கோவில் 148 கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-148
கல்வியில் சிறந்து விளங்க அருளும் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில்
03.11.21 புதன்
அருள்மிகு பொன்மலை வேலாயுத சுவாமி திருக்கோவில்
கிணத்துக்கடவு-642109
கோயம்புத்தூர் மாவட்டம்
இருப்பிடம் – கோயம்புத்தூர் 20-கிமீ
மூலவர்: வேலாயுத சுவாமி/வேலாயுதர்
தெவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தீர்த்தம்: வள்ளி சுணை
பாடியவர்கள்: அருணகிரிநாதர், தணிகைமணி
தலப்பெருமை:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில், 20 கிமீ தொலைவில் கல்வியில் சிறந்து விளங்க அருளும் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கோவையின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’. இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தனமரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை (கனககிரி/கனகமலை/கநககிரி) எனப் பெயர் பெற்றது.
முருகப்பெருமான் பாதத்திற்கே முதல் பூஜை: ஞானப்பழத்திற்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு பழனியில் குடிக்கொண்ட முருகன், இந்த பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.
மகத்துவ மூலிகைகள் நிறைந்த மலை. பக்தர்கள் நோய்களை தீர்த்துவைக்கும் தலம். மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண்ணை குணமாக்கிய அபூர்வ மூலிகைகள் நிறைந்த பொன்மலை. இந்தக்கோவிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் புகழை மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.
தலவரலாறு:
பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையம் ஜமீன்தார் வருடா வருடம் விரதமிருந்து பழனி செல்வார். பழனி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், “பழனி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்” என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவிபாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. ஆயக்குடி வரை சென்றும் பழனி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே என்று நினைத்து நினைத்தே ஜமீன்தாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும் படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து, அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலை மீது மூலவர் பிரதிஷ்டை செய்து சந்நிதி அமைக்க வேண்டும் என்று கூற, சந்நிதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் “வேலாயுத சுவாமி” என அழைக்கப்பட்டார்.
700 ஆண்டுகளுக்கு முன்நர் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ‘‘கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலுக்கு வா, மருந்து தருகிறேன்’’. என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோவில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, ‘‘திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து கட்டினால் குணமாகிவிடும்’’ என்று கூறி மறைந்தார். திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோவில் கட்டியதாக செப்பேடு கூறுகிறது.
தல அமைப்பு:
திருக்கோவிலுக்கு செல்ல 200 படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறலாம். முதலில் இடும்பன் காட்சி தருகிறார். அவரை தொடர்ந்து முழுமுதற் கடவுள் விநாயகர் அருள்பாலிக்கிறார்.
திருக்கோவிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கொடிமரத்தை தரிசித்து விட்டு, அர்த்த மண்டபத்துக்குள் நுழைகிறோம். அங்கே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் அவ்வைக்கு தமிழ் ஊட்டிய திருக்குமரன், ‘வேலாயுத சுவாமி’ என்ற திருநாமத்தில் எழுந்தருளியுள்ளார். வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சி தரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம். ராஜகிரீடத்தில் உலகை ஆள்பவன் என்பதை உணர்த்துகிறார். வேலாயுதசாமியை தரிசிக்க, தரிசிக்க இம்மையில் நாம் செய்த பாவங்கள் நீங்குவதை உணர முடியும்.
அர்த்த மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதரான சுப்பிரமணிய சுவாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். கருவறையை அடுத்த மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கன்னிமூலை கணபதி ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி அருளுகின்றனர். கோவில் அருகே வள்ளி சுனை இருக்கிறது. இதில் உள்ள தீர்த்த நீர்தான், அபிஷேகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கோவிலின் பின்புறம் முருகன் பாதம் பதிந்த பகுதியை ஒரு சந்நிதியாக அமைத்துள்ளனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், பவுர்ணமி (கிரிவலம்), பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, நோய்கள் தீர
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், புது வஸ்திரம் அணிவித்தல்,
திறக்கும் நேரம்:
காலை 6-12 மாலை 4-8
மூலிகை மலையில் குடியிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி நோய்கள் அனைத்தும் தீர்த்து வைப்பான்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 2 - நோய்கள் அனைத்தும் தீர்த்து வைக்கும் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி
Kinathukadavu ponmalai velayutha swamiku arohara. Thanks for this post Iya.
ReplyDelete