கோவில் 569 - சென்னை மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகவேள் கோவில்
🙏🏼🙏🏼 தினம் ஒரு முருகன் ஆலயம்-569
சகல சௌபாக்கியங்கள் அருளும் சென்னை மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகவேள் கோவில்
29.12.2022 வியாழன்
அருள்மிகு முத்தமிழ் முருகவேள்.திருக்கோவில்
சிந்து நகர்
மண்ணிவாக்கம்
சென்னை-600048
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: தாம்பரம் 7 கிமீ, சென்னை கோயம்பேடு 15 கிமீ
மூலவர்: முத்தமிழ் முருகவேள்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம்: அரசமரம்
தலமகிமை:
சென்னை பெருநகர பகுதியில் தாம்பரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் சகல சௌபாக்கியங்கள் அருளும் சென்னை மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகவேள் கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கோயம்பேட்டிலிருந்தும் 30 கிமீ பயணித்து இக்கோவிலுக்கு வரலாம்.
புகழ் பெற்ற மண்ணீஸ்வரர் கோவிலில் இருந்து 500 மீட்டர் அருகில் இருக்கும் இக்கோவிலில் முருகப்பெருமான், முத்தமிழ் முருகவேள் என்ற திருப்பெயரில் தேவியர்களுடன் அருள்கின்றார். இந்த அழகு குமரனை தரிசித்தவர்கள், திருச்செந்தூர் முருகனை தரிசித்தது போல உள்ளது என்று மெய்சிலிர்க்கின்றனர். சிந்து விநாயகர், சிந்து ஐயப்பன் கோவில்கள் உள்ளன, எனவே இக்கோவிலை சிந்து விநாயகர், முத்தமிழ் முருகவேள் கோவில், சிந்து ஐயப்பன் கோவில் என அழைக்கின்றனர்.
இக்கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, முருகனுக்குரிய திருவிழாக்கள், விநாயகர் சதுர்த்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி என அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், வைகாசி விசாகத்தின் போது பக்தர்கள் பால்குடம் என அனைத்து விழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
முருக பக்தர்களால் எழுப்பப்பட்ட கோவில் புனரமைக்கப்பட்டு சொர்ண ஆகர்ஷண பைரவரை பிரதிஷ்டை செய்து 7.6.2017-ல் குடமுழுக்கு நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
தல அமைப்பு:
கோவிலில் நுழைந்தவுடன் பிள்ளையார், சிந்து விநாயகர் என்ற திருப்பெயருடன் தனிக்கோவிலில் அருள்பாலிக்கின்றார்/ கோஷ்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே விஷ்ணு, வடக்கே விஷ்ணு துர்க்கை அருளுகின்றனர்
அடுத்து கோவில் கருவறையில் மூலவராக முத்தமிழ் முருகவேள் அழகிய தோற்றத்தில் வேல். சேவற்கொடி ஏந்தி மயில் பின் இருக்க வள்ளி தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் பக்த பெருமக்களுக்கு அருள்பாலிக்கின்றார். இந்த முருகப்பெருமானை வித விதமான அலங்காரத்தில் தரிசிப்பது மிகவும் பாக்கியம் என்கின்றனர். அடுத்து ஐயப்பன், சிந்து ஐயப்பன் என்ற திருநாமத்துடன் தனிக்கோவில் கொண்டு அருள்கின்றார். இவரின் அலங்காரம், வித விதமான வழிபாடுகள் விமரிசையாக நடக்கும். ஐயப்பன் பிரசாதம் பிரசித்தி பெற்றது.
அடுத்து ஆற்றல் மிக்க ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் அருள்கின்றார். சனிக்கிழமை விசஷ வழிபாடுகள் நடக்கின்றன. ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றுவது மிகவும் விசேஷம். மேலும் சிவபெருமான், சொர்ண ஆகர்ஷண பைரவர், அகத்திய பெருமான் அருள்கின்றனர். தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். நான்கு நாகர் சிலைகள் தல விருட்சமான அரசமரத்தடியில் வீற்றிருந்து அருள்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, பங்குனி உத்தரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி
பிரார்த்தனை:
சகல சௌபாக்கியங்கள் வேண்டி, மன அமைதி கிடைத்திட, நிம்மதி அருள, பொருள் வளம் சேர, கடன் தொல்லைகள் நீங்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன அமைதி தந்தருளும் சென்னை மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகவேளை முப்பொழுதும் தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏼🙏🏼
படம் 1 - 569 சகல சௌபாக்கியங்கள் அருளும் சென்னை மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகவேள்
படம் 2 - 569 மன அமைதி தந்தருளும் சென்னை மண்ணிவாக்கம் முத்தமிழ் முருகவேள்
Comments
Post a Comment