கோவில் 536 - நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-536
ஐஸ்வர்யம் பெருக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகன் கோவில்
26.11.2022 வெள்ளி
அருள்மிகு சந்தனமலை முருகன் திருக்கோவில்
க்ளென்வன்ஸ் எஸ்டேட்
ஓ’வேலி பேரூராட்சி
கூடலூர் வட்டம்
நீலகிரி மாவட்டம்
இருப்பிடம்: கூடலூர் 19 கிமீ, ஊட்டி 69 கிமீ
மூலவர்: தண்டபாணி
தலமகிமை:
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஓ’வேலி பேரூராட்சியில் க்ளென்வன்ஸ் எஸ்டேட்டில் சந்தனமலை முருகன் கோவில் அமைந்துள்ளது, தண்டபாணி என்ற திருப்பெயரில் முருகப்பெருமான் அருள்புரிகிறார். சந்தனமலை முருகன் கோவில் குன்றின் மேலிருந்து நீலகிரி மலைத்தொடர், கேரளா மலைத்தொடர்கள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், அழகிய வனம் நிறைந்த மரங்கள், டீ, காபி, ஏலக்காய் தோட்டங்கள்,, பள்ளத்தாக்கு காட்சிகளை பார்க்கலாம். சுற்றுலா வரும் பயணிகள் முருகப்பெருமானையும் தரிசித்து பலன் பெற்று செல்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழா 5 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட முருக பக்தர்கள் மட்டுமின்றி அருகிலுள்ள கோவை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இந்த இடத்தில் உள்ள புற்றிற்கு அருகில் ஒரு சிவலிங்கத்தையும் முருகப்பெருமான் சிலையையும் கண்டான். இதனை தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் தெரிவித்ததையடுத்து இந்த இடத்தில் சந்தனமலை முருகன் கோயில் கட்டப்பட்டது. இங்கு சந்தன மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் சந்தனமலை என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர்.
தல அமைப்பு:
கோவில் கோபுரம் கடந்தவுடன், நெடிய கொடிக்கம்பம் உள்ளது. திருக்கோவில் கருவறை வாசலில் இருபுறமும் இடும்பன் சகோதரர்கள் அருள்கின்றனர். கருவறை மூலவராக சந்தனமலை முருகன் தண்டபாணி என்ற திருப்பெயருடன் கையில் அழகிய வேல் தாங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான், சிவலிங்கம் முதலான தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம்
பிரார்த்தனை:
ஐஸ்வர்யம் பெருக, வினைகள் நீக்க, கேட்டதெல்லாம் அருள
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
வினைகள் நீக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகனை மனமுருகி வணங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 536 ஐஸ்வர்யம் பெருக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகன் கோவில்
படம் 2 - 536 வினைகள் நீக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓ’வேலி சந்தனமலை முருகன் கோவில்
Comments
Post a Comment