கோவில் 539 - கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-539
இன்பங்கள் அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில்
29.11.2022 திங்கள்
அருள்மிகு அருள் முருகன் திருக்கோவில்
இந்திலி-606202
கள்ளக்குறிச்சி வட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் 7 கிமீ
மூலவர்: அருள் முருகன் (பாலமுருகன்)
தல விருட்சம்: வன்னி மரம்
தீர்த்தம்: வைகை தீர்த்தகுளம்
தலமகிமை:
கள்ளக்குறிச்சி-சேலம் நெடுஞ்சாலையில் 7 கிமீ தொலைவில் இன்பங்கள் அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில் அமைந்துள்ளது. திருமணத்தடை பிள்ளைப்பேறு கிட்ட, தொழில் மேம்பாடு அடைய மற்றும் உடல்நலம் சீராக செவ்வாய், வெள்ளிகளில் இவருக்கு அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றுகிறார்கள். இப்படிச் செய்வதால், அல்லல்கள் நீங்கி ஆனந்த வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரம் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. திருத்தேர் விழா முதன்மைப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கி ஏழு நாட்கள் தொடர்ந்து திருவீதி உலா, அடுத்து பங்குனி உத்திரத்தன்று காலை விநாயகர் பூஜை, முருகன் பூஜை, பால்குடம் எடுத்தல், முத்திரைக் காவடி திருவீதி உலா, கால்நடைகளுக்கு அலகு பூட்டுதல் நிகழ்வுக்கு அடுத்து திருத்தேர் வடம் பிடித்து திருவீதி உலா சிறப்புற நடைபெறும். அடுத்த நாள் புஷ்ப ரதம் வாணவேடிக்கைகள் மிக சிறப்பாக நடைபெறுகிறது. 11-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழா, காப்பு நீக்கி கடம்பர் மற்றும் இடும்பர் பூஜைகளுடன் விழா நிறைவு பெறும்.
இரண்டு நாட்கள் திருவிழாவாகத் காண்டாடப்படும் தைப்பூச நிகழ்வில் முருகப்பெருமானுக்கு 108 வகையான திரவியாபிஷேகங்கள், மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும். அடுத்த நாள் அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதருவார். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக காவடிகள் சுமந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துவர். பழனியில் இருப்பதை போல முடிக்காணிக்கை செலுத்து பழக்கமும் இங்கு உள்ளது.
தல வரலாறு:
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள இந்திலி எனும் கிராமத்தில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் முருகப்பெருமான் ஒருவரையே தெய்வமாகத் தொழுது வந்தனர். நீர்வளம் மிக்கச் செழிப்பான இந்தப் பகுதியில் விவசாயத்தையே பெரிதும் நம்பி வாழ்ந்து வந்த அவர்கள், ஒவ்வொரு வருடமும் தைப்பபூசத்தின் போது தங்கள்
ஊரில் இருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள பழனி மலைக்கு காவடி சுமந்து
பாதயாத்திரை மேற்கொள்வதை காலம் காலமாக பழக்கமாகக் கொண்டிருந்தனர். தைப்பூசம் தவிர, மற்ற சமயங்களில் அவரவர் வீட்டின் உள்ள முருகன் படத்தை வணங்கி வந்தனர். இந்நிலையில் 1950-ம் ஆண்டு வாக்கில் வயது மூப்பின் காரணமாக பலரால் பாதயாத்திரை செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி இது பற்றிச் சிந்தித்தனர். கூட்டத்தின் முடிவில், முருகனுக்கென ஒரு சிறிய கோவில் ஒன்றை தங்கள் கிராமத்திலேயே அமைப்பது என தீர்மானித்தனர். அதைத்தொடர்ந்து 1950-ம் வருடம் சிறிய அளவில் ஓர் அறை அமைத்து அதில் முருகனின் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிட்டனர். நாளடைவில் சுற்றுப்புற ஊர்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரிக்கவே அனைவரின் விருப்பப்படி முருகனுக்கு சிலை அமைத்து, கோவில் விரிவாக்கம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என ஊரார் ஒரு மனதாக முடிவு செய்தனர்.
1976-ம் ஆண்டில் திருக்கோவில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்த நிலையில் 1978-ம் ஆண்டு புதிய முருகன் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை வெகு விமரிசையாக நடத்தினர். அதைத் தொடர்ந்து மூன்று கும்பாபிஷேகங்கள் நடந்தன.
தல அமைப்பு:
பழனி மலையப் போலவே இக்கோவிலும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்ட வேல்கள் மற்றும் பலிபீடங்கள் காணப்படுகிறன. முன் மண்டபம், அர்த்த மண்டபம் தொடர்ந்து கருவறையில் முருகப்பெருமான் அருள் முருகன் எனும் திருப்பெயருடன் நின்ற வடிவில் இடக்கையை இடுப்பில் தாங்கி வலக்கையால் ஆசி வழங்கும் கோலத்தில் புன்னகை தவழ எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை பாலமுருகன் என்றும் அழைக்கிறார்கள். வெள்ளிக் கவச அலங்காரத்தில் இவரை தரிசித்தால் வெற்றிகள் நிச்சயம். மூலவர் பாலமுருகன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அனைத்து பேறு தரும் அருள் முருகனாக அருள்பாலிக்கிறார் விநாயகர், துர்க்கை, நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. மூலவர் சந்நிதிக்கு வெளியே வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கியவாறு ஆறடி உயரத்தில் இடும்பனின் சுதைச் சிற்பம் உள்ளது.
.
திருவிழா:
பங்குனி உத்திரம் (11 நாள்), தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தமிழ் மாத பிறப்பு, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
இன்பங்கள் அருள, வெற்றிகள் கிட்ட, சமூக ஒற்றுமை ஓங்க, அல்லல்கள் நீங்க, திருமணத்தடை நீங்க, பிள்ளைப்பேறு வேண்டி, தொழில் மேம்பட, உடல் நலன் பெற
நேர்த்திக்கடன்:
நெய் தீபம், முடி காணிக்கை, பால்குடம், காவடிகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாலை 3-7
வெற்றிகளை அள்ளி அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் அடிபணிந்து பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 539 வெற்றிகளை அள்ளி அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன்
படம் 2 - 539 இன்பங்கள் அருளும் கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி அருள் முருகன் கோவில்
Comments
Post a Comment