கோவில் 199 - ஆலப்புழா ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமி கோவில்
🙏🙏
மறு பதிவு தினம் ஒரு முருகன் ஆலயம்-199
ஓம் அமைப்பில் அமைந்துள்ள முக்கிய தலங்களில் முடிவான தலம் ஆலப்புழா ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமி கோவில்
24.12.21 வெள்ளி
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்
ஹரிபாடு-690514
ஆலப்புழா மாவட்டம்
கேரளா மாநிலம்
இருப்பிடம்: ஆலப்புழாவிலிருந்து 22 கிமீ
மூலவர்: சுப்ரமணிய சுவாமி
தலமகிமை:
முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் ஓம் வடிவில் வருகிறது. தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகுள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தால் அது ஓம் வடிவில் தெரிகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், கட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. ஓம் வடிவில் கடைசியில் முடியும் சிறப்பு மிக்க தலம் ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமி கோவில்.
கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து 22 கிமீ தொலைவில் ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கேரளாவின் பழமையான கோவில்களில் ஒன்று. தென்பழனி (தெக்கன் பழனி) என்றும் அழைக்கப்படும் இக்கோவில், கருணையும், பாதுகாவலருமான எல்லாம் வல்ல முருகப்பெருமானால் வளம் பெற்றது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளின் சாந்நித்யம் பெற்றதாக இக்கோவில் கருதப்படுகிறது.
பொதுவாக எல்லாக் கோவில்களிலும் காலை நேரத்தில் கொடியேற்றம் நடைபெறும். இக்கோவிலில் மாலையில் கொடியேற்றப்படுவது சிறப்பு. இங்கிருந்து 1கிமீ தூரத்தில் புகழ்பெற்ற பாம்புக்கோவிலான மண்ணாற சாலை நாகராஜர் கோவில் உள்ளது.
தலவரலாறு:
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கோவில் இது. விஷ்ணு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சிலை பரசுராமரால் பூஜைக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. முருகப்பெருமான் படைக்கும் தொழிலை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு தலமாக சென்று, இத்தலதிற்கு வந்த போது விஷ்ணு முருகனை வரவேற்று வாழ்த்தி பாடிய பாடல்கள் ஹரிப்பாடல்கள் எனப்பட்டன எனவே ஹரி. பாடிய தலத்திற்கு ஹரிப்பாடு என்ற பெயர் உண்டாயிற்று. மாலன் தன் மருமகனை இத்தலத்திலேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்படி கேட்டுக்கொண்டதால் முருகப்பெருமான் இத்தலத்தில் குடிகொண்டார்.
கி.பி.1096ல் இக்கோவிலில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. மூல விக்ரகத்தைத் தவிர மற்ற அனைத்தும் எரிந்து விட்டது. சித்திர திருநாள் ராம வர்மாவின் ஆட்சியின் போது சுப்ரமணிய சுவாமி கோவில் மீண்டும் கட்டப்பட்டது. மேலும் தங்கக்கொடி மீண்டும் நிறுவப்பட்டது.
தல அமைப்பு:
கோவில் வாசலில் பெரிய மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் 70 அடி உயரமுடைய மிகப்பெரிய கொடிமரம் வரவேற்கும். ராஜகோபுரமும் இருக்கிறது. இக்கோபுரத்தின் கீழே பதிந்துள்ள காலடிகள் முருகனுடையதாகக் கருதப்படுகிறது.
ஹரிப்பாடு கோவில் கருவறையில் மூலவராக முருகன், கிழக்கு நோக்கி 8 அடி உயரத்தில் சுப்ரமணிய சுவாமி எனும் திருநாமத்துடன் ஒருமுகம் கொண்டு திருநீறு/சந்தனக்காப்பில் மிளிர்ந்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு திருமணம் முடியும் முன்பே அமைந்தகோயில் என்பதால் வள்ளி, தெய்வானை இல்லை. கேரளாவில் இருப்பதால் முறையான பூஜைகள் உண்டு. விஷ்ணு, சிவன் மற்றும் பிரம்மா ஆகியோரின் இருப்பு இந்த சிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்தி, விநாயகர், திருவம்பாடி கண்ணன், நாகம், தர்மசாஸ்தா, யக்ஷி, குருதிக்காமன், பஞ்சமி ஆகிய தெய்வங்களும் அருளுகின்றனர்.
திருவிழா:
பிரதி கார்த்திகை, சஷ்டியில் விசேஷ பூஜை, தைப்பூசம், திருக்கார்த்திகை மற்றும் ஆவணி, மார்கழி, சித்திரை மாதங்களில் பத்து நாள் உற்சவம்
பிரார்த்தனை:
கல்வியில் சிறந்து விளங்க, செல்வம் பெருக, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் கிட்ட, உடல், மன நோய்கள் நீங்க, தோஷங்கள் நீங்க, அச்சம், எதிரிகள் தொல்லை விலக
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 4-11.30 மாலை 5-8
கல்வியில் மேன்மை தரும் ஆலப்புழா ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமியை அகக்கண்ணால் தரிசித்து இருளை அகற்றி அறிவைப் பெருக்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கல்வியில் மேன்மை தரும் ஆலப்புழா ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமி
படம் 2 - எதிரிகள் தொல்லைகள், அச்சங்களை விலக்கும் ஆலப்புழா ஹரிப்பாடு சுப்ரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment