கோவில் 162 - நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-162
கார்த்திகை மாத பிறப்பன்று வணங்கி பலன் பெறும் நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
17.11.21 புதன்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அலவாய்ப்பட்டி–637505
வெண்ணந்தூர்
நாமக்கல் மாவட்டம்
இருப்பிடம்: ராசிபுரம் 8 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தீர்த்தம்: மருந்து சுனை
பாடியவர்: அருணகிரிநாதர் (1)
தலமகிமை:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து கிமீ தொலைவில் உள்ள வெண்ணந்தூரில்
அலவாய்ப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொங்கணச் சித்தர் நீண்டகாலம் தங்கி வழிபட்டதால், இந்த மலை, கொங்கண மலை என்றழைக்கப்பட்டு, தற்போது அலவாய் மலை என்றும் பின்னர் அலவாய்ப்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
அழகு ததும்பும் மலையில் முருகப்பெருமான் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார். பெருமானின் முன்பாக, மயிலும் நந்தியும் ஒருங்கே அமைந்திருப்பது சிறப்பு. கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கள்) வேலவனை வேண்டினால் அடுத்த கார்த்திகைக்குள் குடும்ப பிரச்னைகள் தீரும். பிரிந்தவர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிட்டும். கந்த சஷ்டியில் விரதமிருந்து, நெய் தீபமேற்றி வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் எனச் சிலாகிக்கின்றனர்.
!
இங்கேயுள்ள சுனை நீர் வற்றவே வற்றாத தீர்த்தம். இந்த நீரைப் பருகிவிட்டு முருகப்பெருமானைத் தரிசித்தால், பெண்களுக்குப் பூப்படைவதில் உள்ள சிக்கல்கள் நீங்கும்; விரைவில் பூப்பெய்துவார்கள் என்கின்றனர். கர்ப்பப்பை கோளாறுகளால் அவதிப்படும் பெண்களும் இந்த சுனைநீர் தீர்த்தத்தைப் பருகினால், குணம் பெறுவார்கள்.
தலவரலாறு:
.'கந்தக்கடவுளை வணங்கிச் செல்; வெற்றி நிச்சயம்!' என்று சித்தர் ஒருவர் மன்னர் ராஜேந்திர சோழனிடம் சொல்ல, அதன் படி வேலவனை வழிபட்டுப் போர்க்களம் சென்ற மன்னர், போரில் வெற்றி பெற்றார்.. அவர் இந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டினார் என்கிறது தல வரலாறு.
பழனியில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவித்து மருகிய ஒரு பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, அலவாய் மலையைக் குறிப்பிட்டுச் சொல்லி, 'பக்தர்களுக்கு வசதியாக மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடு. இந்தப் பணி முடியும் வேளையில், உனக்குக் குழந்தை பிறக்கும்' என்று அருளினாராம். அதன்படி, அந்தப் பக்தர் வந்து, கந்தனைத் தரிசித்து, முருக பக்தர்களுக்கு மலையில் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தார். அந்தப் பணி முடிவுறும் நேரத்தில் அவருக்குக் குழந்தை பிறந்துதாகவும் சொல்வர்.
தல அமைப்பு:
கருவறையில் மூலவராக முருகப்பெருமான் அழகிய தோற்றத்தில் பாலசுப்பிரமணியசுவாமியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வேலவன் சந்நிதியி முன்பாக மயிலும் நந்தியும் ஒருங்கே இருப்பது இக்கோவிலில் மட்டுமே என்பது தனிச்சிறப்பு. கந்தக் கடவுள் குடிகொண்டிருக்கும் இம்மலையில் ஆஞ்சநேயர், தெற்குப் பார்த்தபடி காட்சி தருகிறார். இவரை வணங்கினால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை.
திருவிழா:
திருக்கார்த்திகை தீபத்திருநாள், கார்த்திகை சோமவாரம் (பிரதி திங்கள்), கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கிருத்திகை
பிரார்த்தனை:
குடும்ப பிரச்னைகள் தீர, பிரிந்தவர் ஒன்று சேர, குழந்தைப்பேறு வேண்டி, பெண்கள் பூப்படைவதில் உள்ள சிக்கல்கள், கர்ப்பப்பை கோளாறுகள், நோய்கள், துன்பங்கள் நீங்க, சனி தோஷம் நீங்க, கல்வி, ஞானம் மேம்பட
நேர்த்திக்கடன்:
நெய் தீபம் ஏற்றல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்,
திறக்கும் நேரம்:
காலை 6-10 மாலை 5-8
குடும்ப பிரச்னைகள் தீரவும், பெண்களின் உடல் கோளாறுகள் சரியாகவும் அருளும் நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமியை வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கார்த்திகை மாத பிறப்பன்று கல்வி ஞானம் மேம்பட அருளும் நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி
படம் 2 - குடும்ப பிரச்னைகள் தீரவும், பெண்களின் உடல் கோளாறுகள் சரியாகவும் அருளும் நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி
Alavaaypati Balasubramaniya Swamiku Arohara. Thanks for this post Iya.
ReplyDelete