கோவில் 153 - மலேசியா பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-153
அருள் தந்து பொருள் தந்து அருளும் மலேசியா பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோவில்
8.11.21 திங்கள்
அருள்மிகு பினாங்கு தண்ணீர்மலை முருகன் திருக்கோவில்
வாட்டர்ஃபால்ஸ் ரோடு (Waterfalls Road)
ஜலன் கெபு புங்கா (Jelan Kebu Bunga)
பினாங்கு-10350
புலவ் பினாங்கு, மலேசியா
இருப்பிடம்: கோலாலம்பூர் 295 கிமீ
மூலவர்: பாலதண்டாயுதபாணி
தலமகிமை:
தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படை வீடுகள் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. அவை கோலாலம்பூர் பத்துமலை (6.7.21 பதிவு), பினாங்கு தண்ணீர்மலை (8.7.21 இன்றைய பதிவு 8.11.21) ஈப்போ கல்லுமலை ஆகும் (நாளைய பதிவு 9.11.20). இவ்விழாக்களில் தமிழர்கள் மட்டுமன்றி மலேயர்களும், சீனர்களும் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தைப்பூசத்தன்று ஐந்து மாநில அரசுகள் பொதுவிடுமுறை அளிப்பதும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
மலேசிய நாட்டின் தனித்தீவு நகரம் பினாங்கு. மாலாக்கா நீரிணையில் அமைந்த நிலப்பகுதி. இதன் தலைநகரம் ஜார்ஜ் டவுனில் தண்ணீர்மலை முருகன் ஆலயம் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் தண்ணீர்மலை அடிவாரத்தில் வழிபட்டு வந்த வேல், இன்று தண்ணீர்மலையின் உச்சியில் அமைந்து, ஆன்மிகப் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது. மலையுச்சியில் கொடிமலை முருகன் ஆலயமும் உள்ளது.
மலேசிய அரசு தைப்பூசத் திருநாளைப் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இவ்விழாவில் நூற்றாண்டுகள் பழமையிக்க வெள்ளி ரதத்தில் தண்ணீர் மலையான் வண்ணக் கோலத்தில் நகர் வலமாய் வந்து, பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் உலா வருவார். 1894-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி நகரிலிருந்து இந்த வெள்ளி ரதம் செய்யப்பட்டு பினாங்கு நகருக்கு கொண்டு வரப்பட்டது. பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி, இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் காணிக்கையாக எடுத்து வரப்படுகின்றன. தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் லட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்துகொள்வது சிறப்பம்சமாகும்.
பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்த சஷ்டி திருநாள், தண்ணீர்மலை முருகனின் தனிப்பெரும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது. இந்த கந்த சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் தண்ணீர்மலையான் முறையே பால சுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வாணை திருமண மணாளன், வள்ளியம்மை திருமண மணாளன் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார்.
ஒவ்வொரு தமிழ் ஆண்டுப் பிறப்பான சித்திரை முதல் நாளில் சித்திரைப் பூஜை விழா, அதை அடுத்து சித்ரா பவுர்ணமி பூஜை விழா (மகேஸ்வர பூஜை) சிறப்பாக நடைபெறுகிறது. எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அடுத்து ஆடி அமாவாசையிலும் (ஆடி பூஜை) மகேஸ்வர பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரங்களில் சங்கு நீராட்டும், சண்முக .அர்ச்சனையும் நடைபெறுகின்றது. காலையில் காலசந்தி பூஜை, மதியம் உச்சிக்கால பூஜை, மாலையில் சாயரட்டை பூஜை, இரவு அர்த்தசாம பூஜைகளும் நாள் வழிபாடுகளாக நடைபெறுகின்றன.
