கோவில் 149 - முருகன் குடியிருக்கும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-149
2021 தீபாவளி திருநாளில் திருப்பம் தரும் முருகன் குடியிருக்கும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில்
04.11.21 வியாழன்
அருள்மிகு ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருக்கோவில்(முருகன் உபக்கோவில்)
திருவானைக்காவல்-620005
திருச்சி மாவட்டம்
இருப்பிடம் –, திருச்சி சத்திரம் பேருந்து 6 கிமீ, ஸ்ரீரங்கம் அருகில்
மூலவர்: ஜம்புகேஸ்வரர்
தாயார்: அகிலாண்டேஸ்வரி
உற்சவர்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் (உமை கந்தனுடன் சிவன்)
நாயகன்: முருகப்பெருமான்
தல விருட்சம்: வெண்நாவல் மரம்
தீர்த்தம்: காவிரி, நவதீர்த்தங்கள்
புராணப்பெயர்: திருஆனைக்காவல், திருஆனைக்கா
பதிகம் பாடியவர்கள்: அப்பர், சுந்தரர், தாயுமானவர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பல மகான்கள்
தேவாரப்பதிகம் – திருஞானசம்பந்தர் அருளியது (காவிரி வடகரையில் 60-வது தலம்) “துன்பம் இன்றித் துயரின்றி …….. ஆனைக்கா அண்ணலே”
அருணகிரிநாதப்பெருமான் முருகனை புகழ்ந்து 16 பாடல்களை பாடியருளியுள்ளார்.
திருவானைக்கா - [அனைத்தும் காமம் என்னும் எதிரியை அழிப்பது பற்றி)
“அஞ்சன வேல்விழி,,,மாதர் மயல் அற:
தலப்பெருமை:
திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் திருப்பம் தரும் முருகன் குடியிருக்கும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகில் இருப்பது மிகவும் சிறப்பம்சம்,
ஆகச்சிறந்த சிவன்-சக்தி திருத்தலத்தில் முருகப்பெருமான் அருணகிரிநாதரின் எதிரிகளை (காமம் முதலான) அழித்தருளிய திருப்புகழ் தலமாகவும். பஞ்சபூத தலங்களில் அப்பு (நீர்) தலமாகவும், சக்தி பீடங்களில் வராகி பீடமாகவும் (ஞானசக்தி) திகழ்வது திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் என்பது மிக சிறப்பு.. . புராணப்பெயர்கள் திருஆனைக்காவல், திருஆனைக்கா ஆகும்
முருகப்பெருமான் பாதத்தில் அகரன்: முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஐம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும் காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரணாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார் முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது மிகவும் அபூர்வம்.
மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது இறைவனின் பெருங்கருணை.
திருவானைக்கா தலம் தாய் அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம் (ஞானசக்தி தலம்) ஆகும். அகிலத்தை காக்கும் அம்பாளின் காதுகளில் இருக்கும் காதணிகள் (தாடகங்கள்) பெரிதாக பார்வைக்கு மிக பளிச்சென்று தெரியும். உச்சிக்கால பூஜையின்போது கோவில் அர்ச்சகர் புடவையணிந்து கோ பூஜையுடன் சுவாமிக்கும் ஆராதனைகள் நடத்துவார். அம்பாளே சுவாமியை பூஜிப்பதாக ஐதிகம். இந்த வைபவத்தை தரிசித்தால் கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடிமாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதிகம். அதனால் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அம்பாள் காலையில் லஷ்மியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். ஆடிவெள்ளியில் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் அம்பாளை பக்தர்கள் அனைவரும் தரிசித்து அனைத்து நற்பலன்களை பெற்றிடலாம்.
தலவரலாறு:
ஜம்பு என்ற முனிவர் பெருமானை வேண்டி இங்கு தவமிருந்தார். அவரது பக்தியில் மெச்சிய சிவன் அவருக்கு காட்சி தந்து, நாவல்பழத்தை அளித்தார். சிவபெருமான் அளித்ததனால் கொட்டையையும் சேர்த்து விழுங்கிவிட்டார். அந்த கொட்டையிலிருந்து விதை முளைத்து செடியாக மாறி வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடாக வளர்ந்தது. முனிவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். பெருமான் ஜம்பு முனிவருக்கு முக்தியளித்ததால் இத்தலத்து சிவபெருமான் ஜம்புகேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இந்தக் காட்டில் ஒருவர் யானையாகவும், மற்றொருவர் சிலந்தியாகவும் பிறந்தார்கள். அவர்கள் இந்த நாவல் மரத்தடிக்கு வந்து வழிபட்டு வந்தனர். சிலந்தி வலை பின்னி சுவாமிக்கு பந்தல் போல அமைத்து வழிபட, அதை யானை துடைத்தெறிந்து காவிரி நீரும் பூவும் சமர்ப்பித்து வழிபட்டது. இறுதியில் இரண்டும் சண்டையிட்டு மடிந்தன. யானை சிவலோகம் சென்றது. யானையிடம் சண்டையிட்டு மடிந்த சிலந்தி மறுபிறப்பில் சோழ அரசன் கோச்செங்கண்ணனாகப் பிறந்து இந்த ஆலயத்தை யானை புக முடியாத மாடக்கோயிலாகக் கட்டினார் என்கிறது தலவரலாறு. யானை காவல் காத்த தலம் என்பதால் இந்த புண்ணிய க்ஷேத்திரம் ஆனைக்கா என்றானது.
