கோவில் 171 - ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகாசலக் குமரன் கோவில்

 🙏🙏                                                                                                                                                            தினம் ஒரு முருகன் ஆலயம்-171

வீட்டில் பொன்னும் பொருளும் ஒருசேர தந்தருளும் ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகாசலக் குமரன் கோவில்

26.11.21 வெள்ளி


அருள்மிகு கனகாசலக் குமரன் திருக்கோவில் 

எழுமாத்தூர்-638104 

ஈரோடு மாவட்டம்

இருப்பிடம்: ஈரோடு 22 கிமீ


மூலவர்: கனகாசலக் குமரன்

தல விருட்சம்: இலந்தை மரம் 


தலமகிமை:

ஈரோடு-வெள்ளக்கோவில் சாலையில் ஈரோட்டில் இருந்து 22-வது கிமீ-ல் எழுமாத்தூர் கனகாசலக் குமரன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரின் மலைப்பகுதியில் வீற்றிருந்து அனைவருக்கும் அருளையும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறான் மால் மருகன். இத்தலத்தில் முருகபெருமானின் திருநாமம் கனகாசலக் குமரன். மருமகன் குமரனின் கோவிலில் மாமன் மாலன் சந்நிதியும் இருப்பது சிறப்பு.


இத்தலத்தில் இலந்தை மரத்தடியில் ஏழு கன்னிமார்களுடன் வீற்றிருக்கும் விநாயகப் பெருமான் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, கனகசாலக் குமரனை பக்தர்கள் வணங்கினால் வீட்டில் பொன்னும் பொருளும் சேரும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர் 


செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள..


தலவரலாறு:

ஒருமுறை, பத்தரை மாற்றுத் தங்கத்துக்காக, அகத்திய முனிவரின் அறிவுரைப்படி புலிப்பாணிச்சித்தர் இந்த மலையைக் குடைந்தபோது, முருகக்கடவுளின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், ஏழரை மாற்றுத் தங்கம் மட்டுமே அவருக்குக் கிடைத்ததாம். எனவே இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்’ என அழைக்கப்பட்டு, பிறகு ஏழரைமாத்தூர் என மருவி, தற்போது எழுமாத்தூர் என மாறிவிட்டதாகச் சொல்கின்றனர் ஊர்க்காரர்கள். மலையின் பெருமையை அறிந்த ஊர்மக்கள், மலை உச்சியில் முருகப்பெருமானுக்குக் கோவில் எழுப்பினர். தங்கத்தைத் தந்த மலை என்பதை உணர்த்துவதற்காக, கனகாசலக் குமரன் எனும் திருநாமம் சூட்டி, கந்தக் கடவுளை வழிபடத் துவங்கினர்.


தலஅமைப்பு:

கருவறையில் கனகாசலக் குமரன் அழகுற வீற்றிருந்து தன்னைத் தேடி வரும் அன்பர்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக அருள்பாலிக்கின்றார். இத்தலத்தில் உள்ள விநாயகரும் சப்தகன்னிமார்களும் அருள் புரிகின்றனர். மேலும், காடு, கரைகளை நிறைக்கச் செய்யவும், மாடு, கன்றுகளை பெருக்கச் செய்யவும் மலையில் கிருஷ்ணருக்குக் கோவில் எழுப்பினார்கள். பாமா-ருக்மிணி சமேதராக மருமகன் கனகாசலக் குமரன் இருக்கும் தலத்தில் அழகு ததும்ப அருள்பாலிக்கின்றார் கிருஷ்ண பகவான்.


திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம்


பிரார்த்தனை:

பொன், பொருள் வேண்டி, நல்ல வாழ்க்கைத்துணை அமைய, குழந்தையருள் கிட்ட


நேர்த்திக்கடன்:

ஐந்து செவ்வாய்க்கிழமைகள் முருகனுக்கு விளக்கேற்றுதல், அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 5- 8 மாலை 4-8


ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகாசலக் குமரனை மனதார தரிசித்து எல்லா நலனும் வளமும் பெற்றிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏


படம் 1 -  நல்வாழ்க்கை அமைய அருள்புரியும் எழுமாத்தூர் கனகாசலக் குமரன்



படம் 2 - பொன்னும் பொருளும் ஒருசேர தந்தருளும் ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகாசலக் குமரன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்