கோவில் 568 - சென்னை தண்டலம் 40 அடி உயர பாலமுருகன் கோவில்

 🙏🏼🙏🏼                                                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-568

கண்டதும் கவலையை போக்கும் ஷட்கோண (அறுகோணம்) பீடத்தில் வீற்றிருந்து அருளும் சென்னை தண்டலம் 40 அடி உயர பாலமுருகன் கோவில்

28.12.2022 புதன்

அருள்மிகு பாலமுருகன்.திருக்கோவில்

சவீதா மருத்துவமனை வளாகம்

தண்டலம்

சென்னை-602117

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு 15 கிமீ


மூலவர்: பாலமுருகன்

சிறப்பு: 180 டன் 40 அடி உயர முருகப்பெருமான்


தலமகிமை:

சென்னை தண்டலம் பகுதியில் அமைந்துள்ள சவீதா மருத்துவக்கல்லூரி மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகத்தில் ஒரே கருங்கல்லில் வடிக்கப்பட்ட 180 டன் 40 அடி உயர பிரமாண்ட பாலமுருகன் திருமேனி ஷட்கோண (அறுகோணம்) பீடத்தில் வீற்றிருந்து அருளுவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.


முருகப்பெருமானுக்கு மிக உகந்த தினமான தைப்பூச தினத்திலேயே (8.2.2020) பிரதிஷ்டைப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அறுகோண பீடத்தின் (நட்சத்திர வடிவம்) அடியில் தியான அறை ஒன்று கட்டப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு செய்தியாகும். இத்திருக்கோவிலின் அமைப்பு ஓம் வடிவில் உள்ளது மிக அழகு. முருகப்பெருமானுக்கு பிடித்த தினை லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. முருகப்பெருமானின் திருவிழாக்கள் மற்றும் இதர தெய்வங்களின் திருநாட்களும் சிறப்பாக நடத்தப்டுகின்றன.     

  

தல வரலாறு:

முருகப்பெருமானின் பிரமாண்டத் திருமேனி அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் பூஜைகள் செய்யப்பட்டுத் தொடங்கி 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்தத் திருமேனி 320 டன் எடை கொண்ட ஒரே கருங்கலில் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருங்கல் செங்கல்பட்டை அடுத்த சிறுதாமூர் மலையிலிருந்து எடுக்கப்பட்டது. செதுக்கப்பட்ட பின் பாலமுருகர் திருமேனி 180 டன் எடையுடன் அமைந்துள்ளது. இந்த அழகுத் திருமேனியை மகாபலிபுரம் பாஸ்கர் ஸ்தபதியும் அவரின் குழுவினரும் உருவாக்கியிருக்கிறார்கள். கும்பாபிஷேக வைபவம் தவத்திரு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் 31.3.2021-ல் வேதியர், ஆதினகர்த்தாக்கள், மகான்கள், முருக பக்தர்கள் அர்ப்பணிப்புடன் மிக விமரிசையாக நடைபெற்றது. கண்டதும் கவலையைப் போக்கும் காருண்ய மூர்த்தியாக பாலமுருகன் காட்சி அருள்கிறார்.


தல அமைப்பு:

சவீதா மருத்துவமனை வளாகத்தில் ஷட்கோண (அறுகோணம்) பீடம் அமைத்து ஒரே கல்லில் 40 அடி உயரத்தில் முருகப்பெருமான், பாலமுருகன் என்ற திருப்பெயருடன் பத்துமலை முருகன் போலவே பொலிவுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு சந்தோஷங்களை அள்ளி அருளி அருள்பாலிக்கின்றார். மேலும் 25 அடி உயரக் குன்றினை அமைத்துப் படிக்கட்டுகள் வைக்கப்பட்டு மேலே விநாயகர், சிவபெருமான் பார்வதி தேவி, விஷ்ணூ, தட்சிணாமூர்த்தி, தன்வந்த்ரி பகவான், ஹயக்க்ரீவர், செல்லியம்மன், சரஸ்வதி ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்கள் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர். அரசமரமும், வேப்பமரமும் பிணைந்து இருக்கும் நிலையில் பீடத்தில் விநாயகர், சப்தகன்னியர்கள், நாகராஜன் அருள்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்தரம், தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

கவலையை போக்க, சந்தோஷம் வேண்டி, கேட்டது கிடைக்க,


நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-11.30, மாலை 5-9


சந்தோஷத்தை அள்ளி அருளும் ஒற்றைக்கல்லால் ஆன 180 டன் 40 அடி உயர சென்னை தண்டலம் பாலமுருகனை திருப்பாதங்கள் பணிந்து வணங்குவோம்! 


வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏼🙏🏼



படம் 1 - 568 சந்தோஷத்தை அள்ளி அருளும் ஒற்றைக்கல்லால் ஆன 40 அடி 180 டன் 40 அடி உயர பாலமுருகன், தண்டலம், சென்னை



படம் 2 - 568 ஷட்கோண (ஆறுகோணம்) பீடத்தில் வீற்றிருந்து அருளும் அதிசய பாலமுருகன், தண்டலம், சென்னை


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்