கோவில் 145 - விழுப்புரம் திருத்தணியல் முருகன் கோவில்

🙏🙏                                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-145

கந்தசஷ்டி விரதமிருப்பவர்களுக்கு அருளிடும் விழுப்புரம் திருத்தணியல் முருகன் கோவில்

31.10.21 ஞாயிறு

                                                                                                                                             அருள்மிகு வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கோவில் 

திருத்தணியல் (தணியல்) 

விழுப்புரம் மாவட்டம்


மூலவர்: கைலாசநாதர்/முருகப்பெருமான்

தேவியர்: காமாட்சி அம்மன்/வள்ளி-தெய்வானை


.முருகப்பெருமான் மகிமை:

கந்தன் இருக்க கவலை எதற்கு என்று பெரியவர்கள் சொல்வார்கள் ஐப்பசி மாத பெருமைகளில் சிறப்பானது சஷ்டி விரதம். கந்தனை வழிபட உகந்தது சஷ்டி திதி! அதிலும் ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி, கந்தசஷ்டி என்று போற்றப்படுகிறது.


கந்தகோட்டம், கந்தசஷ்டி விரதம், கந்தபுராணம், கந்தரலங்காரம், கந்தர்அனுபூதி, கந்தர்கலிவெண்பா, கந்தசஷ்டிக்கவசம் என கந்தனைக் கொண்டே பல சிறப்புகள் உண்டு. உள்ளும் புறமும் இருக்கும் பகையை விரட்டி அடிப்பவன் முருகப்பெருமான். பிறப்பைக் கொண்டு வந்து சேர்க்கும் மாயை, கன்மம், ஆணவத்தை முருகனே அழிப்பதால் முருகனே பிறவிக்கடலை நீந்த உதவும் பெருந்தோணி என்பார் வாரியார் சுவாமிகள். 'உள்ளும் புறமும் உள்ள பகைவர்களை அடியோடு அழிக்கும் சேனாபதிக்கு வணக்கம்' என்கிறது ஸ்ரீருத்ரம்.


அகார உகார மகாரம் இணைந்த ப்ரணவ ஸ்வரூபம் முருகன் என்கிறது கந்தர் கலிவெண்பா. அதனால் கந்தனை வணங்கினால் வேதத்தை ஓதிய புண்ணியமும் பலனும் கிடைக்கும் எனலாம். அதிலும் கந்தனுக்கு உகந்த கந்தசஷ்டி புண்ணிய தினத்தில் அவனது திருநாமங்களை தொடர்ந்து ஓதி வந்தால் எல்லா வினைகளும் வேல் கண்ட பகையைப் போல விலகி விடும் எனலாம்.


இச்சாசக்தி, கிரியாசக்தி என்ற இரு துணையையும், ஞானமெனும் வேலையும் கொண்டிருக்கும் முருகப்பெருமான், சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் தயாபரன். அவனைக் கொண்டாடும் வழிபாடுகளில் சிறப்பானது சஷ்டி விரதம். மஹாஸ்கந்த ஹோமம். கந்தசஷ்டி திருவிழாவில் 4-ம் நாள் ஞானப்பெருவிழா என போற்றப்படுகிறது.


கந்தனைப் போற்றிப் புகழ் பாடும் கந்தசஷ்டி விழா இந்த வருடம் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று தொடங்கவுள்ளது. நவம்பர் 9-ம் தேதி சஷ்டி விழாவின் இறுதி நாளான சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது [இக்கோவிலில் கிடையாது]/ சகந்தசஷ்டி நான்காவது நாளான (7-11-21) ஞாயிற்றுக்கிழமை காலை 10மணி முதல் 12மணி வரை மகாஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. அந்நாளில்தான், சிவபக்தனான சூரனை மன்னிக்கும் விதமாக ஞானஸ்கந்தன் தன்னுடைய மகா விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த கந்தசஷ்டி விழாவை மேலும் சிறப்பிக்க சக்திவிகடனும் தணியல் முருகப்பெருமான் திருக்கோவில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை வழக்கம் போல நடத்த இருக்கிறது.. நேரலையிலும், ஹோமத்திலும் முருகபக்தர்கள், சஷ்டி விரதம் இருப்பவர்கள் கலந்துக்கொண்டு இன்புறலாம். 


ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் ஒழிக்கும் திருநாளாகவே கந்தசஷ்டி விழா என ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனைமுகச் சூரனை வென்றதன் மூலம் கந்தன் மாயையை ஒழித்தார். சிங்கமுகச் சூரனை வென்று கன்மத்தை ஒழித்தார். சூரபத்மனை வென்று ஆணவத்தையும் ஒழித்தார் முருகப்பெருமான். சூரபத்மனை ஒழிக்கும் முன்னர், சிவபக்தனான அவனை மன்னிக்கும் விதமாக கந்தசஷ்டியின் நான்காம் நாள் ஞான கந்தனின் மகா விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார் என்று புராணங்கள் கூறுகின்றன. 


சூரபத்மனோடு முருகப்பெருமான் போர் புரிந்து வரும் வேளையில் சூரன் அற்ப மாயையின் துணையால் பல பல மாய வடிவங்களை எடுத்து தேவசேனாபதியாம் முருகப்பெருமானின் படைவீரர்களை அச்சமூட்டினான். இதனால் வெகுண்ட முருகப்பெருமான் அவனது மாயைகளை முடக்கி, அவனது ஆயுதங்களை தமது திருப்பாதங்களின் கீழே பணிய வைத்து அவனை நிராயுதபாணியாக்கி தனிமைப் படுத்தினார் அப்போது அவனிடம் மாயையில் இறுமாப்பு கொண்ட அசுரனே. மகாமாயை எனும் சக்தியின் புத்திரனான என் ஞான வடிவை உன்னிடம் காண்பிக்கிறேன் அதற்கு உனக்கு ஞானக்கண்ணையும் அருளுகிறேன் என்று பிரமாண்ட தனது வடிவை அப்போது காண்பித்தார்.


அகிலாண்ட கோடிப் பிரமாண்டநாயகனான முருகப்பெருமான் தனது திருவடிவைக் காட்டியபோது, முருகப்பெருமானின் திருவடியின் கீழ் இமயமலை மேருமலை, மந்தாரமலை. மாலியவான் கந்தமாதனம், நிஷதம், ஏமகூடம், விபுலம், சுபாசுபம், சுவேதம், சிருங்கம், மகாகிரி, குமுதம், குமாரம் போன்ற பல கோடி மலைகள் காணப்பட்டன.புறத்திருவடியினிடத்தில் பாற்கடல், தயிர்க்கடல், கரும்புச்சாற்றுக்கடல், உப்புக்கடல், நெய்க்கடல், தேன் கடல், சுத்தநீர்கடல் போன்ற சமுத்திரங்களும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, நர்மதை, தபதி, பம்பை, துங்கபத்திரை, பாலாறு, பவானி, மணிமுத்தாறு, தாமிரபரணி போன்ற பல நதிகளும் காணப்பட்டன. 


திருவடி விரல்களிடையே இடி, மின்னல் பல்வேறு கிரகங்கள் காணப்பட்டன. சிந்தாமணி, பாதுகாஞ்சனம், ஸ்யமந்தகமணி, சூளாமணி, சூடாமணி, கௌஸ்துபமணி போன்றவையும் காணப்பட்டன.


கந்தனின் முழங்கால்களிலே வித்யாதார், கின்னரர், கிரும்புருஷர், சித்தர், கந்தருவர், கருடர், பூதர் உள்ளிட்ட கணங்களும், அஷ்ட வசுக்களும், பன்னிரு சூரியர்களும், 11 ரூத்திரர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் காணப்பட்டனர். கந்தனின் திவ்ய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் சகல புவனங்களும், ருத்திர கோடிகளும், திருத்தோள்களில் பிரும்ம, விஷ்ணுக்களும் காணப்பட்டனர். இப்படி பேரொளி வெள்ளமாய் பரமேஸ்வர ரூபமென்னும் விஸ்வரூபத்தைக் கண்ட அசுரன் சூரபத்மன் வியந்து நின்றான். இத்தனை பெரிய மகாசக்தியை நான் எதிர்ப்பதா! என்று பணிந்தான். எனினும் இந்த அளவில்லாத ஆற்றலாலேயே தன்னுடைய முடிவும் நடைபெற வேண்டும் என்று எண்ணி முருகப்பெருமானை எதிர்க்கவும் தொடங்கினான் என்கின்றன புராணங்கள்.


திருத்தணிகை தலம் போலவே மத்திய திருத்தணிகை என்று போற்றப்படும் தலம் தணியல். திருத்தணியை போலவே சினம் தனிந்த கந்தன் குடிக்கொண்டுள்ளதால் இங்கும் சூரசம்ஹார விழா கிடையாது. 


