கோவில் 200 - கோட்டயம் கிடங்கூர் சுப்ரமணியர் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-200 துலாபாரம் நடைபெறும், பிரம்மச்சாரி கோலத்தில் முருகன் அருளுகின்ற கோட்டயம் கிடங்கூர் சுப்ரமணியர் கோவில்
25.12.21 சனி
முருகப்பெருமான் சிறப்புகள்:
தினமும் நாம் ஒரே ஒரு முறை ‘முருகா’ என்று சொன்னாலோ, மனதில் நினைத்தாலோ, அழகன் இருமுறை வந்து அருள்புரிவார். சிவப்பெருமானை (ஐந்து முகம்) நினைத்தால், அங்கே முருகப்பெருமான் (ஆறுமுகம்) வந்து அருள்பாலிப்பார். சிவன் அருள்பாலிக்கும் இடங்களிலெல்லாம், ஆறுமுகப்பெருமானும் நீக்கமற நிறைந்து அருளுவார். சிவப்பெருமானும், ஆறுமுகப்பெருமானும் ஒருவரே. யாமறிந்த கடவுள்களில், முருகப்பெருமான் ஒருவரே தகப்பன்சாமி என்று அழைக்கப்படுகிறார். மற்ற கடவுளர்கள், தீயோரை அடியோடு அழித்தொழிப்பர். நம் முருகன் மட்டுமே எதிரிகளை அழித்தொழிக்காமல், மன்னித்து தன் அருகிலேயே வைத்து அருளுவார்.
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.
சிவப்பெருமான், பெருமாள், பிரம்மா ஆகிய மூவரும் இணந்த வடிவமும், சக்தியும், அருளும், ஆற்றலும் உடையவர் முருகப்பெருமான். எனவே நம் ஆறுமுகனை வணங்கினாலே மும்மூர்த்திகளையும், முப்பெரும் தேவியர்களை (3+3) வணங்கிய பலன்களை பெறலாம். இவ்வளவு சிறப்பு மிக்க வேலவனை தொடர்ச்சியாக தினம் ஒரு ஆலயம் மற்றும் முருகப்பெருமானது மகிமை, வரலாறு, கோவில் அமைப்பு, விழாக்கள், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் என அனைத்தையும் அறிந்து வருகிறோம். கந்தனின் கருணையால், நாம் இன்று 200-வது கோவிலாக கோட்டயம் கிடங்கூர் சுப்ரமணியர் கோவிலை தரிசிக்க உள்ளோம். முருகனிருக்க பயமேன்!
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோவில்
கிடங்கூர்-686572
கோட்டயம் மாவட்டம்
கேரளா
இருப்பிடம்: கோட்டயம்-பாலா வழியில் கிடங்கூர் 20 கிமீ. தெற்கே 1 கிமீ-ல் கோவில்
மூலவர்: சுப்ரமணியர்
தீர்த்தம்: மீனாச்சில்
தலமகிமை:
இத்திருத்தலத்தில் சுப்ரமணியர் பிரம்மசாரியாக வீற்றிருப்பதால், வள்ளி, தெய்வானை இல்லை. எனவே முருகன் சந்நிதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சில தம்பதிகள், குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால், அவர்கள் தம்பதி சமேதராக முருகன் சந்நிதிக்குள் செல்ல முடியாது. ஆண்கள் மட்டும் சந்நிதிக்குள் வந்து வேண்டுகின்றனர். ஆனால், பெண்கள் கொடி மரம் அருகே நின்றுதான் குழந்தை வரம் கேட்க முடியும்.
துலாபரம் நடைபெறும் முருகன் கோவில் என்பதால் தனி சிறப்பு. இக்கோவிலில் மருத்துவக் குணங்கள் அதிகமுடைய ‘குறுந்தொட்டி’ எனப்படும் மரத்தைக் கொண்டு கூத்தம்பலம் என்ற மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் ராமாயணக் காட்சிகளும், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திர வடிவங்களும் இடம் பெற்றிருக்கின்றன. திருவிழாக் காலங்களில் இந்த மண்டபத்தில் வைத்து, பழமையான ‘கூடியாட்டம்’ எனும் கூத்து நடத்தப்படுகிறது. இக்கூத்தில் முருகனைப் பற்றி நடத்தப்படும், ‘பிரம்மச்சாரி கூத்து’ சிறப்பு பெற்றதாக இருக்கிறது.
இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி கும்பம்(மாசி) மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ‘திரு உற்சவம்’ என்று அழைக்கப்படும் இந்த ஆண்டுத் திருவிழா, 10 நாட்கள் வரை வெகு சிறப்பாக நடைபெறும். இவ்விழா நாட்களில் மலையாள மரபு வழி, கலை நிகழ்ச்சிகள் பலவும் நடத்தப்படுகின்றன.அதேப்போல விருச்சிகம்(கார்த்திகை) மாதத்தில் திருக்கார்த்திகைத் திருவிழாவும், மகரம்(தை) மாதத்தில் தைப்பூசத் திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இவை தவிர இத்தலத்தில் உள்ள மகாவிஷ்ணு சந்நிதியில் சிங்கம்(ஆவணி) மாதத்தில் வரும் அஷ்டமி மற்றும் ரோகிணி நட்சத்திர நாளில் ‘கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விருச்சிகம்(கார்த்திகை) முதல் நாள் தொடங்கி 41 நாள் இங்குள்ள சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை செய்யப்படுகிறது.
