கோவில் 204 - ஆலப்புழா தாளவாடி (சுப்ரமணியபுரம்) மஞ்ச் சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏
மறு பதிவு தினம் ஒரு முருகன் ஆலயம்-204
மன்ச் சாக்லேட் மாலையுடன் அருளும் ஆலப்புழா தாளவாடி (சுப்ரமணியபுரம்) மஞ்ச் சுப்ரமணிய சுவாமி கோவில்
29.12.21 புதன்
அருள்மிகு மஞ்ச் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
தாளவாடி சுப்ரமணியபுரம்
ஆலப்புழா-689572
கேரளா
இருப்பிடம்: ஆலப்புழாவிலிருந்து 4 கிமீ
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
தலமகிமை:
கேரள மாநிலம், ஆலப்புழா நகரின் புறநகர் பகுதியில் 4 கிமீ தொலைவில் உள்ள தாளவாடியில் (சுப்ரமணியபுரம்) 300 ஆண்டுகள் பழமையான பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது., பழனியில் முருகன் கோவிலுக்கு தெற்கு திசையில் அமைந்துள்ளதால் இந்த ஆலயத்தை உள்ளூர் மக்கள் தெக்கன் பழனி கோவில் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஐயப்பனுக்கு நெய், கிருஷ்ணருக்கு வெண்ணெய், விநாயகருக்கு கொழுக்கட்டை என்று இருப்பதுபோல் இங்குள்ள பாலமுருகனுக்கு (முருகனே ஒரு குழந்தை) மிகவும் பிடித்தமான பிரசாதமாக ‘மன்ச் சாக்லேட்’ பிரசித்தியாக உள்ளது.
எச்சில் பட்ட நாவல் பழத்தை ராமனும், வேடுவன் ருசிபார்த்த இறைச்சியை ஏற்றுக்கொண்ட சிவனையும் போல, இன்றைய நவீன உலகத்தில் மன்ச் சாக்லேட்டையும் பிரசாதமாய் ஏற்றுக்கொள்கிறார் முருகப்பெருமான். ரோஜா மாலை, மல்லிகைப்பூ மாலை அணிவித்து கடவுளை வழிபடுவார்கள். ஆனால் இக்கோவிலில் மஞ்ச் சாக்லேட் மாலை அணிவித்து முருகனை வழிபடுகின்றனர்
இந்த பாலமுருகன் ஆலயத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் பெட்டிப் பெட்டியாக ‘மஞ்ச்’ சாக்லேட்களை வாரிவந்து நேர்த்திக்கடனாக செலுத்தி செல்கின்றனர். மஞ்ச் சாக்லேட் மாலை கோவில் பக்கத்திலேயே கிடைக்கின்றது. பரீட்சை நேரங்களில் ‘மஞ்ச்’ சாக்லேட்களுடன் வந்து வேண்டுதல் செய்யும் மாணவ ,மாணவியர்களை அதிகமாக காணலாம். பலர் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறியமைக்காக எடைக்கு எடை ‘மஞ்ச் துலாபாரம்’ செலுத்தியும் தங்களது நன்றியறிதலை பாலமுருகனுக்கு செலுத்தி செல்கின்றனர்.
ஆலப்புழா மாவட்ட மக்களுடன், கேரள மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ‘மஞ்ச்’ சாக்லேட்களுடன் வந்து, படைத்து பாலமுருகனின் அருளை பெற்று செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள்,குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் மஞ்ச் சாக்லேட்களையே பிரசாதமாக பெற்று செல்கின்றனர்.
தலபுராணம்:
இந்த பாலமுருகன் ஆலய வளாகத்தில் எட்டாண்டுகளுக்கு முன்னர் விளையாடி கொண்டிருந்த ஒரு இஸ்லாமியர் குடும்பத்து ஆண் குழந்தை அங்குள்ள ஆலய மணியின் கயிற்றை பிடித்து, மணியை ஒலிக்க வைத்துள்ளது. இதைக்கண்டு பதறிப்போன பெற்றோர், குழந்தையை கண்டித்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அன்றிரவில் இருந்து கடுமையான காய்ச்சலுக்கு உள்ளான குழந்தை ‘முருகா, முருகா’ என்று தன்னையும் அறியாமல் முணுமுணுக்கத் தொடங்கவே, மறுநாள் குழந்தையின் பெற்றோர், இந்த கோயிலுக்கு வந்து பூசாரியிடம் நடந்த விபரத்தை கூறினர். எண்ணெயும், புஷ்பங்களும் பரிகாரமாக அளித்தால் நல்லது என்று பூசாரி அறிவுறுத்தினார். பெற்றோரும் குழந்தையுடன் சென்று அவ்வாறு செய்த வேளையில் கருவறைக்கு சென்ற குழந்தை தனது கையில் இருந்த ‘மஞ்ச்’ சாக்லேட்டை பாலமுருகனுக்கு அளித்து மகிழ்ந்தது. இதையடுத்து, குழந்தையை பீடித்திருந்த காய்ச்சல் உடனடியாக நீங்கவே, இந்த ஆலயத்தில் உள்ள முருகனுக்கு மிகவும் பிடித்த பிரசாதம் மஞ்ச் சாக்லேட்தான் என்ற செவிவழி செய்தி பரவ ஆரம்பித்தது.
தல அமைப்பு:
இத்திருத்தலக் கருவறையில் மூலவராக சுப்ரமணிய சுவாமி பாலமுருகன் (குழந்தை) அழகிய வடிவில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். அதுவும் சாக்லேட் மாலையுடன் முருகன் காட்சி தருவது கொள்ளை அழ்கு. பரிட்சை நேரத்தில் மாணவர்களும், மாணவிகளும் கூட்டம் கூட்டமாக சாக்லேட்களுடன் வந்து வேண்டிக் கொண்டு பலனடைந்து செல்வது சிறப்பு. இறைவனுக்கு படைத்த மன்ச் சாக்லேட்டை குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக கொடுப்பது சிறப்பு.
திருவிழா:
முருகனுக்குரிய விசேஷ தினங்கள்
பிரார்த்தனை:
கல்வி சிறக்க, ஞானம் பெருக, பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற
நேர்த்திக்கடன்:
மஞ்ச் மாலை, மஞ்ச் பார்கள், மஞ்ச் துலாபாரம் அளித்தல், விசேஷ பூஜை
திறக்கும் நேரம்:
காலை 4-12.30 மாலை 5-78
பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் மஞ்ச் சாக்லேட்டை பிரசாதமாக அருளும் ஆலப்புழா மஞ்ச் சுப்ரமணிய சுவாமி போற்றி வணங்கி நற்பயன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் மஞ்ச் சாக்லேட்டை பிரசாதமாக அருளும் ஆலப்புழா தாளவாடி மஞ்ச் சுப்ரமணிய சுவாமி
படம் 2 - மஞ்ச் சாக்லேட் துலாபாரம் அளிக்கப்படும் திருத்தலம் ஆலப்புழா தாளவாடி சுப்ரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment