koavil 151 - மலேசியா பத்துமலை முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-151
பக்தர்களின் குறைகளை தீர்க்கும் மலேசியா பத்துமலை முருகன் கோவில்
6.11.21 சனி
அருள்மிகு பத்துமலை முருகன் திருக்கோவில்
பத்துமலை
கோம்பாக் மாவட்டம்
கோலாலம்பூர்
மலேசியா
இருப்பிடம் –,கோலாலம்பூர் 13 கிமீ
மூலவர்: பத்துமலை முருகன்
தாயார்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
உலகிலேயே மிக உயரமான 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலை மலேசியா நாட்டின் கோம்பாக் மாவட்டம் பத்துமலையில் அமைந்துள்ளது. இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்த பத்துமலை முருகன் கோவிலுக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, சீனர்களும் வந்து வழிபடுகிறார்கள். கோவிலையை நிறுவியவர் தமிழகத்தைச் சேர்ந்த தம்புசாமி பிள்ளை ஆவார். இது மலேசியாவில் மிகப் பழமையான கோவிலாகும்.
மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. வேலுக்குதான் அபிஷேகம் செய்யப்படும். தரப்படும் பால் அனைத்தும் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இங்கு மட்டுமே நடைபெறும் நிகழ்வாகும். தைப்பூசத் திருவிழாவின் போது மூன்று நாட்கள் இடைவெளியே இல்லாமல் இரவு பகல் தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இத்தலத்தின் பெருமைக்குரிய சிறப்பு.
தைப்பூசம் என்றாலே நமக்கு பழனிதான் நினைவுக்கு வரும். பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை காவடி சுமந்து சென்று முருகனுக்குச் செலுத்துவன் மூலம் நிறைவேற்றுகின்றனர். பழனியில் காவடி மட்டும்தான் பிரபலம் மலேசியா என்றாலே மயில் காவடிகள். சடல்கள் பிரபலம், மயில் காவடி என்பது பீடம் வட்ட வடிவில் பெரியதாகவும் அதற்கு அடுத்த பகுதி அதை விட சிறியதாகவும் வட்டமாக 4/5 அடுக்குகள் அமைந்த படிகளைப் போன்ற அமைப்பாகும். அதன் உச்சியில் முருகனின் சிலையை அமைத்திருப்பார்கள். சுற்றிலும் மயில் இறகு பூக்கள், வண்ண விளக்குகள் போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சிறிய கோபுரத்தைப் போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். தைப்பூசத்தன்று மயில் காவடியினை தோளில் சுமந்து கொண்டும் ஆடிக்கொண்டும் மலை ஏறிவருகின்றனர் எடையுள்ள காவடியை சுமந்து கொண்டு மலை ஏறுவது எளிய காரியமில்லை.
பால்குடம் எடுப்பது இக்கோவில் சிறப்பு. 21/2 வயது குழந்தைகள் முதல் 75-80 வயது முதியவர் வரை பால் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது கண்கொள்ளா காட்சி. பால் காவடியில் பல வகைகள் உள்ளன. இதில் கரும்பு பால் காவடி என்பது ஒருவகை நீளமான 3 முழு கரும்புகளை சோகையுடன் ஒன்றாக சேர்த்து கட்டி விடுவர் மனைவி ஒரு முனையைத் தோளில் தாங்கியும் கணவன் மறு முனையைத் தோளில் தாங்கியும் பிடித்துக் கொள்வர். இருதோள்களிலும் கரும்புகளை வைத்த பின்பு. கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள இடைப்பட்ட பகுதியில் இரு கரும்பு தொகுப்பில் 6 பால் நிரப்பிய குடங்களை துணிக்கயிற்றால் கட்டி தொங்க விட்டிருந்தனர். சிறிய 108 பால் கலசங்களை கொக்கியில் ஒரு முனையில் இணைத்து மறுமுனையை முதுகில் குத்தி தொங்க விட்டிருந்தனர். இக்காவடியை சுமந்து கொண்டு நடப்பதே சிரமம் தைப்பூசத்விழாவில் பங்கு பெறும் பக்தர்களையும் காண்பதற்கே ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கண்டு களிப்பர்.
