கோவில் 174 - திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                                     

தினம் ஒரு முருகன் ஆலயம்-174

பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கின்ற திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

29.11.21 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 

உறையூர் 

திருச்சி-620003

இருப்பிடம்: திருச்சி பேருந்துநிலையம்-உறையூர் பாளையம் பஜார் கோவில் 2 கிமீ 


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

தேவியர்: வள்ளி, தெய்வானை

பழமை: 500 ஆண்டுகள்


தலமகிமை:

திருச்சி மாநகரிலேயே இந்த சக்தி வாய்ந்த முருகன் கோவில் இருப்பது மிகச்சிறப்பு. இத்திருத்தலதில் வந்து மனமுருக பிரார்த்தித்தால் பிரிந்த தம்பதியனர் ஒன்று சேருவர். கணவன் மனைவி மனமொற்றுமை ஓங்கும். மனம் நிம்மதி பெறும், நாக தோஷங்கள் விலகும். 


இவ்வாலய மண்டப உச்சியில் அஷ்டலட்சுமி சிற்பங்கள் மிக அழகு.  வடநாட்டில் 16 வகையான திருக்கோலங்களில் லட்சுமியை வழிபடுகிறார்கள். தமிழ்நாட்டில் எட்டு வகையான திருக்கோலங்கள். அனைத்து வளங்களையும் தருபவள் ஆதிலட்சுமி. பசுமையும் பயிர்களும் செழிக்க வைப்பவள் தான்யலட்சுமி, துணிவையும் தைரியத்தையும் தருபவள் தைரியலட்சுமி, புகழையும் பெயரையும் அளிப்பவள் ராஜலட்சுமி, குழந்தை பாக்கியம் தருபவள் சந்தானலட்சுமி, வெற்றியை அள்ளித் தருபவள் விஜயலட்சுமி, கல்வித் தருபவள் வித்யாலட்சுமி, இருக்கும் செல்வத்தை நிலைக்கச்செய்து மேலும் பொருள் சேர அருள்பவள் தனலட்சுமி. மகாலட்சுமியின் வடிவங்களான இந்த அஷ்டலட்சுமிகளையும் நாம் ஒரே நேரத்தில் தரிசிக்க இயலும்போது நம் மனம் மகிழ்ச்சியில் நிறைந்து நிம்மதி பெறுகிறது. 


மன ஒற்றுமை பாதிக்கப்பட்டு பிரிந்த தம்பதியருக்கு இங்கு அருள்பாலிக்கும் முருகன் ஆபத்பாந்தவனாக இருக்கிறார். பிரிவால் பாதிக்கப்பட்ட ஆணோ, பெண்ணோ இங்கு வந்து முருகனை பிரார்த்தனை செய்து, ஏழு வாரங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி வழிபட்டு வந்தால், கணவன்-மனைவி பிணக்கு தீர்ந்து இருவரும் இணைவது கண்கூடாகக் காணும் மெய் என்று சொல்கின்றனர் பக்தர்கள். அதன்பின், தம்பதி சமேதராய் இங்கு வரும் கணவனும்-மனைவியும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். 


இந்த ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழா நடைபெறும். இந்த விசேஷ நாட்களில் முருகபெருமானுக்கும், உடன் இருக்கும் வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. ஐப்பசி கந்த சஷ்டியின்போது ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். ஆறு நாட்கள் நடைபெறும் திருவிழாவை தொடர்ந்து ஏழாம் நாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். மாத சஷ்டி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின்போது இறைவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் (திருக்கார்த்திகை) சொக்கப்பனை உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. 


நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர்களுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்தால் தோஷத்தின் கடுமை வெகுவாகக் குறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.


தலஅமைப்பு:

சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. முகப்பில் அழகிய நுழைவாயிலில் இடதுபுறம் பிள்ளையார் மற்றும் வலதுபுறம் வீரபாகுவின் திருமேனிகள் உள்ளன. சங்கடஹர சதுர்த்தியின்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.  


கருவறையில் முருகப்பெருமான் சுப்ரமணிய சுவாமியாய் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் தெய்வீக அழகுடன் அருள்பாலிக்கின்றார். வலதுமேல் கரத்தில் வஜ்ரவேலையும், இடதுமேல் கரத்தில் திரிசூலத்தையும் தாங்கி கீழே உள்ள இரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன், சிரித்த முகத்தினராய் துணைவியரோடு அருள்பாலிக்கும் குமரனின் அழகே அழகு. முருகனின் வாகனமான மயிலின் முகம் தென்திசை நோக்கி இருப்பது சிறப்பு அம்சம். இங்கு முதலில் வீரபாகுவுக்கு தீபாராதனை செய்த பின்னரே முருகப் பெருமானுக்கு தீபாராதனை காட்டுவது வழக்கமாக உள்ளது.

 

பிராகாரத்தில் மேற்கு திசையில் நாகர்களும் வடகிழக்கில் நவகிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தில் நின்றுகொண்டு கருவறை இறைவனை நாம் தரிசித்த பின் சற்றே தலையை உயர்த்திப் பார்த்தால். மண்டபத்தின் உச்சியில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ராஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளின் திருவுருவங்கள் கருங்கல்லில் செதுக்கப்பட்டு சதுர வடிவில் பொறிக்கப்பட்டுள்ளது. 


திருவிழா:

சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆனி, ஆடி, ஆவணி, கிருத்திகை, புரட்டாசி நவமி, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி 30 நாட்களும், தை பூசம், மாசி மகம் பங்குனி உத்திரம்


பிரார்த்தனை:

ஏழு செவ்வாய், வெள்ளி விளக்கு ஏற்றுதல்- பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, மனமொற்றுமை ஓங்க, மனநிம்மதி அடைய, நாக தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பாலாபிஷேகம் செய்தல், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 5.30-9


திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமியை மனமுருக துதித்து மனம் நிறைந்த நிம்மதி பெற்று மகிழலாம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 - பிரிந்த தம்பதியரை சேர்த்து வைக்கின்ற திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - நாகதோஷங்கள் அகற்றும் திருச்சி உறையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருத்தலம்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்