கோவில் 152 - இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-152

நல்லோரை காக்கும் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்

7.11.21 ஞாயிறு

                                                                                                                                                                                                                                                                                  

அருள்மிகு நல்லூர் கந்தசாமி திருக்கோவில்

யாழ்ப்பாணம் 

இலங்கை 

இருப்பிடம்: யாழ்ப்பாணம் 3 கிமீ, கொழும்பு 355 கிமீ –,


மூலவர்: வேல் 

உற்சவர்: முத்துக்குமார சுவாமி

தலவிருட்சம்: மாமரம்

தீர்த்தம்: ஷண்முக தீர்த்தம்


ஆலயம் பற்றிய நூல்கள்:

1.கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா.

2.இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா.

3.நல்லையந்தாதி.

4.நல்லைக் குறவஞ்சி.

5.நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல்.

7.திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி

8.உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி விஞ்சதி.

9.நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை வேலவருலா'.

10.ஆறுமுக நாவலரின் தனி நிலைச் செய்யுள் ஒன்று.


தலமகிமை:

இலங்கை நாட்டின் நல்லூர் கந்தசாமி திருக்கோவில். யாழ்ப்பாணம் நகரின் மிகப்பெரிய கோவிலாகும். இக்கோவில் புவனேகவாகுவால் எழுப்பப்பட்ட ஆலயம், வேலே மூலவராகத் திகழும் திருத்தலம் உட்பட பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக இத்தலம் விளங்குகிறது, 


கந்தசாமி கோவிலின் கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் திருவுருவம் இல்லை. கருவறையில் முருகப்பெருமானின் ஆயுதமான வேல்தான் மூலவராக வழிபடப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்  பாதுகாப்பு அரணாகத் திகழும் வெற்றிவேலைத்தான், இந்தக் கோவிலில் வழிபடு தெய்வமாக எழுந்தருளச் செய்திருக்கிறார் முருகப்பெருமான். திருவிழாக்களின்போது 'வேல்' வடிவத்தையே அலங்கரித்து, வாகனங்களில் எழுந்தருளச் செய்து வீதிவலம் வருகின்றனர். 


தமிழ் இலக்கியத்துக்கும் ஆன்மிகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் இந்தக் கோவிலின் பூஜைமுறைகளை நெறிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்திய ஆறுமுக நாவலருக்கு அவருடைய நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் ஒன்றும் கோவிலுக்கு இடப்புறம் அமைந்துள்ளது. சைவ சமயத்துக்கு அரும் தொண்டாற்றிய ஆறுமுகம் நாவலர், இலங்கையில் மட்டுமல்லாமல், தமிழகத்திலும் சைவம் தழைக்கச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிமண்டபத்தின் நுழைவாயிலில் வெளிப்புறம் திரும்பிப் பார்த்தபடி நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே, அமர்ந்த நிலையில், ஆறுமுக நாவலரின் திருவுருவச் சிலை உயிரோட்டத்துடன், கையில் புத்தகம் வைத்துக்கொண்டு படிப்பதுபோல் அமைந்திருக்கிறது. மண்டபச் சுவர்களில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டிருக்கின்றன. இந்த மண்டபத்தில் குழந்தைகளுக்கு தேவாரப் பாடல்கள் பண்ணோடு கற்றுக் கொடுக்கின்றனர்.


இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகவும், ஐப்பசி வெள்ளி மிகவும் புனித நாளாகவும் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான அடியவர்கள் விரதமிருந்து கந்தனை வழிபடுவார்கள். ஐப்பசி அமாவாசை தொடங்கும் கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரம் வரை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 


ஆடி அமாவாசை முடிந்து வரும் சஷ்டியில் பிரம்மோற்சவம் விழா தொடங்குகிறது. இந்த விழா தொடர்ச்சியாக 25 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பகலிலும் இரவிலும் வெவ்வேறு வாகனங்களில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி உற்சவத் திருமேனிகள் வீதி உலா வரும். விழாவின் போது பக்தர்கள் காவடி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணம், அடியழித்தல் முதலிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.