சிங்கம்(ஆவணி) மாதத்தில் உத்திராடம் நட்சத்திர நாளில் ‘புத்தரிசி நாள் விழா’வும், துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி விழாக்களும் சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன. இதில் விஜயதசமி நாளில் கல்விப் பயிலப்போகும் பிள்ளைகளுக்கு, ‘எழுத்து நிறுத்து விழா’ நடைபெறுவது சிறப்பம்சம்.
உடல் நலம் வேண்டுபவர்கள் சுப்ரமணியருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், திருமணத்தடை நீங்க வேண்டுபவர்கள் சுயம்வர அர்ச்சனை செய்தும் வேண்டிய பலன்களைப் பெறலாம். இங்குள்ள விஷ்ணு சந்நிதியில் பக்தர்கள் பால் பாயாசம், அப்பம் படைத்து விஷ்ணுவை வணங்கி வருகின்றனர். இங்குள்ள கூத்தம்பலத்தில் இருந்து அருளும் புவனேஷ்வரி அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குருதி பூஜை என்னும் சிறப்புப் பூஜை நடத்தப்படுகிறது. வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும், எதிரிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
தலவரலாறு:
ராவணனிடம் இருந்து சீதையை மீட்டுக் கொண்டு வரும் வழியில், தன்னைச் சந்திப்பதாகச் சொல்லிச் சென்ற ராமனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார், பிரம்மச்சாரியான கவுண முனிவர். ஆனால், ராமன் சீதையை மீட்டுக் கொண்டு திரும்பிய போது, அவரைச் சந்திக்காமலேயே சென்று விட்டார். ராமன் தன்னை மறந்து ஊர் திரும்பிச் சென்றதற்கு, அவரது இல்லற வாழ்க்கையே காரணமென்று நினைத்த கவுண முனிவர், ராமனிடம் தன்னுடைய வேண்டுதல் நிறைவேறாத நிலையில், தான் அதிகம் விரும்பும் கடவுளான முருகப்பெருமானிடம் தன் வேண்டுதலை முன்வைப்பதென்று முடிவு செய்தார்.
முருகப்பெருமானுக்கு கோவிலமைத்த கவுண முனிவரின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. ‘ஒரு மனைவியைக் கொண்டிருக்கும் ராமனே இல்லற வாழ்க்கைக்கிடையே நம்மை மறந்து விட்டாரே, இரண்டு மனைவிகளைக் கொண்ட குமரன் நமது வேண்டுதலைக் கவனிப்பாரோ, மாட்டாரோ’ என்று நினைத்தார். தன் மனதில் எழுந்த சந்தேகத்தின் காரணமாக, கவுண முனிவர் தான் வடித்த முருகனின் சிலையை பிரம்மச்சாரியாக வடித்து, கோவிலில் நிறுவி விட்டார் என்கிறது தல வரலாறு. இதனால் இத்தலத்தில் குடிகொண்டு அருள்பாலிக்கும் முருகப்பெருமான் ‘பிரம்மச்சாரி முருகன்’ என்றே அழைக்கப்படுகிறார்.
தல அமைப்பு:
இவ்வாலய கருவறையில், மூலவராக முருகன், சுப்ரமணியர் என்ற திருநாமத்துடன் பிரம்மச்சாரியாக நின்ற நிலையில் காட்சியளிக்கின்றார். இவர் ‘சுப்ரமணிய சுவாமி’, ‘கிடங்கூரப்பன், திரிகிடங்கூரப்பன், பரிகாபுரேசன்’ என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறார். முருகன் சந்நிதிக்கு எதிரே மேற்குப் பகுதியில் மயில் உருவத்துடன் கூடிய உயரமான கொடி மரம் மற்றும் பலிபீடம் அமைந்திருக்கிறது. கேரளக் கோவில்களில், இக்கோவில் கொடிமரமே மிகுந்த உயரமானது.
மகாவிஷ்ணு, சாஸ்தா சந்நிதிகளும் அமைந்துள்ளன. இங்குள்ள கூத்தம்பலத்தில் புவனேஸ்வரி அம்மன் இருந்து அருள் செய்கிறார்.
திருவிழா:
மாசி மாத கார்த்திகையில், கொடியேற்றி, உத்திரத்தில் ஆறாட்டு நடக்கும் வகையில் பிரம்மோற்சவம், தைப்பூசம், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி, மண்டல பூஜை, நவராத்திரி, செவ்வாய், வெள்ளி குருதி பூஜை
பிரார்த்தனை:
கல்வி, ஞானம் சிறக்க, குழந்தை வரம் வேண்டி (கணவன் மட்டும்), திருமணத் தடை நீங்க, உடல் நலம் வேண்டி, எதிரி தொல்லை தீர, வழக்குகளில் வெற்றி பெற
நேர்த்திக்கடன்:
துலாபாரம், காவடி எடுத்தல், சுட்டு விள்க்கு ஏற்றுதல், பால் பாயாசம், அப்பம் படைத்தல், முழு காப்பு, அபிஷேகம், அலங்காரம். பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 4-12 மாலை 5-8
குழந்தை வரம் அருளும் கோட்டயம் கிடங்கூர் சுப்ரமணியரை வணங்கினால் எல்லா நலன்களும் பெற்று உடல் நலத்துடன் வாழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 200 குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளில், ஆண்களை மட்டும் சந்நிதிக்குள் அனுமதித்து, குழந்தை வரமருளும் கிடங்கூர் சுப்ரமணியர்
படம் 2- 200 கல்வி, ஞானம் சிறக்க அருளும் கிடங்கூர் சுப்ரமணியர் கோவில்
Comments
Post a Comment