அம்பிகை வந்து வழிபட்டு இன்னமும் நித்யகன்னியாக அகிலாண்டேஸ்வரியாக வழிபடப்படுகிறாள் என்பது அதிசயம். ஈசனைப் பிரிந்து வந்த சக்தி, இங்கு ஜம்பு முனிவரின் ஆலோசனைப்படி காவிரி நீரெடுத்து வெண்நாவல் மரத்தடியில் நீரால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டாள். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அன்னை அனுதினமும் வழிபட்டும் வந்தாள். இந்த வேண்டுதல் அம்பிகைக்குப் பிடித்துப்போக, இன்றும் அம்பிகை உச்சி காலத்தில் ஈசனைப் பூசிப்பதாக ஐதீகம். அதற்கு ஏற்ப உச்சி வேளையில் ஆலய குருக்கள் ஒருவர் அம்பாளாக உருமாறி, சிவப்புப் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் ருத்ராட்சமும் மாலைகளும் தாங்கி, ஈசனுக்கு பூஜை செய்வார். பிறகு கோ பூஜை செய்வார். சிவன் குருவாகவும், அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்த தலம் இது என்பதால் மாணாக்கர்கள் கல்வியில் மேன்மை வர இத்தலத்துக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள்.
தல அமைப்பு:
மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உட்பிரகாரத்தில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்கள் அருள்பாலிக்கின்றார். பெருமான் தரைமட்டத்தில் இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவுடனேயே இருக்கிறது. ஈசனை கருவறை முன் உள்ள ஒன்பது துளைகள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
அம்பாள் நான்காவது பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். அகிலாண்டேஸ்வரி அம்மனின் காதில் அணிந்திருக்கும் தடாகங்கள் பக்தர்களின் பார்வைக்கு பெரிதாக நன்றாக தெரியும். முன்னர் அம்பாள் பார்வைக்கு உக்கிரமாக கொடூரமாக இருந்ததாகவும், பக்தர்கள் அவளைக் கண்டு அச்சம் கொண்டதால் அப்போது அம்பாளை தரிசிக்க வந்த ஆதிசங்கர,ர் சிவசக்கரம் என்னும் இந்த காதணிகளை (தாடகங்கள்) பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்ததாகவும் வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்கிரத்தை தணிக்க அம்பாள் விநாயரையும், முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள்.
முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஐம்பு தீர்த்தக்கரையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். மேலும் அருணகிரிநாதர் முருகனை புகழ்ந்து 16 திருப்புகழ் பாடல்கள் பாடியது இத்தலத்தின் சிறப்பு. சரஸ்வதி தேவி வீணையில்லாமலும், சந்திரன் தேவியருடனும், பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டாதேவியுடன் சனிபகவான் மற்றும் அனைத்து தெய்வங்களும் அருளுகின்றனர்.
திருவிழா:
பங்குனி பிரம்மோறசவம், ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், அனைத்து சிவன், சக்தி, முருகன், விநாயகர் விசேஷ தினங்கள்
பிரார்த்தனை:
எதிரிகளை(காமம்) அழிக்க, பிரிந்த தம்பதியர் சேர, தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க, நல்ல கணவன்/மணைவி கிடைக்க, கல்வி சிறக்க, விவசாயம் செழிக்க, அனைத்து தோஷங்களும் தீர, சர்வ மங்களம் உண்டாக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் அணிவித்தல், திருக்காணிக்கை
திறக்கும் நேரம்:
காலை 5.30-1 மாலை 3-8.30
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருவடி, அகிலாண்டேஸ்வரி அம்மன், நம் அழகன் முருகப்பெருமான் மூவரையும் அனைவரும் ஒரு சேர வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு பெற்றிடலாம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - திருப்பம் தரும் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்
படம் 2 - எதிரிகளை அழிக்கும் முருகப்பெருமானின் சம்ஹார கோலம், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில்
Thiruvanaika muruganuku arohara. Thanks for this post Iya.
ReplyDelete