கோவில் 571 - இலங்கை கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏼🙏🏼                                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-571

தொழில் வளம் பெருக அருளும் இலங்கையின் திருச்செந்தூர் கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

31.12.2022 சனி

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி.திருக்கோவில்

ஜெயந்தி நகர்

ஜிந்துப்பிட்டி 

கொழும்பு-01300 

இலங்கை

இருப்பிடம்: கொழும்பு 3 கிமீ


மூலவர்: சிவசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான்

பழமை: 17-ம் நூற்றாண்டு


தலமகிமை:

அறுபடை வீடுகளில் ஒன்றான, அருணகிரி சுவாமிகளால் திருச்சீரலைவாய் என புகழ்ந்து பாடப்பட்ட திருச்செந்தூர் போலவே இலங்கை தலைநகர் கொழும்பு மாநகரில் (வடமேற்கு கடலோரம்) 3 கிமீ தொலைவில் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை போன்றே இங்கு அழகுடன் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கின்றார்.  


இந்த ஆலயத்தின் பழைய மூலவர் பஜனை மடத்தில் வைக்கப்பட்டு அருள்கின்றார். பழைய மூலவர் மற்றும் தற்போதைய மூலவரும் இருவரும் திருச்செந்தூர் மூலவரைப் போல குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றின் நடுவில் இருந்து பாறையில் இருந்து எடுக்கப்பட்ட கல்லிலிருந்து சுசீந்தீர சிற்பிகளால் செதுக்கப்பட்டவையாகும். தை முதல் நாளிலிருந்து 48 நாட்களுக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெற்று 48-வது நாளில் சஹஸ்ர சங்காபிஷேகம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி, ஆடி வேல் விழா சிறப்பாக நடைபெறுகின்றன. சண்முக விலாஸ், வள்ளி, தெய்வானை, கனகலிங்கம் என்று 3 திருமண மண்டபங்களில் ஆண்டு முழுவதும் திருமணங்கள் நடைபெறுகின்றன.      


திருப்புகழை தொகுத்து பரப்பிய வள்ளிமலை சுவாமிகள் வணங்கிய தலமிது. மதுரை சோமு, மாரியப்ப சுவாமிகள், சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணி அம்மாள், சூலமங்கல சகோதரிகள் போன்ற சிறந்த பாடகர்கள் டி.என்.ராஜரத்தினம், காருக்குறிச்சி அருணாசலம் போன்ற நாதஸ்வர வித்வான்களை அழைத்து வந்து ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததில் இலங்கையில் முன்னோடியாக திகழ்கிறது இந்த ஆலயம்.  


தல வரலாறு:

17-ம் நூற்றாண்டு காலங்களில் திருச்செந்தூரில் இருந்து சிந்து பாடிகள் என்னும் இனத்தவர்கள் இலங்கை கொழும்பு மாநகருக்கு குடியேறி முருகப்பெருமான் மீது இருக்கும அர்ப்பணிப்பால் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை நிர்மாணித்தனர். சிந்து பாடிகள் வாழும் பட்டி என்பதே மருவி ஜிந்துப்பிட்டி என்றழைக்கப்படுகிறது என்கிறது வரலாறு. இவர்களின் பூர்விகத் தொழில் பூக்கட்டுதல், காவடிக்கட்டுதல் மற்றும் சிந்து பாடி முருகப்பெருமானை தொழுவதாகும். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் சிந்து பாடிகள் இனம் அருகி விட்டதால், திருநெல்வேலியை சேர்ந்த தெட்சிண வேளாளர் மரபினர் இங்கு வந்து தெட்சிண வேளாளர் மகமை பரிபாலன சங்கம் ஏற்படுத்தி இவ்வாலயத்தின் பொறுப்பை ஏற்று பராமரித்து வருகின்றனர். மூன்று முறை கும்பாபிஷேகம் கண்ட இக்கோவிலுக்கு 1996-ல் வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. கோவிலின் கும்பாபிஷேக மலர் மற்றும் அனைத்து தலங்களின் முருகன் பாடல்களயும் தொகுத்து புத்தக வெளியீடுகள் நடந்தது கோவிலின் சிறப்பம்சமாகும். 2005-லும் 5-வது முறையாக கும்பாபிஷேகம் நடந்தது.            


தல அமைப்பு:

திருச்செந்தூர் திருக்கோவில் முறைகலை பின்பற்றியே இங்கும் பூஜைகளையும் விழாக்களையும் நடத்தி வருகின்றனர். கருவறையில் மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக பொலிவுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சோமாஸ்கந்த திருத்தலமாக வடபுறம் காசி விஸ்வநாதரும், இடப்புறம் விசாலாட்சி அம்மனும் அருள்பாலிக்கின்றனர்.


மேலும் சர்வ சித்தி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேங்கட வரதராஜர், நடராஜர், காளி, ராஜராஜேஸ்வர், லட்சுமி, சரஸ்வதி, பைரவர், மகா மேருவுடன் ஸ்வர்ண துர்க்காம்பிகை, ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் த்னை சந்நிதிகளில் அருள்கின்றனர். 

 

திருவிழா:

வைகாசி மஹோற்சவம், ஆடி வேல் விழா, நவராத்திரி, கந்த சஷ்டி (சூரசம்ஹாரம், திருக்கல்யாணம்), மார்கழி பூஜை, தை 48 நாட்கள் பூஜை, வரலட்சுமி பூஜை, பிரதோஷம், ஏகாதசி, சதுர்த்தி, சஷ்டி, மாதாந்திர பூஜைகள்


பிரார்த்தனை:

தொழில் வளம் பெருக, அஷ்ட ஐஸ்வர்யங்களை பெற, திருமணப்பேறு, குழந்தை வரம் வேண்டி 


நேர்த்திக்கடன்: 

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6 முதல் இரவு 7.30 வரை


அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளும் இலங்கை கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமியை மனக்கண்ணால் தரிசித்து நற்பலனடைவோம்! 


வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏼🙏🏼



படம் 1 - 571 தொழில் வளம் பெருக இலங்கையின் திருச்செந்தூர் கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி



படம் 2 - 571 அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும் இலங்கை கொழும்பு ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்