கோவில் 534 - முருகப்பெருமான் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) கோவில்

  🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-534

பிணிகள் முதலான அனைத்து சங்கடங்களையும் விலக்கும் முருகப்பெருமான் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) கோவில்

24.11.2022 வியாழன்

அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோவில்

கீழ்வேளுர்-611104

நாகப்பட்டினம் மாவட்டம்

இருப்பிடம்: திருவாரூர் 15 கிமீ, நாகப்பட்டினம் 14 கிமீ

மூலவர்: கேடிலியப்பர், அட்சயலிங்க சுவாமி

அம்மன்: வனமுலையம்மன், சுந்தர குஜாம்பிகை, அஞ்சு வட்டம்மன்

உற்சவர்: கல்யாண சுந்தரர்

நாயகன்: முருகப்பெருமான்

தல விருட்சம்: பத்ரி, இலந்தை

தீர்த்தம்: சரவணப்பொய்கை (முருகன் உருவாக்கியது), அக்னி, சேஷ, பிரம்ம, சூரிய, சந்திர, குபேர தீர்த்தம்

புராணப்பெயர்: கீவளூர், திருக்கீழ்வேளுர்

பாடியவர்: அப்பர், சம்பந்தர்


தலமகிமை:

திருவாரூர்-நாகப்பட்டினம் சாலையில் திருவாரூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் நாகப்பட்டினத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும் பிணிகள் முதலான அனைத்து சங்கடங்களையும் விலக்கும் முருகப்பெருமான் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) கோவில் அமைந்துள்ளது. வேளூர் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளதால், கிழக்கு திசையில் இருக்கும் இவ்வூர் கீழ்வேளூர் என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கேடிலியப்பரை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். குமரன் தவக்கோலத்தில் காட்சியருள்கின்றார். இக்கோவில் தென்கரையில் 84-வது தேவார பாடல் பெற்ற தலம். மொத்தமுள்ள 274 சிவாலயங்களில் 147,வது தேவாரத்தலம்.


இத்திருத்தலத்தில் யோகராஜ வித்தையின் தலைவனாக விளங்கும் தியாகேச பெருமான் 18 படிகள் மீது அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. யோக படிநிலைகள் பதினெட்டையும் யோக சாதனையால் கடந்தவர்கள் சித்தர் பெருமக்கள். இவர்களில் பதினெட்டு பேரை பதினெண் சித்தர்கள் எனப் போற்றுவர். பதினெட்டு சித்தர்கள் பெயர்கள் உள்ள பாடலை தியாகேசரையும் பதினென் சித்தர் பெருமக்களை மனத்தால் துதித்து பாடினால் பிணிகள் முதலான அனைத்து சங்கடங்களும் விலகும்.


நாகப்பட்டினம் திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூர் பாடல்பெற்ற பதியாகும். இங்கு பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும். வலதுகாலின் குதிகாலை மட்டும் சற்று உயர்த்தி ஸ்வஸ்திக நிலையில் வைத்துள்ளார். பிரம்மனும் லட்சுமியும் கர தாளமிட, நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகான இசை முழக்க, திருமால் மிருதங்கம் வாசிக்க, பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபாமுத்திரையும் கண்டு களிக்கின்றனர். இதனையும் சந்தியா தாண்டவம் என அழைக்கின்றனர்.


தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்த போது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து ‘வட பத்ரிகாரண்யம்’ ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி ‘தென் பத்ரிகாரண்யம்’ ஆயிற்று. ‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். எனவேதான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம், தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.


தல வரலாறு:

முருகப்பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் சம்ஹாரம் செய்தார். ‘அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது?’ என்று தனது தந்தை சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்னை, நவலிங்க பூஜை செய்து வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார். அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து சரவணப்பொய்கை தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.


பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப்பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஆகாய மார்க்கமாகவும் (5 புறமும்) குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இந்த அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.


தல அமைப்பு:

7 நிலை ராஜகோபுரத்துடன் இக்கோவில் இரண்டு பிரகாரங்களை கொண்டுள்ளது. திருக்கோவில் கருவறையில் சிவபெருமான், கேடிலியப்பர் என்ற திருப்பெயருடன் சுயம்பு லிங்கமாக திருக்காட்சியருளி அருள்பாலிக்கின்றார். இவருக்கு அட்சயலிங்க சுவாமி என்ற திருநாமமும் உண்டு. அம்மன் சந்நிதியில் வனமூலையம்மன் என்ற சுந்தர குஜாம்பிகையாக காட்சியருள்கின்றார். மேலும் சுந்தர குஜாம்பிகை, தன் மகன் குமரனை 5 புறங்களிலிருந்தும் [4 திசை + ஆகாயம்] காப்பாதற்கு அஞ்சு வட்டம்மன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார். எனவே ஆகாய விமானங்களில் பயணம் செய்வோர் அஞ்சு வட்டம்மனை வணங்கி செல்கின்றனர்.


முருகப்பெருமான் தனி சந்நிதியில் தன் வீரஹத்தி தோஷம் நீங்குவதற்காக வடதிசை நோக்கி அட்சயலிங்க சுவாமியை (கேடிலியப்பர்) தவகோலத்தில் பூஜித்து வந்தார். இந்த வேலவனை வேண்டுவோருக்கு அனைத்து தோஷங்கள், பாவங்கள், துன்பங்கள் விலகுகின்றன. கேடிலியப்பர், சுந்தர குஜாம்பிகை. அஞ்சு வட்டம்மன்,, தியாகசேர், கணபதியுடன் முருகப்பெருமானும் இங்கு சிறப்பு தெய்வமாக வணங்கப்படுகிறார். மேலும், தியாகேசர், அகத்தியர் பூஜித்த நடராஜர், அஞ்சு வட்டம்மன், சோமாஸ்கந்தர், விஸ்வநாத்ர், கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணமாலையார், ஜம்புகேஸ்வரர், விநாயகர், பத்ரி விநாயகர் என்ற திருப்பெயருடன், அகத்தியர் முதலிய தெய்வங்கள் தனி சந்நிதிகளில் எழுந்தருளி அருள்கின்றனர்.


திருவிழா:

சித்ரா பவுர்ணமி பிரமோற்சவம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி


பிரார்த்தனை:

பிணிகள், சங்கடங்கள் தீர, பாவங்கள், தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், திருப்பணி காணிக்கை


பாவங்கள், தோஷங்கள் விலக்கும் முருகன் பூஜித்த நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பரை (அட்சயலிங்க சுவாமி) கும்பிட்டு பலன் பெற்றிடுவோம்!


திறக்கும் நேரம்:

காலை 5-11 மாலை 5-8


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏



படம் 1 - 534 சகல தோஷங்களை போக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) , சுந்தர குஜாம்பிகை



படம் 2 - 534 சங்கடங்களை தீர்க்கும் தவக்கோல முருகப்பெருமான், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி)  கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்