தலவரலாறு:

'யாழ்ப்பாண வைபவ மாலை', 'கைலாய மாலை' ஆகிய நூல்களில், யாழ்ப்பாணத்தை ஆண்ட கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சர்களுள் ஒருவரான புவனேகவாகு என்பவர் இந்தக் கோவிலைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், `15-ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த, 'கோட்டே' சிங்கள அரசரின் பிரதிநிதியாக இருந்து, பிற்காலத்தில் 'ஶ்ரீசங்கபோதி' என்னும் பட்டம் பெற்ற புவனேகவாகு என்னும் 'செண்பகப்பெருமாள்' என்பவரால் கட்டப்பட்டது’ என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்குச் சான்றாகக் கோவிலில் சொல்லப்படும் கட்டியத்தைச் சுட்டிக் காட்டுகின்றனர். இன்னும் சிலர், `புவனேகவாகு தன்னுடைய காலத்தில் ஏற்கெனவே இருந்த கோவிலைப் புதுப்பித்துக் கட்டியிருக்கலாம்’ என்றும் கூறுகின்றனர்.


தல அமைப்பு:

கிழக்கு நோக்கிய வாசல் கோபுரம் கலைநயம் கொண்டு தங்க நிறத்தில் ஒளி வீசுகிறது. ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரம் எழில் காட்சி சிறப்பு., இதில் புராணச் சிற்பங்கள் நிறைந்துள்ளன. இதன் இரு திசைகளிலும் மிதமான உயரத்தில் மணி கோபுரங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கும் கோபுரத்திற்கும் நடுவில் அர்த்தமண்டபம், ஆறுமுகசு வாமி கோவில் மண்டபம், முத்துக்குமார சுவாமி மண்டபம், ஸ்தம்பமண்டபம் அமைந்துள்ளன.


ஆலயத்தில் நடுநாயகமாக நல்லூர் கந்தசாமி விளங்குகின்றார். இங்கே வேல் வழிபாடே பிரதானம் என்பதால், கந்தன் வேலாயுதனாக, வேல் வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கின்றார். தீப ஒளியில் இக்கோலத்தைக் காணும்போது, நம் மெய்சிலிர்க்கின்றது.


பிள்ளையார், பைரவர், சந்தான கோபாலர், தெய்வானை, வள்ளியம்மை கோட்டங்கள் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளன. ஆறுமுகசு வாமி மண்டப வாசலின் எதிரே, தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. இதன் அருகே தண்டாயுதபாணி சுவாமி சந்நிதி, திருப்புகழ் மண்டபம் இருக்கின்றன. மேலும் பழனியாண்டவர் சந்நிதி, சூரியனுடன் தேவியர், உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரமாண்டத் தேர் கிழக்குவாசல் எதிரில் அமைந்துள்ளது.


திருவிழா:

ஆடி வளர்பிறை சஷ்டி, அனைத்து வெள்ளி, ஐப்பசி வெள்ளி, கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பொங்கல், தைப்பூசம், புத்தாண்டுப் பிறப்பு, நவராத்திரி, மார்கழி திருவெம்பாவை


பிரார்த்தனை 

வேண்டியது நிறைவேற விரதம் அனுஷ்டித்தல், வினைகள் தீர


நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், அங்கப் பிரதட்சணம், அடியழித்தல் 


திறக்கும் நேரம்:

காலை 4-5, 7.30-12 மாலை 3-6 (வெள்ளி முழு நேரம் திறப்பு)


வேலையே வேலவனாக வணங்கப்படும் இலங்கை நல்லூர் கந்தசாமியை  மனமாரத் தொழுது நல்ல குணங்களை பெற்றுக்கொள்வோம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25                

🙏🙏




படம் 1 - வேலையே வேலவனாக வணங்கும் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் மூலவர் வேல் வீதி உலா


படம் 2 - நல்லோரை காக்கும் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்

Comments

  1. Illangai yazhpahanam nalloor kantha swami muruganuku arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்