கோவில் 155 - சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவில் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-155
சிக்கல்களை சீர்செய்யும் சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவில்
கோவில்
10.11.21 புதன்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
15 டேங்க்
சிங்கப்பூர் 238065
இருப்பிடம்: சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் கிளமென்சியு அவென்யூ பகுதியில்
மூலவர்: தண்டாயுதபாணி
தலமகிமை:
சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் கிளமென்சியு அவென்யூ பகுதியில் சிக்கல்களை சீர்செய்யும் தண்டாயுதபாணி கோவில் சிறப்புற அமைந்துள்ளது. திருக்கோவிலின் மண்டபத்தூண்களில் முருகப்பெருமானின் 6 படைவீடுகள் 6 சிலைகளாக நிறுவப்பட்டுள்ளன. கோவிலின் விமானத்தைச் சுற்றியுள்ள 48 கண்ணாடி மாடங்களில் தெய்வச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபச்சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது. ஆனந்த தாண்டவ நடராஜரும், சிவகாமி அம்மையும், மாணிக்கவாசகரும் சுதைச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு அருள்புரிகின்றனர்.
இந்த ஆலயத்தின் பிரதான விழாவாக, தைப்பூசம் திகழ்கிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் தீய சக்திகளை வெற்றி கொண்டதன் ஐதீகத்தில், தை மாதப் பவுர்ணமியில் வரும் பூச நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் முதல்நாள் வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக புறப்படும் முருகப்பெருமான், கியொங் செய்க் சாலையில் உள்ள ‘லயன் சித்தி விநாயகர்’ ஆலயம் சென்று, அங்குள்ள விநாயகரிடம் ஆசி பெற்று வேலினைப் பெற்றுக்கொண்டு, காவடிகள் சூழ ஊர்வலமாக மீண்டும் ஆலயம் திரும்புவார்.
தைப்பூசத் திருநாளன்று ஏராளமான பக்தர்கள், சிராங்கூன் சாலையிலுள்ள உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலிலிருந்து 3 கிமீ தொலைவிலுள்ள தண்டாயுதபாணி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். அலகு குத்தியும், அலகு குத்திய காவடி, ரதக்காவடி என பல்வேறு விதமான காவடிகளயும் எடுத்து வருகின்றனர். பெண்கள், பால்குடங்களைத் தலையில் சுமந்தபடி ஆலயம் வந்து, வேலுக்கு அபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். அன்னதானமும் வழங்கப்படுகிறது.
தலவரலாறு:
1820-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு குடியேறிய நகரத்தார் சமூகத்தினர், 1859-ம் ஆண்டு இங்கு முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். தொடக்க காலத்தில் இன்றைய ரிவர் வேலி சாலையும், கிளமென்சியு அவென்யூம் சந்திக்கும் பகுதியில் குளக்கரையின் அரச மரத்தடியில் வேல் ஒன்றை நிறுவி வழிபாடு செய்து வந்தனர். பின்னர் தனி ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் முருகனின் சந்நிதி மட்டுமே இந்த ஆலயத்தில் இருந்திருக்கிறது. 1878-ம் ஆண்டு, ஜம்பு விநாயகர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், இடும்பன், தட்சிணமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, பைரவர், நவதுர்க்கை மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் அமைக்கப்பட்டன.
தல அமைப்பு:
சிங்கப்பூர் நகரின் டேங்க் சாலையில், பிரம்மாண்டமான பரப்பளவில் இந்த முருகப்பெருமான் ஆலயம் அமைந்திருக்கிறது. ஐந்து நிலை கொண்ட 75 அடி உயர ராஜகோபுரம் நம்மை கம்பீரத் தோற்றத்துடன் வரவேற்கிறது. ஐந்து கலசங்களைத் தாங்கி நிற்கும் கோபுரம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததும் மகா மண்டபம் உள்ளது. நேரெஎதிரில் மூலவரான முருகப்பெருமான், ‘தண்டாயுதபாணி’ என்ற திருப்பெயருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றித் தரும் வள்ளலாக இந்த ஆலய இறைவன் திகழ்கிறார். நாள்தோறும் நடைபெறும் நீராட்டு அபிஷேகம் வேலுக்கே செய்யப்படுகிறது. இங்கு வந்து வழிபடுபவர்களின் சிக்கல்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை ஆலயத்தின் கருவறையில் வலதுபுறம் ஜம்பு விநாயகர், இடதுபுறம் இடும்பன், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் சந்நிதிகளில் வீற்றிருந்து அருளுகின்றனர். நவக்கிரக சந்நிதியும்,. ஆலயத் திருச்சுற்றில் விழா மண்டபமும் உள்ளது.
திருவிழா:
தைப்பூசம் (வெள்ளி ரதம்], கந்தசஷ்டி, , லட்சார்ச்சனை, கார்த்திகை தீபத் திருவிழா, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை
பிரார்த்தனை:
சிக்கல்களை சீர்செய்ய, வேண்டுதல்கள் நிறைவேற, ஐஸ்வர்யம் பெருக
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், அலகு குத்துதல், அலகு குத்திய காவடி, ரத காவடி, பால்குடம், வேலுக்கு அபிஷேகம் செய்தல், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாலை 5.30-8.30
வேண்டுதல்கள் நிறைவேற்றும் சிங்கப்பூர் தண்டாயதபாணியை சிரம் தாழ்த்தி தொழுது மகிழ்வோம் !
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - சிக்கல்களை சீர்செய்யும் சிங்கப்பூர் தண்டாயுதபாணி பெருமான்
படம் 2 - ஐஸ்வர்யம் பெருக அருளும் சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச காவடிகள்
Singapore thandayudhapani swamiku arohara. Thans for this post Iya.
ReplyDelete