தலவரலாறு:
மூவேந்தர்களுக்கு பிறகு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சமூகம் திருக்கோவில்களை பாதுகாப்பதிலும் அதைப் பேணி முறையாக நடத்தி வருவதிலும், ஆலயங்கள் அமைப்பதிலும், புதிப்பிப்பதிலும் இன்று வரை எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றனர் .பினாங்கில் 1818-ம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், ஆறுபடை நாயகனான அருள்பொங்கும். தண்டாயுதபாணிக்கு, 9.8.1850-ல் பினாங்கு வீதியில் 138 எண் கொண்ட கோவில் வீட்டில் தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். இது மிகவும் ஆற்றல் மிக்க அருட்தெய்வமாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் பினாங்கு வாட்டர்ஃபால் ரோட்டில் 5 ஏக்கர் நிலம் ஒன்றை 1854ல் வாங்கி 12-12-1857-ல் தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. மேற்கூறிய இடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு ஆகம முறைப்படி அழகிய திருக்கோவில் கட்டுவதற்குரிய வரை படத்தை வரைந்தனுப்புமாறு பினாங்கு நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வேதாந்தத் திருமடமான கோவிலூர் ஆதீனத் தலைவராக விளங்கிய ஞானப் பேரொளி தவத்திரு வீரப்ட சுவாமிகளுக்கு மடல் வழி வேண்டுகோள் விடுத்து, அதற்கேற்க அன்னார் வரைந்தனுப்பிய வரைபடப்படியே தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி ஆலயம் அன்று அழகாகக் கட்டப்பட்டது. நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலை தமிழகம் காரைக்குடியிலிருந்து வந்த கட்டிடக் கலைஞர்கள் சிற்பிகளைக் கொண்டு, செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் கட்டினார்கள். இக்கோவில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல நீண்ட நேர் கோடு குறுக்கு நேர் கோடு) கூட்டல் குறி அமைப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தல அமைப்பு:
மலேசியாவின் பினாங்கு நகரில் தண்ணீர்மலையிலே முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அனைவரையும் ஆசீர்வதித்து அருள் தந்து, பொருள் தந்து வாழ வைக்கின்றார். கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, அதனுள் பழனி மலையில் இருப்பதைப்போன்று தண்ணீர்மலை முருகப்பெருமான், பாலதண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். அவரது நின்ற அழகுக் கோலம் கண் கொள்ளா அழகு. இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம், நந்தவனம், பின்புறம் தென்னந்தோப்பு போன்ற இயற்கை சூழலில், பினாங்கில் மிகப்பெரிய இந்துக் கோவிலாகத் திகழ்கின்றது.
தண்ணீர்மலைத் பாலதண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது. மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர். மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து வர வைக்கப்பெற்ற தேக்கு மரத்தால் ஆனது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள் என்பது இக்கோவிலின் சிறப்பம்சம், அடுத்த கீழ் வரிசையில், உலகப் புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் ரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும் வைக்கப்பட்டுள்ளன. தண்டம் என்றால் கோல். பாணி என்றால் கை என்று பொருள் தண்டத்தை கையிலே ஆயுதமாக கொண்டிருப்பதால் தண்டாயுதபாணி என்று முருகப்பெருமானுக்கு பெயர் விளங்குகின்றது. தென் கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்தது என்பது சிறப்பு எல்லாம் வல்ல முருகன் குடிக்கொண்டுள்ள இவ்வவாலயத்தில் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது.
திருவிழா:
தைப்பூசம்(3 நாள்), கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, தமிழ் வருட பிறப்பு, ஆடி பூஜை
பிரார்த்தனை
வேண்டியது நிறைவேற, ஐஸ்வர்யம் பெருக, அனைத்து பாக்கியங்களும் கிடைக்க
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, கரும்பு காவடி, இளநீர் காவடி
திறக்கும் நேரம்:
காலை 6.15-12.30 மாலை 4.15-8.45
ஐஸ்வர்யம் பெருக அருளும் மலேசியா பினாங்கு தண்ணீர்மலை முருகனை வணங்கி எல்லா நலன்களையும் பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - பக்தர்கள் துயர் துடைத்து நல்லருள்கள் அருளும் தண்னீர்மலை தண்டாயுதபாணி
படம் 2 - ஐஸ்வர்யங்களை அள்ளி அருளும் மலேசியா பினாங்கு தண்ணீர்மலை முருகன்
Malaysia thaneermalai muruganuku arohara. Thanks for this post Iya.
ReplyDelete