கோவில் 201 - திருவாரூர் தியாகராஜர் கோவில் சண்முகர்

 🙏🙏                                                                                                                                                     

தினம் ஒரு முருகன் ஆலயம்-201

பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் சண்முகர் குடிகொண்டிருக்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில்

26.12.21 ஞாயிறு


அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்

திருவாரூர்-610001

திருவாரூர் மாவட்டம்

இருப்பிடம்: திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் 1.5 கிமீ


மூலவர்: தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்

அம்மன்: கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்

உற்சவர்: தியாகராஜர் (தியாகேசர்)

திருப்புகழ் நாயகன்: சண்முகர் 

தலவிருட்சம்: பாதிரிமரம்

தீர்த்தம்: கமலாலயம், சங்கு, கயா, வாணி தீர்த்தம்

பாடியவர்கள்: நால்வர், அருணகிரிநாதர் (7), பலர் 


தலமகிமை: (சில தேன் துளிகள்)

திருவாரூரில் பிறந்தாலே முக்தி நிச்சயம். தியாகேசரை கண்டால், திருவருள் கிட்டும். 

திருவாரூர் மையப் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜர் கோவிலில் வையம் சிறப்பித்த தியாகேசர், கமலாம்பிகை, விநாயகர், சண்முகர் அருளும் திருத்தலம். நால்வர் பாடல் பெற்ற இத்தலத்தில் அருணகிரி சுவாமிகள் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் மீது 7 பாடல்கள் மேவியுள்ளார்.


"ஆழித்தேர் வித்தகனை நான் கண்ட தாரூரே" என்பது அப்பர் வாக்கு. ஆசியாவிலயே மிகப் பெரிய தேர் திருவாரூர் ஆழித்தேர் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள். உள்ளூர், வெளியூர், வெளிமாநில, வெளிநாட்டு மக்கள் கூடுவது சிறப்பு. 


மாலை 6 மணி சாயரட்சை பூஜை நித்திய பிரதோஷம் (தினமும் பிரதோஷம்) இங்கு மட்டுமே என்பது சிறப்பு. 365 சிவலிங்கங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிப்பது எங்குமே இல்லாத சிறப்பு. 


தியாகராஜரின் வலப்பாதம் (இடப்பாதம் என்றும் மூடப்பட்டிருக்கும்) ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திர திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா சமயங்களில் தியாகேசர் மற்றும் கொண்டி அம்மை தத்தம் வலது பாதத்தை காட்டி அருளுவர். 


திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. மேலும் இதற்கு சான்றாக அப்பர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனப் குறிப்பிட்டுள்ளார்.


பஞ்சபூத தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர் திருக்கோவில். தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதாரத" தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி. தியாகேசர் சந்நிதியின் இரு புறமிருக்கும் திருச்சாலகம் மிகச்சிறப்புடையவை. பழங்காலத்தில் தேவசாயரட்சையின் போது இச்சாலகத்தின் ஊடாக புல்லாங்குழலும் வீணையும் வாசிக்கப்படும்.


நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம். 1.ஆதி சண்டிகேஸ்வரர்,  2.எம சண்டிகேஸ்வரர் என்று இரண்டு சண்டிகேஸ்வரர் அமைந்த சிறப்புத் திருத்தலம். இங்கு எல்லோருமே சிவகணங்கள். முக்தி தலமானதால் எமனுக்கு வேலை இல்லை. எமன் ஓடோடி சிவனை வேண்டி சண்டிகேஸ்வரர் பணியை பெற்று, .எம சண்டிகேஸ்வரர் (காக்குக் கடவுள்) ஆனார்.

திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். 


இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.


நட்பின் முக்கியத்தை உணர்த்த சுந்தரருக்காக பரவை நாச்சியாரிடம்  சிவனே தூது சென்று பெண் கேட்ட திருத்தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம். பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள், கமலை ஞானப்பிரகாசர் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. 


இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. கீழ் கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத்தலம். மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1.கமலாலயம்-5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2.சங்கு தீர்த்தம்(அமுததீர்த்தம்)-ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது. 3.கயா தீர்த்தம்-ஊருக்கு அப்பால் கேக்கரை என்ற இடத்தில் உள்ளது. 4.வாணி தீர்த்தம்(சரஸ்வதி தீர்த்தம்)-மேற்குப் பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.

தலவரலாறு:

ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?" என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.


தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான் அவற்றில், நிஜலிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.ம்இவை "சப்தவிடங்கத்தலங்கள்' எனப்படுகின்றன 'சப்தம்' என்றால் ஏழு திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்'. திருக்குவளையில் "அவனி விடங்கர், திருவாய்மூரில் "நீலவிடங்கர், வேதாரண்யத்தில் "புவனி விடங்கர், திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.


தல அமைப்பு:

இத்தலத்தில் மூலவர்களாக வான்மீகிநாதர்,  தியாகராஜர் என்று 2 சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். தியாகராஜர் யதாஸ்தானத்தில் தத்புருஷ முகமாக வீற்றிருக்கிறார். வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதால் சிவபெருமானை, அப்பர்  புற்றிடங்கொண்டார் என்றழைக்கிறார். அன்னையும் 2 சந்நிதிகளில் 1.கமலாம்பிகை, 2.நீலோத்பலாம்பாள் என்ற பெயர்களில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். ஹம்ச மந்திர தத்துவத்தோடு இணைந்தவர் இப்பெருமான். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டியம்மை எனப் பெயர். அனைத்து தெய்வங்களும் உப கோவில்களில் அமர்ந்து அருளுகின்றனர்.


நாயகன் சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் அம்சமாக தனி சந்நிதியில்  வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகனை வழிபட்டால் பகை விலகும், பகைவர்கள் ஓடி விடுவர். அருணகிரிநாதர் இத்தலத்து சண்முகரைப் போற்றி 7 திருப்புகழ் பாடியுள்ளார்.


திருவாரூர் முருகன் தலத்தில் எழுதப்பட்ட திருப்புகழ் பாடலில்

நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி

மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய்

வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா

ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.


.திருவிழா:

மார்கழி திருவாதிரை (தியாகேசர் பாதம் காணும் காட்சி), பங்குனி உத்திரம் (10 நாள்), ஆடிப்பூரம் (10 நாள்), மாசி மகம், சித்திரை விழா, பிரதோஷம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினங்கள், முருகனுக்குரிய நாட்கள்


பிரார்த்தனை:

பகை விலக (முருகர்), பதவி உயர்வு, பணி மாற்றம் (துர்க்கை), கல்வி, ஞானம் மேன்மை, திருமண வரம், குழந்தை வரம், உடற்பிணி தீர, வேலை/தொழில் விருத்தி, செல்வ செழிப்பு, ஆணவம் அகல, பிரிந்த தம்பதியர் சேர, கடன் தொல்லை தீர


நேர்த்திக்கடன்: 

சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், திருப்பணி காணிக்கை, முகுந்தார்ச்சனை


திறக்கும் நேரம்:

காலை 5-12 மாலை 49 


சர்வ தோஷ நிவர்த்தி தலமான திருவாரூரில் தியாகேசரையும் திருமுருகனையும் தரிசித்தால் எல்லா பலங்களும் கிட்டும் !


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - ஆசியாவிலேயே பெரிய ரதமான, ஆடி ஆடி வரும் ஆழித்தேரில் திருவாரூர் தியாகராஜ சுவாமி


படம் 2 - திருவாரூர் தியாகேசர் தலத்தில் முருகப்பெருமான் தேவியருடன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்