கோவில் 168 - கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-168
விரும்பிய வாழ்க்கைத் துணை தந்தருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி கோவில்
23.11.21 செவ்வாய்
அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்
சரவணம்பட்டி-641035
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம்: கோவை பேருந்து நிலையம் 13 கிமீ
மூலவர்: ரத்தினகிரி முருகன்
தலமகிமை:
கோவை பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவில் விரும்பிய வாழ்க்கைத் துணையை தந்தருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி கோவில்
அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் பூப்பறிக்கும் சடங்கு (நோன்பு) என்ற நிகழ்வு மாட்டுப் பொங்கல் தினத்தன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். முறைப்பையனும், முறைப்பெண்ணும் பொங்கலுக்கு மறுநாள் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் திருமண வாழ்வுச் சிறக்க வேண்டி முருகனுக்கு மாலையணிவித்து, தங்கள் திருமணம் தடையின்றி சிறப்பாக வழிபடுவர் பக்தர்கள் தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை அமைய, திருமணத்தடை நீங்க, திருமணமாகாதவர்கள் திருமணம் நடைபெற தங்கள் கைகளாலேயே பூப்பறித்து, மாலைக்கட்டி கந்தனுக்கு அணிவித்து வழிபாடு செய்கின்றனர். பூப்பறிக்கும் விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு, 16 வகை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்படும். குமரக்கடவுள் சோமஸ்கந்தர் அலங்காரத்தில் ஜொலிப்பது.கண்கொள்ளா அழகு. இத்தலத்தில், ஆதியில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் புடைப்புச்சிற்பமாக அருள்பாலிப்பது சிறப்பு.
தலவரலாறு:
பேராசை மிக்க அரக்கன் ஒருவன் உலகம் முழுவதையும் ஆளும் வரம் பெறுவதற்காக சிவப்பெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அவனது கடுமையான தவத்தை மெச்சிய பெருமான் அவன் விரும்பிய வரமருளினார். தேவர்கள் முதலானோரை அரக்கன் துன்புறுத்தினான். ஒரு முறை தேவர்களின் தலைவன் இந்திரனை தாக்க முயன்றபோது, இந்திரன் கோயம்புத்தூர் ரத்தினகிரி மலையில் ஆசிகள் வழங்கிக் கொண்டிருக்கும் முருகப்பெருமானிடம் தஞ்சம் அடைந்தார். இந்திரனை காக்க முடிவு செய்த குமரக்கடவுள், அவரை மயிலாக மாற்றி தனது வாகனமாக வைத்துக்கொண்டார். பின்னர் இவ்விடத்தில் கோவில் எழுப்பப்பட்டது.
முன்பொரு சமயம் முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியமின்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஒரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோவிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான் அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார் அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான்தான். என அறிந்து கொண்டார் முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம்.
தல அமைப்பு:
கருவறையில் முருகப்பெருமான் நான்கு கரங்களுடன் [அபய-வரத கரங்கள்] நின்ற கோலத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். பெருமானது அழகிய திருமேனி சந்தன காப்பில் ஜொலிக்கும். அருகே வேல் தரிசனமும், வாகனமான மயில் தரிசனமும் சிறப்பு. வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் பேரெழில் கொண்டு அருள்கிறார். முருகன் சிலை அருகில் விநாயகர் பாறையில் சுயம்பாக எழுந்தருளி ஆசி வழங்குகின்றார்.
திருவிழா:
தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மாட்டுப்பொங்கல், தை அமாவாசை பிரதி கார்த்திகை, அமாவாசை
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, \ புத்திர பாக்கியம் கிட்ட, பயம், நோய்கள், மனக்குறைகள் அகல, தொழில் விருத்திyadaiya, செல்வம் பெருக, பவுர்ணமி கிரிவலம்
நேர்த்திக்கடன்:
பால்குடம், பாலாபிஷேகம், பிற அபிஷேகங்கள், அலங்காரம், வன்னி இலைகளால் அர்ச்சனை சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-2 மாலை 4-7.30
திருமணம் சிரமமின்றி நடைபெற, பெண்ணும், ஆணும் பூப்பறித்தல் நோன்பு இருந்து கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி ரத்தினகிரி முருகனை வழிபட்டால் அவர்கள் நினைத்த வாழ்வு அமையும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பூப்பறித்தல் நோன்பு அனுஷ்டித்தால், நல்வாழ்க்கை துணையை தந்தருளும் கோவை சரவணம்பட்டி ரத்தினகிரி முருகன்
படம் 2 - புத்திர பாக்கியமருளும் தேவியர் சமேத உற்சவர் ரத்தினகிரி முருகன்
Comments
Post a Comment