தலவரலாறு:
பத்துமலை என்று அழைக்கப்பட்டாலும், படு கேவ்ஸ் (Batu caves) என்றுதான் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். காரணம் இது ஒரு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில். கோவில் இருக்கும் மலையின் அடிவாரத்தில் ஓடும் பத்து என்கிற ஆறின் பெயர்தான் மலையின் பெயராகி பத்துமலை ஆகிவிட்டது.
சூரபத்மனை அழிக்க தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிச் செல்லும் முருகனும் வேலாயுதமும் தமிழகத்தைச் சேர்ந்த காயாரோகணம்பிள்ளை மற்றும் அவரது மகன் தம்புசாமி பிள்ளை என்ற வணிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தன. அங்கு சுப்ரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டனர். தம்புசாமி பிள்ளை குகைக்குள் ஒரு கோவிலை நிர்மாணித்து சுவாமியை பிரதிஷ்டை செய்தார். அதன் பின்பு வேலாயுதத்தையும் பிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது. பத்துமலை அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ள 141 அடி உயரமுள்ள முருகன் சிலை உலக அளவில் பெரும் புகழையும் சிறப்பையும் சேர்த்திருக்கின்றது. இதனை உருவாக்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. 15 சிற்பிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1550 கனமீட்டர் கான்கிரீட் மற்றும் 250 டன் எடையுள்ள எஃகு கம்பிகள் ஆகியவை கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரத்தியேகமாக தாய்லாந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட 300 லிட்டர் தங்க கலவை சிலையின் மீது பூசப்பட்டுள்ளது
தல அமைப்பு:
இத்திருக்கோவில் 1300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 272 படிகள் ஏறிய பின் சில படிக்கட்டுகள் கீழே இறங்கினால் பெரிய பரப்பளவுள்ள சமதள பகுதி உள்ளது. இடது புறத்தில் இருக்கும் ஒரு சிறிய குகையில் மூலவராக 140 அடி உயர சுப்ரமணியசுவாமியும் அவர் முன்னே வேலாயுதமும் அருள்பாலிக்கின்றனர். வேல் தாங்கிய கரமும், புன்னகை தவழும் முகமும், அருள் பொழியும் விழிகளும் அருள்மலையை பொழிகின்றது. இச்சந்நிதியில் சுப்ரமணியசுவாமி இருந்தாலும் அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் அனைத்தும் வேலாயுத சுவாமிக்குத்தான் (வேல்). மூலவர் இருக்கும் பகுதியிலிருந்து சுமார் 40 படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்றால் வள்ளி, தெய்வயானை சமேத சுப்ரமணியசுவாமி தனிச் சந்நிதி, விமானம் மற்றும் முன் மண்டபத்துடன் அருள்பாலிக்கின்றார். பக்தியுடன் பால்குடம் எடுத்துச் செல்கையில் ‘நான்’ என்னும் அகந்தை அழிந்து போகிறது. அதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருநாளுக்குக் காத்திருந்து வருகிறோம் என்கின்றனர் மலேசிய பக்தர்கள்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், செவ்வாய், கார்த்திகை
,
பிரார்த்தனை
குறைகளனைத்தும் தீர, அனைத்து வித பிரார்த்தனை நிறைவேற
நேர்த்திக்கடன்:
பாதயாத்திரை, பால்குடம், கரும்பு பால்குடம், பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி.
வேண்டுகின்ற பிரார்த்தனையை நிறைவேற்றித் தரும் பத்துமலை முருகனை வணங்கி பலன் அடைவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Malaysia pathu malai muruganuku arohara. Thanks for this post Iya.
ReplyDelete