கோவில் 150 - இலங்கை கதிர்காமம் முருகன் கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-150 [திருப்புகழ் தலம்]

மனமொன்றி தரிசித்தால் நிச்சயம் பலன் தரும் இலங்கை கதிர்காமம் முருகன் கோவில்

511.21 வெள்ளி

அருள்மிகு கதிர்காமம் முருகன் திருக்கோவில்

திருப்புகழ் தலம்

கதிர்காமம்-91400

ஊவா மாகாணம் [யுவா மாகாணம்]

இலங்கை

இருப்பிடம் –, கொழும்பு 280 கிமீ, கண்டி 210 கிமீ


மூலவர்: கதிர்காம முருகன், கதிர்காம சுவாமி, கதிர்காமக் கந்தன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தீர்த்தம்: நவகங்கை தீர்த்தம்

பதிகம் பாடியவர்: அருணகிநாதர்  (13)


தலமகிமை:

நமது 150-வது ஆலயமாக, முருக வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் சிறப்புக் கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற முருகப்பெருமான் தலமான கதிர்காமம் கதிர்காம சுவாமி திருக்கோவிலாகும். கொழும்பிலிருந்து 280 கிமீ தோலைவிலும், கண்டியிலிருந்து 210 கிமீ தொலைவிலும் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. வள்ளியை மணந்த கந்தன் விரும்பிய திருத்தலம், கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசயக் கோவில், அருணகிரிநாதர் திருப்புகழ் அருளிய தலம், கி.மு. 3-ம் நூற்றாண்டில் புத்தர் தியானம் செய்த பதினாறு புனித தலங்களில் ஒன்று. அசோகர் மகள் சங்கமித்தை புத்த கயாவிலிருந்து புனித வெள்ளை அரசு மரக்கன்றைக் கொண்டு வந்து நட்ட பூமி, தமிழர்கள், சிங்களவர், சோனகர், இலங்கை வேடுவர், முகமதியர்கள், கிருத்துவர்கள் என பல்வேறு மதத்தினரும் வணங்கிய கோவில் என்று பல்வேறு சிறப்புக்கள் கொண்டத் தலமாக இத்தலம் விளங்குகிறது,


கந்தப்பெருமானின் புனிதத்தலமாக கதிர்காமம் விளங்கியதை இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. கதிர்- ஒளி, காமம்-அன்பு என்பது பொருளாகும். ஆறு கதிர்ப்பொறிகளால் தோன்றிய முருகப்பெருமான், வள்ளியம்மை மீது காதல் கொண்டு, மணம்புரிந்த இடமாதலால் ‘கதிர்காமம்’ என்பது பொருத்தமான பெயராகும். ஏமகூடம், பூலோகக் கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இன்றைய கதிர்காமம் வழங்கப்படுகிறது. அதேபோல பெருமானும் கதிர்காமசுவாமி, கதிரேசன், கதிரைநாயகன், கதிரைவேலன், மாணிக்கசுவாமி, கந்தசாமி, கந்தக்கடவுள், சிங்களர் வணங்கும் சிங்காரவேலர் என பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.


உலகிலேயே கதிர்காம முருகனுக்கு மட்டும்தான் உண்டியலில் அவன் பெயருக்கு காசோலை (Cheque) எழுதிப் போடும் பழக்கம் உள்ளது.  கதிர்காம முருகன் பெயருக்கு காசோலை (Cheque) எழுதி உண்டியலில் போட்டால் செல்லுபடியாகும் என்பது சிறப்பம்சம். 


கதிர்மலை உச்சியில் முருகப்பெருமான் வேல் [கதிர்வேல்] உள்ளது. கதிர்மலையிலிருந்து வெட்டி எடுக்கும் திருமண்ணே கோவிலில் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. இந்த திருநீறு மிகவும் வெண்மையாக உள்ளது.


அருணகிரிநாதர் கதிர்காம கந்தனை போற்றி 13 திருப்புகழ் பாடல்கள் போற்றியுள்ளார். தமிழில் கதிர்காமக் கந்தனை பாடிய முதல் அருளாளர் அருணகிரிநாதப்பெருமான் ஆவார். ஒரு பாடலில் "வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே' என்று அருணகிரி நாதர் பாடி மகிழ்கிறார்.


தலவரலாறு:

சூரபதுமனை வதம்செய்யும் நோக்கில், முருகப்பெருமான் கதிர்காமத்தை அடைந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதி அருகே பாசறை அமைத்து வீற்றிருந்தார். இப்பகுதி ‘ஏமகூடம்’ என வழங்கப்பட்டது. சூரபதுமனை வதம் செய்து வென்று, நவகங்கை தீர்த்தம் உண்டாக்கி, தேவர்கள் வணங்குவதற்கு எழுந்தருளினார் என்றும், தெய்வானையை மணம் முடித்தபின், வள்ளிமலையில் வள்ளியம்மையை மணம்புரிந்த முருகப்பெருமான் திருத்தணியில் அமர்ந்தார். பிறகு தாம் விரும்பும் தலம் கதிர்காமமே என்று தன் துணைவியரிடம் கூறி, கதிர்காமத்தை அடைந்து, பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றார் என தட்சிண கைலாசபுராணம் கூறுகிறது.


‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்ற நூலும், ‘மகாவம்சம்’ என்ற சிங்கள வரலாற்று நூலும் கதிர்காமம் குறித்து குறிப்பிட்டுள்ளன. கி.மு. 500-ல் விஜயன் என்ற மன்னன், கதிரை வேலனுக்குக் கோவில் அமைத்ததாக யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் மன்னர்கள் கந்தனின் அருள் சக்தியால் பலன் பெற்றதால் நேர்த்திக்கடன் செலுத்தியதற்கான குறிப்புகள் மகாவம்சம் என்ற சிங்கள நூல் ஏற்றுக்கொண்டுள்ளதை நம்மால் அறிய முடிகிறது.