அருணகிரிநாத பெருமான் தனது திருப்புகழில் தணியல் உறையும் தண்டபாணி தெய்வத்தை போற்றிப் புகழ்ந்துள்ளார் [அப்பபோர்ப் பனிரு வெற்பபூத் தணியல் வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா... - திருப்புகழ் 275 கௌமாரம்]


தலவரலாறு:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டாரத்தில், திண்டிவனம் அருகே உள்ள தணியல் என்ற ஊரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத கயிலாசநாதர் ஆலயம் உள்ளது. சிவாலயமாக இருப்பினும் இங்குள்ள முருகப்பெருமான் புராணச்சிறப்பும் வரலாற்றுப்பெருமையும் கொண்டு விளங்குகிறார். அசுரர்வதம் முடித்து பகை வென்று வடக்கே சென்ற முருகப்பெருமான், இத்தலத்தில் தேவியர் புடைசூழ எழுந்தருளினார். அப்போது சினம் தணிந்து அசுரரை வதைத்த தோஷம் நீங்க சிவலிங்க பூஜை செய்தார்.


ஞானஸ்கந்தனாக எழுந்தருளி வழிபட்ட முருகப்பெருமானுக்கு தந்தையும் தாயுமான சிவசக்தியர் காட்சி தந்து முருகனைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். இதனால் குளிர்ந்து போன முருகப்பெருமான் சினம் தணிந்து சிறப்பு கொண்டார் எனவும், இதனாலேயே இந்த தலம் தணியல் என்றானதாகவும் கூறப்படுகிறது. மகிழ்வுற்ற முருகப்பெருமான் இங்கு வந்து தம்மை வேண்டிய தேவர்களுக்கு எல்லாம் வேண்டிய வரங்களை அளித்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. 


.தலஅமைப்பு:

மூலவராக கைலாசநாதர் அருள்பாலிக்கின்றார்., காமாட்சியம்மன் தனி சந்நிதியில் காட்சி அளிக்கின்றாள். சிவஸ்தலமாக இருந்தாலும் முருகனுக்கே இங்கு சிறப்பு. கந்தன் முருகப்பெருமானாக கருணையுடன் திருத்தணி முருகன் போலவே தன் பக்தர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுக்கின்றார். முருகப்பெருமான் தேவியருடன் கோலாகலக் குமாரனாக வீற்றிருக்கிறார். இவரை வணங்கி வழிபட்டால் பூரணமான ஆரோக்கிய வாழ்வை அருள்வார். மேலும் விநாயகப் பெருமான், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் சந்நிதிகளும் உள்ளன 

 

திருவிழா:

கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி


பிரார்த்தனை:

சஷ்டி விரதம் இருப்பர்களுக்கு முருகன் அருளால் மகப்பேறு, மணப்பேறு, நல்வாழ்வு, நற்பெருமை, நீங்காப்புகழ், ஆரோக்கியம், ஆயுள், செல்வம் யாவும் கிட்டும் பகையற்ற நிம்மதி, கடன்கள் நீங்கிய சந்தோஷம், உற்சாகம் நிறைந்த வாழ்வும் கிட்டும். மேலும் பிறவிப்பிணி நீங்கி கந்தனருள் எப்போதும் துணை நிற்கும். குடும்பப்பிரச்னைகள் நீங்கவும், வேலை வாய்ப்பு பெறவும், கடன், பிணி தொல்லைகள் அகலவும், தொழில்-வியாபாரம் பெருகவும் விரதம் அனுஷ்டிப்பர். 


நேர்த்திக்கடன்:

சஷ்டி விரதம் அனுசரித்தல், அபிஷேகம் ஆராதனை செய்தல், வஸ்திரம் சாத்துதல்


கந்தசஷ்டியில் விரதமிருப்பவர்களுக்கு திருத்தணியல் கந்தனருளால் எல்லா கவலைகளும் நீங்கி வாழ்வாங்கு வாழ அருள்புரிவார்!.


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

9489302842

🙏🙏


படம் 1 - 145 விழுப்புரம் திருத்தணியல் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் 


படம் 2 - 145 கவலைகள் நீக்கும் விழுப்புரம் திருத்தணியல் முருகன்



Comments

  1. Nagapattina muruganku arohara. Thanks for this post Iya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்