கோவில் 205 - கேரளா கண்ணூர் பெரளச்சேரி சுப்ரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                                    தினம் ஒரு முருகன் ஆலயம்-205

சபலா ஏகாதசியன்று ராமபிரான் நிறுவிய கேரளா கண்ணூர் பெரளச்சேரி சுப்ரமணிய சுவாமி கோவில்

30.12.21 வியாழன்


அருள்மிகு பெரளச்சேரி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

முண்டலூர் PO-670622

கண்ணூர் மாவட்டம்

கேரளா

இருப்பிடம்: கண்ணூரிலிருந்து 14 கிமீ 

மூலவர்: சுப்ரமணிய சுவாமி (நாக வடிவில்)


தலமகிமை:

இராமனும், இலட்சுமணனும் சீதையை மீட்க இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கியதாகவும், ராமபிரானே  சுப்ரமணியர் சிலையை கண்ணூர் மாவட்டம் பெரளச்சேரியில் நிறுவியதாகவும்  வரலாறு. இக்கோவிலில் எங்கு பார்த்தாலும் வெண்கலம், செம்பாலான பாம்பு உருவங்கள் (நாகர்) உள்ளன. இக்கோவிலில் அழகிய செவ்வக வடிவ குளம் உள்ளது. இங்கு நீராடுவது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. 


இக்கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற நாகதோஷம் நிவர்த்தித்தலமாகும்.. இங்கு நாகதெய்வங்களுக்கு முட்டையை படைத்து வழிபடுவார்கள். நாகதோஷம் உள்ளவர்கள், இக்கோவிலில் தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்துக்கொண்டு தங்களுடைய தோஷத்தை போக்கி  வளமான வாழ்க்கையை வழங்கும்படி வேண்டிச்செல்கின்றனர்.


ஆலயத்தில் மலையாள மாதமான தனுர் மாதத்தில் (மார்கழி) ‘கொடியேற்றம் விழா’ எனப்படும் எட்டு நாள் திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கையர் கூத்து, கதகளி, பரயன் துள்ளல், ஓட்டன் துள்ளல் சீதாங்கன் துள்ளல் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைப்பெறுகின்றன.


தலபுராணம்:

முருகப்பெருமானை சிறுவன்தானே என்று நினைத்து பிரம்மன் மரியாதையின்றி நடத்தியதாலும், பிரம்மனுக்கு பிரணவ மந்திரம் தெரியாததாலும், முருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்தார். ஆகவே, பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால், முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால், முருகன் அந்தப் பாவத்திலிருந்து விடுபடுவதற்காகத் தந்தை சிவப்பெருமானின் அறிவுறுத்தலின்படி, நாகப்பாம்பாக உருவம் கொண்டு, பூமியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரியவெப்பம், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள் அவருக்குக் குடையாக நின்று அவரைக் காத்துக் கொண்டிருந்தன. தனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதிதேவி, சிவப்பெருமானிடம், முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார். சிவப்பெருமான் சொன்ன வழிமுறைகளின்படி, பார்வதிதேவி பதினெட்டு சஷ்டி விரதங்களை மேற்கொண்டு, கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.


திரேதாயுகத்தில், ராமபிரான் சீதையைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இடம் சுப்ரமணியர் கோவில் இருக்க வேண்டிய பகுதி என்பதை அறிந்தார். எனவே, சுப்ரமணியர் கோவில் அமைக்கத் திட்டமிட்ட அவர், அனுமனை இமயமலைக்குச் சென்று சுப்ரமணியர் சிலையைச் செய்து கொண்டு வரும்படி அனுப்பினார்.

ராமபிரான், சுப்ரமணியருக்குக் கோவிலமைத்துக் கும்பாபிஷேகம் செய்யத் குறிப்பிட்ட நாளுக்குள் அனுமன் வந்து சேராததால், ராமர் தன் கையில் அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துவிட்டார். அதனால், இந்தப்பகுதிக்கு இளவரசனின் (ராமனின்) வளையல் என்பதன் மலையாள சொல்லான ‘பெருவலா’ என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் இப்பெயர் பெரளச்சேரி என்று மருவியதாக சொல்லப்படுகிறது. 


தல அமைப்பு:

இங்கு சுப்ரமணியர் நாக வடிவில் இருந்ததால், இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருந்து அருள்பாலிக்கின்றார். ஆலய வளாகத்தில் பல இடங்களில் நாகர் கற்சிலைகளும் உள்ளன. ஐயப்பன் மற்றும் விநாயகர் ஆகியோரும் அருளுகின்றனர்.


இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள் ‘முட்ட ஒப்பிக்கல்’ எனப்படும் நடைமுறையினைப் பின்பற்றி, இங்குள்ள நாகதெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடுகின்றனர்.


கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில் வாழ்ந்த கிணறு என்று கருதப்படும் பெரிய படிக்கிணறு இருக்கிறது. இந்தப் படிக்கிணறை மலையாளத்தில் ‘சிரா’ என்றழைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள படிக்கிணற்றைப் போல் பெரியதாகவும், அதே கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையது. இக்கிணறு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.


திருவிழா:

அக்டோபரில் காவிரிச் சங்கமம் விழா, டிசம்பரில் கார்த்திகை உற்சவம், மார்கழி உற்சவம். பிரதி சஷ்டி, ஆயில்யம்


பிரார்த்தனை:

நாகதோஷம், பிற தோஷங்கள் நீங்க, வளமான வாழ்க்கை வேண்டி


நேர்த்திக்கடன்:

நாகதோஷ பரிகார பூஜை


திறக்கும் நேரம்:

காலை 4-12.30 மாலை 4.15-8


கேரளா கண்ணூர் பெரளச்சேரி சுப்ரமணிய சுவாமியை மனதார வேண்டுவோர்களின் நாகதோஷங்களை நீக்கியருளுவார்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - ராமபிரான் நிறுவிய, நாகதோஷம் நீக்கியருளும் கண்ணூர் மாவட்டம் பெரளச்சேரி சுப்ரமணிய சுவாமி கோவில்



படம் 2 - வளமான வாழ்க்கையை  அருளும் கண்ணூர் மாவட்டம் பெரளச்சேரி சுப்ரமணிய சுவாமி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்