கந்தபுராணத்தின் படி முருகப்பெருமான் வேடுவ குலப்பெண்ணான வள்ளியை இங்குதான் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அடர்ந்த காட்டிற்குள்ளே இருந்த இக்கோவிலுக்கு,15-ம் நூற்றாண்டில் , முருகன் பெருமை கூறும் ‘திருப்புகழ்” இயற்றிய “அருணகிரிநாதர்” வருகை தந்தார். அவர் இக்கோவிலை முருகனின் புனித தலங்களிலில் ஒன்று என அறிவித்தார். அதனால் அன்று முதல் இன்று வரை இக்கோவிலுக்கு, தமிழர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபாடு செய்கின்றனர்.

தல அமைப்பு:

கதிர்காம ஆலயத்தில், நம்நாட்டு கோவில் போல, ராஜகோபுரம், முன்மண்டபம், மகாமண்டபம், கருவறை எனும் எதுவும் கிடையாது. கோவிலின் முகப்பில் ஒரு வளைவு உள்ளது. அதிலும் சிங்கள மொழியில் எழுதியுள்ளார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறிய எழுத்துக்களால் எழுதப்பட்டு உள்ளது. வலதுபுறம் விநாயகர் சந்நிதி, கதிர்காமர் சந்நிதி தெற்கு நோக்கியும், வள்ளியம்மன் சந்நிதி வடக்கு நோக்கியும் எதிரெதிரே அமைந்துள்ளன. இடதுபுறம், தெய்வானை சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது..


பொதுவாக, கருவறையில் உள்ள தெய்வ வடிவங்களைத் தரிசிக்கும் விதமாக இருப்பதே வழக்கம். ஆனால் இங்கே கருவறையைக் காண இயலாதபடி, கருவறை வாசலை வண்ணத்திரையிட்டு மூடியிருக்கின்றனர். திரையில் வள்ளி, தெய்வானை சமேத கந்தனின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இது பரமரகசியமான பவித்திரமான இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள பேழையில் முருகன் ஒளியாக ஆவாகணம் செய்யப்பெற்ற) ஓம் என் பதியப்பட்ட ஷட்கோண(ஆறுகோண) யந்திரம் இருப்பதாகவும், தங்க அங்கி அணிவித்த செஞ்சந்தன கட்டையிலான ஆறுமுகங்களும், பன்னிரு கைகளும் உள்ள ஆறுமுக சுவாமி சிலை திரை மறைவில் உள்ளதாக ஐதீகம்.

நாம் அர்ச்சனைப் பொருட்களை அர்ச்சகர்கள் பெற்றுக்கொண்டு திரைக்குள் சென்று முருகனுக்கு சமர்ப்பித்து, மீண்டும் நம்மிடம் தருகின்றனர். எவ்வளவு பெரிய மனிதரானாலும், திரையை விலக்கி காண இயலாது. திரை மீது உள்ள வடிவத்தை மட்டுமே தரிசித்து வரவேண்டும். கோவில் எளிய வடிவத்தில் அமைந்திருக்கின்றது என்றாலும், முருகனின் சக்தியும், அருளாற்றலும் அதை ஈடுசெய்து விடுகிறது.


திருவிழாக் காலங்களில் சந்நிதிக்குள் இருந்து, என்னவென்று அறிய முடியாத ஒரு பொருளை (மாணிக்கம்??) பெரிய துணியில் மூடி, யானை மீது உள்ள பெட்டியில் வைத்து இறுகக் கட்டிவிடுகின்றனர். இது முத்துலிங்க சுவாமி அமைத்த யந்திரம் என்று கூறுவர். அப்பெட்டி வள்ளியம்மை கோவிலுக்குச் சென்று திரும்பி வரும். திருப்புகழில் வரும் ‘கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே’ என்ற வரிகளை வைத்து பார்த்தால், மாணிக்கத்தால் செய்த விலை மதிப்பற்ற திருவுருவம் உள்ளே இருப்பதை உணர முடிகிறது.


திருவிழா:

ஆடிப்பெருவிழா (ஆடிஅமாவாசை-ஆடிப்பவுர்ணமி), கந்த சஷ்டி, தைப்பூசம், மாசி மகம், திருக்கார்த்திகை, வைகாசிவிசாகம், தை 1, தமிழ், ஆங்கில புத்தாண்டு நாள்


பிரார்த்தனை & நேர்த்திக்கடன்:

வினைப்பயன்களை தீர்ப்பதற்காக, பக்தர்கள் பாதயாத்திரை, கன்னங்களிலும், நாக்கிலும் கூரிய வேல்களால் குத்திக் கொல்லுதல், முருகன் சிலையைச் சுமந்து செல்லும் பெரிய தேர்களை பெரிய கொக்கிகள் [அலகு குத்துதல்] கொண்டு முதுகின் தோலால் துளைத்துக் இழுத்து செல்லல்


வினைப்பயன்களை தீர்க்கும் இலங்கை கதிர்காமக் கந்தனை நாம் வணங்கினால் அளவற்ற சக்தியும், அருளாற்றலும் பெற்று இன்புறாலாம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻




படம் 1 - 150 கதிர்காமம் கதிர்காம சுவாமி கோவிலில் மூடப்பட்ட கருவறைக்கு முன் திரைச்சீலையில் வீற்றிருக்கும் அறுமுகங்கள் பன்னிரு கைகளுடன் அருளும் கதிர்வேலன்



படம் 2 - 150 வினைப்பயன்களை தீர்க்கும் இலங்கை கதிர்காமக் கந்தன்




Comments

  1. Kathirkama kanthanuku arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்