த கார்த்திகேயன், தன்னைக் காணும் பெண்கள் விதவையாகிவிடுவார்கள் என்று சாபமிட்டு குகையில் அடைந்துக் கொண்டார். அவர்களைப் பார்க்கும் மனிதர்களுக்கும், ஏழு பிறவிகளும் நரகத்தை அனுபவிப்பார்கள் என்றும் சாபமிட்டார். இந்த சாபத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவப்பெருமான், கார்த்திகேயனிடம் விளக்கினார், பின்னர் அவரது கோபம் தணிந்தது. கார்த்திகேயனின் பிறந்தநாளில் அதாவது கார்த்திகைப் பூர்ணிமா அன்று (வட நாட்டில் நம்பிக்கை) தரிசிக்கலாம் என்று சிவப்பெருமான் வரம் அளித்தார், இந்த நாளில் அவரை வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. அதனால்தான் கார்த்திகேயர் கோவிலின் கதவுகள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது.


தல அமைப்பு:

கருவறையில், கார்த்திகேய பகவான், ஆறுமுகமாக மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.    கோவில் வளாகத்தில், ஆஞ்சநேயர், கங்கா, யமுனா, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி நாராயணன் கோவில்களும் உள்ளன.  கார்த்திகேயரைத் தவிர, பிற தெய்வங்களின் ஆசிகளை பெற, பக்தர்கள் தினமும் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள், கார்த்திகேயர் கோவிலின் கதவுகள் ஒரு வருடத்தில் கார்த்திகை பௌர்ணமி ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். இந்நாளில் ஆயிர கணக்கான பக்தர்கள் கார்த்திகைப் பெருமானை தரிசனம் செய்வார்கள். கார்த்திகேயர் கோவிலின் கதவுகளை மூடுவதற்கு முன், அன்னகூத்து சமர்ப்பித்து, 365 தீபங்களால் ஆரத்தி செய்யப்படுகின்றது.


திருவிழா:

கார்த்திகை பவுர்ணமி


பிரார்த்தனை:

விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற


திறக்கும் நேரம்:

கார்த்திகேயர் கோவில் கார்த்திகை மாத பவுர்ணமியன்று ஒரு நாள் மட்டும் 


மத்திய பிரதேசம் குவாலியர் ஜிவாஜி கஞ்ச் கார்த்திகேயர் கார்த்திகை பவுர்ணமி அன்று ஒரு நாள் மட்டுமே காட்சி அளித்து அருளுவார். நாமும் வணங்கி பயனடைவோம்! .

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - விருப்பங்களை நிறைவேற்றும் மத்திய பிரதேசம் குவாலியர் ஜிவாஜி கஞ்ச் கார்த்திகேயர்


படம் 2 - வருடத்திற்கு ஒரு முறை கார்த்திகை பவுர்ணமி அன்று மட்டுமே அருள் தரும் மத்திய பிரதேசம் குவாலியர் ஜிவாஜி கஞ்ச் கார்த்திகேயர் பகவான்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்