கோவில் 164 - திருப்புகழ் முருகன் தலம் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-164
2021 திருக்கார்த்திகை தீபத்திருநாளில் மலையே சிவனாகவும், அழகான பாலமுருகனையும் ஒரு சேர தரிசிக்கும் திருப்புகழ் முருகன் தலம் சிவகங்கை மாவட்டம் பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில்
19.11.21 வெள்ளி
அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோவில் (பாலமுருகன் உபக்கோவில்)
பிரான்மலை-630502
சிவகங்கை மாவட்டம்
இருப்பிடம்: சிங்கணம்புரி 8 கிமீ, பொன்னமராவதி 16 கிமீ,
மூலவர்: கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர், உமாமகேஸ்வரர்
தாயார்: குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள், அமிர்தேஸ்வரி
நாயகன்: பாலமுருகன்
தலவிருட்சம்: உறங்காப்புளி, பெயரில்லா மரம்
தீர்த்தம்: மதுபுஷ்கர்ணி, தேனாழி தீர்த்தம் குஷ்டவிலக்கி சுனை
புராணப்பெயர்: எம்பிரான்மலை, திருக்கொடுங்குன்றம்
பழமை: 2000 வருடங்கள்
பாடியவர்கள்: சம்பந்தர், அருணகிரிநாதர்
தலமகிமை:
சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரியிலிருந்து 8 கிமீ தொலைவில் மலையே சிவனாகவும், அழகான பாலமுருகனையும் ஒரு சேர தரிசிக்கும் பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையைப் போன்று மலையே சிவனாகக் காட்சியளிக்கின்றது பிரான்மலை கொடுங்குன்றநாதர் ஆலயம். சிவபெருமான் தமது அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாக கார்த்திகை தீபத்திருநாளான இன்று அனைத்து சிவாலயத்திலங்களிலும், முருகன் ஆலயங்களிலும் மகாதீபம் அல்லது சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலம். சம்பந்தரின் பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்து பாலமுருகன் மீது இரு பாடல்கள் பாடியுள்ளார்.
ஒரே நேரத்தில் சிவனாரின் அருள்தலமாகவும், அம்மை-அப்பன் திருமணத்தலமாகவும், தேவர்கள் கூடிய பேரூராகவும், குன்றாடும் குமரனின் சிறப்புத்தலமாகவும், கோவில் கட்டுமானப் பெருமைக்கான குடைவரைத்தலமாகவும், அமர்ந்த நவக்கிரகங்களைக் கொண்ட அற்புதத்தலமாகவும், பெயரில்லா மரமே தலவொருட்சமான விநோதத்தலமாகவும், குன்றக்குடி ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அழகுத்தலமாகவும், பைரவப்பெருமானின் பெருமிதத்தலமாகவும் திகழ்கிற திருத்தலம். இத்தனை சிறப்புகள் வேறு எந்த தலத்திலும் இல்லை. .
மூன்றடுக்கு சிவாலாயமான இம்மலைக்கோவிலில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் சிவப்பெருமான் காட்சியருள்கின்றார். .பாதாளத்தில் உள்ள கோவிலில் கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகியுடன் அருள்பாலிக்கின்றார். பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர் அருள்பாலிக்கின்றார். மேல்நிலை கோவிலாக கைலாயம் எனப்படும் பகுதியில் தேனாம்பிகையுடன் மங்கைபாகராக திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தருகின்றார். நந்தித்தேவர் கல்யாணத்தில் மத்தளம் வாசித்ததால், இத்தளத்தில் நந்தி இல்லை. மங்கைபாகர் மூர்த்தம் நவமூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. பெளர்ணமியன்று காலையில் நவபாஷாண சிலைக்கு புணுகு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். அதே சந்நிதியில் காசிராஜன் கொடுத்த உடையவர்லிங்கம் என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால் அவருக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் அனைத்தும் இந்த லிங்கத்திற்கே செய்யப்படுகின்றது. தினம் தினம் அம்மையும் அப்பனும் புத்தாடை உடுத்துவது தலச்சிறப்பு.
மலையெங்கும் மூலிகைகள் நிறைந்துள்ளன. சுவாசக்கோளாறுகள் உள்ளவர்கள் இம்மலையேறினால் அதில் உள்ள மூலிகை காற்றை சுவாசிக்க அப்பிரச்சனை தீரும் என்று பக்தர்கள் இன்றும் மலையேறுகின்றனர். சிறப்பு மிக்க இத்திருக்கோவில் தீர்த்தம் குஷ்டவிலக்கி சுனை என்று அழைக்கப்படுகிறது. இச்சுனையின் நீரில் நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொள்ள ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
இக்கோவிலில் உள்ள பைரவருக்கு சித்திரை திருவிழாவின்போது, பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபடுகின்றனர் முருகனைப்போல, பைரவரும் சிவனிலிருந்து தோன்றியவர் என்பதன் அடிப்படையில், பால்குடம் எடுக்கிறார்கள். ஞாபகமறதி, பயப்படும் குணம் உள்ளவர்கள் இவருக்கு சம்பா சாதம் படைத்து, மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். பைரவருக்கென தனி தீர்த்தமும் உள்ளது.
இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும். இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும். இது தவிர, மங்கைபாகர் சந்நிதிக்கு மேலே ஒரு பாறையில் "பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில் ஒரு செடி உள்ளது. இதற்கு பெயர் கிடையாது என்பதால், இவ்வாறு அழைக்கிறார்கள். இச்செடியும் பூப்பதில்லை.
தலவரலாறு:
இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்தது. இதையடுத்து இத்தலத்தில் தன் பாதங்கள் படக்கூடாது என ஐந்து மைல் தூரத்தில் நின்றே இத்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார். எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவே இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனும், முல்லைக்குத் தேர் ஈந்தவனுமான பாரி வள்ளல் ஆட்சி செய்த இடமான இது. பறம்பு நாடு என்றும், இம்மலை பறம்பு மலை என்றும் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி பிரான்மலையானது..
தல அமைப்பு:
அருணகிரிநாத பெருமானுக்கு இத்தலத்தில் முருகன் நடனக்காட்சி காட்டியதாக ஐதீகம். தனிச்சந்நிதியில் இருக்கும் இந்த முருகன், வயோதிக கோலத்தில் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். வழக்கமாக முருகன் சந்நிதி எதிரில் மயில் வாகனம்தான் இருக்கும். ஆனால், இவரது சந்நிதி எதிரில் யானை வாகனம் இருக்கிறது. முருகன் சந்நிதி எதிரில், 18 துவாரங்களுடன் கூடிய பலகணியுடன் (ஜன்னல்) மதில் உள்ளது. இம்மதில் வழியாகத்தான் யானையைப் பார்க்க முடியும்
தைப்பூசத்தன்று முருகன். இக்கோவிலிலிருந்து சற்று தூரத்திலுள்ள பாலாறு தீர்த்தத்திற்கு சென்று தீர்த்தவாரி உற்சவம் காண்கிறார். முருகன், பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார். இந்த லிங்கங்கள் கொடுங்குன்றநாதர் சந்நிதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், ராமலிங்கம் என்ற பெயர்களில் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களுக்கும் மத்தியில் முருகன், பால ரூபத்தில் தந்து அருள்பாலிக்கின்றார். இந்த அமைப்பை, மகனுக்கு பாதுகாப்பாக இருக்கும் வகையில் தந்தை இருபுறமும் காவலராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மகாசிவராத்திரியின்போது சுற்றுவட்டார மக்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து, பாலமுருகனை தரிசித்து வழிபடுகிறார்கள். அன்று முழுவதும் பாலமுருகனின் வேலாயுதத்துக்கு அபிஷேகம் நடைபெறும். அதேபோல், மாதந்தோறும் வரும் கிருத்திகை நாளிலும் வேலுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பால்குடம் எடுத்து வந்து இந்த முருகனை வழிபட்டால், திருமண வரமும் குழந்தை பாக்கியமும் விரைவில் கிடைக்கும் என்பது ஐதிகம். பிராகாரத் அறுபத்துமூவர். முக்குறுணி விநாயகர், சிறப்பு மிக்க பைரவர், அமர்ந்த கோலங்களில் நவக்கிரகங்கள் மற்றும் பல தெய்வங்களும். அருள்புரிகின்றனர்.
திருவிழா:
திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, தைப்பூசம், சித்திரை பிரம்மோற்சவம், மாதக்கிருத்திகை,
பிரார்த்தனை:
சுவாசக்கோளாறு நீங்க, தோல் வியாதி குணமாக, தம்பதியர் ஒற்றுமை உண்டாக, தோஷங்கள் விலக, பயங்கள் தனிய, ஞாபகமறதி குணமாக, திருமண வரம் வேண்டி, குழந்தை பாக்கியம் வேண்டி
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 6 - 12 மாலை 4-8
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் செய்த பாவங்கள் நீங்க, மூன்றடுக்குள்ள சிவாலயமான பிரான்மலை மங்கைபாகரையும் தோஷங்கள் நீக்கியருளும் பாலமுருகனையும் தரிசனம் செய்து பேறு பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - திருவண்ணாமலையைப் போலவே மலையே சிவனாகவும், சிவனே மலையாகவும் அருள்பாலிக்கின்ற அற்புத தலமான சிவகங்கை மாவட்டம் பிரான்மலை
படம் 2 - தோஷங்களை நீக்கியருளும் பிரான்மலை பாலமுருகன் சிவகங்கை மாவட்டம்
Sivagangai piranmalai balamuruganuku arohara. Thanks for this post Iya
ReplyDelete