கோவில் 537 - நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாக சுப்பிரமணியர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-537
நாகதோஷம் போக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாக சுப்பிரமணியர் கோவில்
27.11.2022 சனி
அருள்மிகு நாகசுப்பிரமணியர் திருக்கோவில்
நரிமுடுக்கு-609112
சீர்காழி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
இருப்பிடம்: சீர்காழி 12 கிமீ
மூலவர்: நாகசுப்பிரமணியர்
தலமகிமை:
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி-மகேந்திரபள்ளி சாலையில் 10 கிமீ தொலைவில் உள்ள நல்லூர் என்ற கிராமத்தில் இறங்கி தெற்கே 2 கிமீ பயணித்தால் நாகதோஷம் போக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாக சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் அபூர்வமாக ஐந்து தலை நாகம் மீது நின்ற கோலத்தில் காட்சியருளுகிறார்.
பங்குனி உத்திர நன்னாளில் நாக சுப்பிரமணியருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு நாக சுப்பிரமணியரை வழிபட வருகின்றனர். சித்ரா பவுர்ணமி நாளில் பால்குடம், காவடிகள் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். கந்த சஷ்டி 6 நாட்கள் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருக்கார்த்திகை அன்று பரணி தீபம் காலையிலும் மகா தீபம் மாலையிலும்' ஏற்றப்பட்டு இரவில் சொக்கப்பனை கொளுத்தப்படும். பொங்கல் அன்று அனைத்து அபிஷேகங்களும் நடைபெறும். பக்தர்கள் பொங்கல் வைத்து முருகப்பெருமானை வழிபடுவர்.
செவ்வாய்தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள், ஆறுவாரம் செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, ஆறு எலுமிச்சம் பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தோஷ நிவர்த்தி கிடைப்பதாகக் கூறுகின்றனர். ஜாதகத்தில் உள்ள கிரக கோளாறுகள் காரணமாக திருமணத்தில் தடை ஏற்பட்டவர்கள், தங்கள் ஜாதகத்தை முருகனின் திருவடியில் வைத்து வழிபாடு செய்தால், எல்லா தடைகளையும் நீக்கி முத்தான திருமண வாழ்க்கையை முருகன் அளிப்பதாக பக்தர்கள் உணர்வு பொங்கக் கூறுகின்றனர். பிள்ளைப்பேறு வேண்டுவோர் தம்பதி சமேதராக பிராகாரத்தை இருபத்து ஏழு முறை வலம் வரவேண்டும். குறிப்பாக ஆறு வாரங்கள் கணவரின் ஜன்ம நட்சத்திர தினத்தில் இப்படிச் செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் அருள்வார்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில் நரிகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த இடமே, தற்போது நரிமுடுக்கு என்ற கிராமமாக விளங்குவதாகச் சொல்கிறார்கள். ஒரு சமயம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை என்ற ஊரில், நாத முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். தினமும் மகேந்திர பள்ளிக்குச் சென்று சிவனை வழிபடுவது அவரது வழக்கம். ஒருநாள் அப்படிச் செல்லும்போது வழியில், தற்போது நரிமுடுக்கு எனப்படும் இடத்தில் அவரை நாகங்கள் சூழ்ந்துகொண்டன. என்ன செய்வதென்று தெரியாமல், அருகில் உள்ள மகேந்திரபள்ளியில் அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கினார் உடனே அந்த இடத்தில் வேல் வடிவில் ஒளிப்பிழம்புத் தோன்றியது. நாத முனிவரைச் சூழ்ந்திருந்த நாகங்கள் அனைத்தும் தெறித்து ஓடின. நாகங்களிடமிருந்து காப்பாற்ற குமரனின் வேலை அனுப்பிய ஈசனின் கருணையை நினைத்து மெய்சிலிர்த்த நாதமுனிவர், அந்த இடத்தில் ஐந்து தலை நாகக் குடையின் கீழ் சுப்ரமணியர் நிற்பதுபோல் சிலை வடித்து வழிபாடு செய்தார். பிற்காலத்தில் அங்கே கோயில் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
கோவிலின் மகாமண்டப முகப்பில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகனை வணங்கிவிட்டு உள்ளே சென்றால், மயில், வேல், ஆதிப்புற்று ஆகியவை அமைந்துள்ளன. லக்ஷ்மி, விநாயகர் அருள்கின்றனர். அர்த்தம்ண்டபத்தில் பொய்யா விநாயகர் அருள்கின்றார். கருவறையில் நாக சுப்பிரமணியர் ஐந்து தலை நாகத்தின் மீது வேல் தாங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அற்புத தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார். அஞ்சுதலைப் போக்கும் ஆறுமுகன், அஞ்சுதலை அரவத்தின் மேல் அதன் குடையின் நிழலில் நிற்கும் தரிசனம் மனதைக் கவர்கிறது
திருவிழா:
பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நாகதோஷம் போக்க, நல்லன அருள, மன அமைதி பெற, பிணி நீங்க, குழந்தைப்பேறு கிட்ட, திருமணத்தடை அகல, நல்லன கிடைக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடிகள், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 9-12 மட்டும் [சஷ்டி. கிருத்திகை மட்டும் மாலை 5-9 வரை]
நல்லன நவிலும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாகசுப்பிரமணியரை நாமும் வணங்கி நலன் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 537 நாகதோஷம் போக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாகசுப்பிரமணியர் நாகத்தின் மீது
படம் 2 - 537 நல்லன நவிலும் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமுடுக்கு நாகசுப்பிரமணியர் கோவில்
Comments
Post a Comment