கோவில் 233 - இமாச்சலப் பிரதேசம் குக்டி சுவாமி கார்த்திகேயா கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-233
இமயமலையில் விவசாயம் செழிக்க அருளும் இமாச்சலப் பிரதேசம் குக்டி சுவாமி கார்த்திகேயா கோவில்
27.01.2022 வியாழன்
அருள்மிகு சுவாமி கார்த்திகேயா
குக்டி-176315
பார்மூர் தாலூகா
சம்பா மாவட்டம்
இமாச்சலப் பிரதேசம்
இருப்பிடம்: பார்மூர்-கோவில் 24 கிமீ
மூலவர்: சுவாமி கார்த்திகேயா
தலமகிமை:
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான். நம் முருகப்பெருமான் இமயமலையிலும் இருப்பது சிறப்புதானே. சுவாமி கார்த்திகேயா கோவில் இமாச்சலப் பிரதேசத்தின் பார்மூர் பகுதியில் உள்ள குக்டி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குக்டியில் இருந்து 4 கிமீ தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் கோவில் அமைந்துள்ளது. சுவாமி கார்த்திகேயாவை இங்கு கீலாங்/கெலாங் என்றும் அழைக்கிறார்கள்.
பதான்கோட், சம்பா, பார்மூர் வழியாக செல்லலாம். பதான்கோட்டில் இருந்து சம்பா (122 கி.மீ.), சம்பா முதல் பார்மூர் (65 கி.மீ.), பார்மூர் முதல் குக்தி (26 கிமீ) கார்த்திக் சுவாமி கோவிலுக்குச் செல்லலாம். கோவிலில் இருந்து பனி மூடிய மலைகள் மற்றும் பசுமையின் அழகிய காட்சிகளை காணலாம். கோவிலுக்கு செல்லும் வழியில் பல அழகான நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
கோடை மற்றும் இலையுதிர் மாதங்களில் [ஏப்ரல்-ஜூன், அக்டோபர்-நவம்பர்] மட்டுமே கோவில் திறக்கப்படும், மக்கள் கார்த்திகைப் பெருமானை தரிசனம் செய்வார்கள். குளிர் காலத்தில் இந்த இடத்தில் பனி அதிகமாக இருக்குமாதலால் கோவில் மூடியே இருக்கும். பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இந்த பாரம்பரியம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதி கார்த்திகை சுவாமி கோவிலின் கதவுகள் மூடப்படும். கதவுகளை மூடுவதற்கு முன், கோவிலின் கருவறையில் உள்ள சிலையின் முன் தண்ணீர் நிரப்பப்பட்ட கட்வி (கலம்) வைக்கப்படுகிறது. 136-வது நாளான ஏப்ரல் 14-ம் தேதி பைசாகி அன்று கோவில் கதவுகள் திறக்கப்படும். கலம் முழுவதுமாக தண்ணீரால் நிரம்பியே இருந்தால், அந்த ஆண்டில் நல்ல மழை மற்றும் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லையெனில் வறட்சி ஏற்படும் என்பர். செயற்கை கோள்கள் இல்லாமலே நம் முருகப்பெருமான் செய்யும் அதிசயம் இதுவாகும்.
தல அமைப்பு:
அழகிய இமயமலை பகுதியில் அமைந்தள்ள கோவிலின் முன் வேல் ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் சுவாமி கார்த்திகேயா நம் தண்டாயுதபாணி போன்றே ஒரு கையில் தண்டத்துடனும் மற்றொரு கையில் வேலுடனும் அழகுற காட்சி தந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாய். 6 முகங்கள் உடைய முருகன், நாகர் சிலை மற்றும் பிற தெய்வங்களும் அருளுகின்றனர். இக்கோவிலிக்கு மேல் முருகனின் சகோதரி என்றழைக்கப்படும் மராலி தேவி கோவில் உள்ளது சிறப்பு.
பிரார்த்தனை:
மழை வேண்டி. மகிழ்ச்சி வேண்டி, விவசாயம் செழிக்க
இமயமலையில் அருளும் இமாச்சலப் பிரதேசம் குக்டி சுவாமி கார்த்திகேயனை மனக்கண்ணால் தரிசித்தால், வாழ்வில் மகிழ்ச்சி அடைவது திண்ணம்! .
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - விவசாயம் செழிக்க அருளும் இமாச்சலப் பிரதேசம் குக்டி சுவாமி கார்த்திகேயா
படம் 2 - கண்ணைக் கவரும் இமயமலையில், பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி அருளும் இமாச்சலப் பிரதேசம் குக்டி சுவாமி கார்த்திகேயா கோவில்
Comments
Post a Comment