கோவில் 156 - மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-156
தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளும் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
11.11.21 வியாழன்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
பெரம்பூர் - 609402
தரங்கம்பாடி தாலுகா
மயிலாடுதுறை மாவட்டம்
இருப்பிடம்: மயிலாடுதுறை 15 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
அம்மன்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம் – பிரம்பில்
தீர்த்தம்:புஷ்கரணி
புராணப்ப்பெயர்: புஷ்கரணி
தலமகிமை:
மயிலாடுதுறையிலிருந்து 15 கிமீ தூரத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளும் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பொதுவாக சிவன் கோவில்களில் சிவன் சந்நிதிக்கு பின் புறம் வடமேற்கு திசையில் முருகனுக்கு தனி சந்நிதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சந்நிதியில் குபேரலிங்கேஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. இது போன்ற அமைப்புள்ள கோவில்களை காண்பது மிகவும் அரிது.
முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகத்துடன் திகழ்கிறார். தெய்வானை இங்கு தனி சந்நிதியில் அருளுகிறாள். பெரும்பாலான முருகன் கோவில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் முருகனின் சிறப்பம்சங்களில் ஒன்று பிரம்மாக்கும், மயிலுக்கும் இத்தலத்தில்தான் உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது.
மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது: திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
தலவரலாறு:
தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை மணந்தாள். ஒரு சமயம் தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். இதில் பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் கலந்து கொண்டனர். இதனால் . பிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டது. பிரம்மா சிவனிடம் சாப விமோசனம் வேண்டினார். மனமிரங்கிய சிவன் பூலோகத்தில் தீர்த்தம் உண்டாக்கி என்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார். அதன்படி வழுவூர் என்னுமிடத்தில் வீரட்டேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கம் எழுப்பி வழிபட்டு பிரம்மா சாபம் நீங்கப்பெற்றார். அத்துடன் அருகில் உள்ள பிரம்ம மங்களபுரத்தில் (பெரம்பூர்) தந்தைக்கு உபதேசம் செய்த சுப்பிரமணியரை வணங்கி ஞான உபதேசமும் பெற்றார்.
ஞான குரு: தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த சூரபத்மனை முருகப்பெருமான் அழித்தார். மயிலாகவும், சேவலாகவும் மாறிய சூரபத்மன் முருகனின் ஞான உபதேசம் பெற விரும்பினான். பிரம்மனுக்கும், மயிலுக்கும் முருகன் ஞான உபதேசம் செய்ததால், முருகன் ஞான குருவாக விளங்குகிறார்.
தல அமைப்பு:
கிழக்கு நோக்கிய நிலையில் ஐந்து நிலைகளுடன் கூடிய பிரமாண்ட கோபுரம். இரண்டு பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என கோவில் பெரியதாக அமைந்துள்ளது. கோவில் வாசலில் விநாயகருக்கும் இடும்பனுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் ஆறுமுகங்கள், 12 திருக்கரங்களுடன், மயில்மீது அமர்ந்தபடி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமான் ஞானகுருவாக விளங்குகிறார். மேலும் குக தட்சிணாமூர்த்தி, குக சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர். அப்பர் தேவாரத்தில் இத்தலம் தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. தை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள துர்க்கைக்கு விசேஷமான முறையில் விளக்கு பூஜை செய்யப்படுகிறது. ஆதிவிநாயகர், மகாவிஷ்ணு, ஐயப்பன், துர்க்கை, பிரம்மபுரீஸ்வரர், ஆனந்தவல்லி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, பிரம்மா, நந்தி, நவக்கிரகம் சந்நிதிகள் உள்ளன.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல்.
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பலன் வேண்டி
நேர்த்திக்கடன்:
சண்முகார்ச்சனை,, காவடி எடுத்தல்,, பாலாபிஷேகம், பிற அபிஷேகம், சந்தன காப்பு, பிற அலங்காரம், சிறப்பு பூஜைகள்
திறக்கும் நேரம்:
காலை 6-11.30 மாலை 4.30-8.30
சம்ஹாரம் முடிந்த பின் மயிலான சூரன் உபதேசம் பெற்ற தலமான நாகப்பட்டினம் மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமியை நாமும் வேண்டி எல்லா ஞானங்களும் பெறலாம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - சூரன் மயிலான பின்பு உபதேசம் அருளிய ஞான குரு பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி மயிலாடுதுறை மாவட்டம்
படம் 2 - கடன் சுமையை நீகியருளும் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி
Permaboor subramaniya swamiku arohara. Thanks for this post Iya
ReplyDelete