கோவில் 232 - ஹரியானா சண்டிகர் கார்த்திகேய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-232

பொன்னான புதனன்று என்ன வேண்டினாலும், தந்தருளும் ஹரியானா சண்டிகர் கார்த்திகேய சுவாமி கோவில்

26.01.2022 புதன்

அருள்மிகு கார்த்திகேய சுவாமி திருக்கோவில்

செக்டார் 31 D

சண்டிகர்-160031

ஹரியானா 

இருப்பிடம்: சண்டிகர் பேருந்து நிலையம் 6 கிமீ 


மூலவர்: கார்த்திகேய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ஹரியானா மாநிலம் தலைநகர் சண்டிகரில் சுமார் 50,000 தமிழ் மக்கள் உள்ளனர், 1980-களில், பஞ்சாப் தீவிரவாதம் தலையெடுத்தபோது, தீயப்போராளிகளிடம் இருந்து, தமிழ் கடவுள் முருகன் மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்று தமிழர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள், காஞ்சி பெரியவரின் அருளாசியுடன் எழுப்பப்பட்ட கார்த்திகேய சுவாமி கோவில், சண்டிகர் நகரத்தில் மிகவும் போற்றப்படும் கோவில்களில் ஒன்றாகும். தமிழர்களால் கட்டப்பட்ட திராவிட பாணி கோவிலில் சோழர் மற்றும் பல்லவ கட்டிடக்கலை கலவையான கோபுரம் உள்ளது. 


தமிழக முருகன் கோவில்களில் நடைபெறுவது போலவே. கார்த்திகேய சுவாமிக்கு:

அஸ்தோத்திரம் அர்ச்சனை, சஹஸ்ரநாம அர்ச்சனை, சங்கல்பம், ராகு கால பூஜை, விளக்கு பூஜை, நவக்கிரக பூஜை, குங்கும பூஜை முதலியவைகளும்,  சந்தன காப்பு, விபூதி அலங்காரம், மஞ்சள் காப்பு, வெண்ணைகாப்பு, வடைமாலை சாத்துதல், திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. 


கோவிலில் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. திருபுகழ் பாராயணம், நடனங்கள், இசை மற்றும் பஜனைகள் நடைபெறுகின்றன. கார்த்திகேய சுவாமி கோவிலுக்கருகில், ஐயப்பன் கோவில், வெங்கடேஸ்வர சுவாமி (பாலாஜி), மானசா தேவி கோவில், சண்டி தேவி கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களும் இருப்பது சிறப்பு.  


தலவரலாறு:

1980-களில் பஞ்சாபில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. எனவே சண்டிகர் நகர தமிழர்கள், தீவிரவாதிகளிடமிருந்து மக்களைக் காக்க, தீமையை எதிர்த்துப் போராடும் முருகப்பெருமானுக்கு கோவில் தேவை என்று உணர்ந்தனர். முதலில் ஒரு பீடத்தில் ஒரு வேல் அமைக்கப்பட்டது. முருகப்பெருமானுக்கு பிடித்தமான அருணகிரியாரின் திருப்புகழ் பஜனையை பாடி பக்தர்கள் வேள்வியை வழிபடத் தொடங்கினர். ஒரு குடும்பம் கூட பயந்து பாதுகாப்பான மாநிலங்களுக்கு மாறாமல் முருகப்பெருமான் காப்பாற்றுவார் என்று அனைவரும் உறுதியுடன் இருந்தார்கள். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை, போராளி இயக்கம் விரைவில் குறையத் தொடங்கியது. 1990 வாக்கில், முழு பிராந்தியமும் தீவிரவாதத்திலிருந்து விடுபட்டது.


அப்போது மக்கள் தங்கள் இறைவனுக்கு ஒரு முழுமையான கோவில் வேண்டும் என்று உணர்ந்தனர். கோவில் கட்டுவதற்குத் தேவையான கட்டிடக் கலைஞர், சிலைகள் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்வதற்காக சென்னையில் உள்ள மக்களை ஒருங்கிணைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஸ்தபதி ராஜகோபால் மற்றும் அவரது சீடர் ஸ்தபதி தியாகராஜன் ஆகியோர் கோவிலுக்கான வரைபடத்தை வரைந்து, சோழர் மற்றும் பல்லவர் கோபுரத்தின் கலவையுடன் திராவிடக் கோவில் கட்டிடக்கலையைப் பின்பற்றி கோவிலைக் கட்டினார்கள். காஞ்சி சங்கர மடத்தின் மஹா சுவாமிகள் முருகனுக்கு 'கார்த்திகேய சுவாமி' என்று பெயரிட்டது சிறப்பு. 1992-ல் கும்பாபிஷேகம் காஞ்சி சுவாமிகளின் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2002-ல் 2-வது கும்பாபிஷேகமும் சிறப்பாக நடந்தது.


தல அமைப்பு:

ஐந்து நிலை அழகிய ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நூற்றுகணக்கான சிலைகள் இருப்பது சிறப்பு. கருவறையில் கார்த்திகேய சுவாமி கம்பீரமாக நின்ற கோலத்தில், வள்ளி, தெய்வானை உடனிருக்க பக்தர்களுக்கு அருள்பாலிப்பது காணக் கண் கோடி வேண்டும். மேலும் விநாயகர், கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோரும் அருள்புரிவது சிறப்பு. மகாவிஷ்ணு, சிவன், கணபதி மற்றும் துர்க்கையின் அவதாரங்கள், புராணங்களின் காட்சிகளைக் குறிக்கும் வகையில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. 


திருவிழா:

தைப்பூசம், பொங்கல், பைசாகி, முருகனுக்குரிய அனைத்து விசேஷ தினங்கள், பிரதோஷம், ஏகாதசி பூஜை, வெள்ளி விளக்கு பூஜை, நவராத்திரி 


பிரார்த்தனை:

நினைத்தது நிறைவேற வேண்டி, மன அமைதி பெற 


நேர்த்திக்கடன்: 

பாலாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 7-1 மாலை 6-8 


நினைத்ததை நிறைவேற்றும் ஹரியானா சண்டிகர் கார்த்திகேய சுவாமி நெஞ்சம் நிறைய வணங்கி பலனடைவோம்!

 

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - என்ன வேண்டினாலும், தந்தருளும் ஹரியானா சண்டிகர் கார்த்திகேய சுவாமி



படம் 2 - நினைத்ததை நிறைவேற்றும் சண்டிகர் கார்த்திகேய சுவாமி




Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்