கோவில் 140 - ராமநாதபுரம் மாவட்டம் மேலக் கொடுமலூர் சுப்பிரமணிசுவாமி (குமரக்கடவுள்) கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-140

2021 சஷ்டி திருநாளான இன்று உடல் வலி தீர்க்க மாவிளக்கு காணும் ராமநாதபுரம் மாவட்டம் மேலக் கொடுமலூர் சுப்பிரமணிசுவாமி (குமரக்கடவுள்) கோவில்

26.10.21 செவ்வாய்

அருள்மிகு குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிசுவாமி திருக்கோவில்

மேலக் கொடுமலூர்-623601

ராமநாதபுரம் மாவட்டம்

இருப்பிடம்: பரமக்குடி 22 கிமீ


மூலவர்: குமரக்கடவுள் என்ற சுப்பிரமணிசுவாமி

தலவிருட்சம்: உடைமரம்

பழைமை: 1000 ஆண்டுகள் முன்பு (திருசெந்தூர் சூரசம்ஹார காலம்)

தல மகிமை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியிலிருந்து 22 கிமீ உடல் வலி தீர்க்க மாவிளக்கு காணும் ராமநாதபுரம் மாவட்டம் மேலக் கொடுமலூர் சுப்பிரமணிசுவாமி (குமரக்கடவுள்) கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில், முருகப்பெருமான் பானுகோபனின் தலைமீது பாதம் பதித்தபடி போர்க்கோலத்தில் காட்சி தந்தருளுகின்றார். தேனும் நெய்யும் கலந்த தினை மாவு நைவேத்தியம் செய்கிறார்கள். கைக்குத்தல் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு கலந்து செய்யப்படும் நைவேத்தியத்தியமும் இங்கு பிரசித்தம். பாம்பன் சுவாமிகள், திருவேகம்பத்தூர் கவி ராஜ பண்டிதர், எமனேஸ்வரம் ஜவ்வாது புலவர் ஆகியோர் இத்தலத்தில் அருளும் முருகனைப் போற்றிப் பாடியுள்ளனர்.


சங்கரன்கோவில் கோமதி அம்பாள் முன் வலி/நோய் தீர மாவிளக்கு காணுவது உலகறிந்த செய்தி. ஏராளாமான பக்தர்கள் மாவிளக்கு பார்த்து குணமடைவர். அதேப்போல எந்த முருகப்பெருமான் தலத்திலும் இல்லாதபடி, வயிற்றுவலி, நெஞ்சுவலி, உடலில் வலி என வேதனையில் இருப்பவர்கள், இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு மாவிளக்கு எடுத்து பரிபூரண குணமாகின்றனர். கை, கால் வலியால் அவதிப்படுவோர் மஞ்சள் பூசப்பட்ட உடல் உறுப்பு காணிக்கை செலுத்தி வேண்டிக்கொள்ள, விரைவில் குணம் பெறுவர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 48 நாள் விரதமிருந்து, உடைமரத்து இலையை (கோவிலின் தலவிருட்சம்) தினமும் சாப்பிட்டு வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை. இங்கு முருகப்பெருமான் பல் துலக்கிவிட்டு வலப்புறமாக வீசிய குச்சியே உடைமரமாக வளர்ந்து, கோவிலின் தலவிருட்சமாக அமைந்திருப்பதாக ஐதீகம்.


இங்கே முருகப்பெருமான் அஸ்தமன வேளையில் முனிவர்களுக்குக் காட்சி தந்ததால், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திங்கள், வெள்ளி, கிருத்திகை ஆகிய நாள்களில் இரவு வேளைகளில் 33 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வைகாசி மாதம் கடைசி வெள்ளியன்று மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் செய்யப்படும் முப்பழப்பூஜை மிகவும் பிரசித்திபெற்ற பூஜையாகும்.


தல வரலாறு:

முருகப்பெருமான் சக்தி தேவியிடம் வேலாயுதம் பெற்றது போன்று, இத்தலத்தில் மழு ஆயுதம் கேட்டுப் பெற்றாராம். சூரனையும் அவனது தம்பியையும் சம்ஹாரம் செய்வதற்கு குமரன் அன்னை பார்வதி தேவியிடம் மழு என்ற ஆயுதத்தை கொடு என்று கேட்டதாக ஐதீகம். ஆகையினால் இவ்வூர் கொடுமழுவூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் திரிந்து கொடுமலூர் என்றும், மேற்கு நோக்கி கோவிலும், மூலவரும் இருப்பதாலும் மேல கொடுமலூர் என்றும் அழைக்கப்படுகிறது. திருச்செந்தூரிலே முருகன் சூரனை சம்ஹாரம் செய்து விட்டு அவனது தம்பியான பானுகோபனையும் சம்ஹாரம் செய்து அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு மேலக் கொடுமலூர் வந்து இங்கு வாழ்ந்த ரிஷி, முனிவர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலை இராமநாதபுரம் சேதுபதி மன்னர் கட்டினார்.


தல அமைப்பு:

முருகப்பெருமான் மேற்கு பார்த்தபடி அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு மூலவர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி சுயம்புமூர்த்தியாக சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். குமரக்கடவுள் சம்ஹார மூர்த்தியாக போர்க் கோலத்தில் நின்று பக்தர்களுக்கு அருளிகின்றார். எதிரிகளின் பயத்தை போக்கியருளுகின்றார். சுவாமிக்கு வாரத்தில் திங்கள், வெள்ளி இரு நாட்கள் மற்றும் கார்த்திகையில் மட்டும்தான் பூஜை நடக்கிறது. அபிஷேகம் இரவில் மட்டுமே. தேனும் நெய்யும் கலந்த தினை மாவு நைவேத்தியம் செய்கிறார்கள். கைக்குத்தல் அரிசி, வெல்லம், பாசிப்பருப்பு கலந்து செய்யப்படும் மாவிளக்கு நைவேத்தியம் இந்த முருகன் கோவிலின் சிறப்பு.


திருவிழா:

பங்குனி உத்திரம், வைகாசி கடைசி வெள்ளி (முப்பழபூஜை), திருக்கார்த்திகை, தைப்பூசம், திங்கள், வெள்ளி, கார்த்திகை


பிரார்த்தனை:

கை, கால் வலி, தீராத நோய்கள் தீர (மாவிளக்கு பார்த்தல்), எதிரி பயம் நீங்க, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிட்ட, வேண்டுவோர்க்கு வேண்டியவையெல்லாம் கிடைக்க


நேர்த்திக்கடன்:

மாவிளக்கு பார்த்தல், சத்ருசம்ஹார அர்ச்சனை, ஷண்முகார்ச்சனை, ஸ்கந்த ஹோமம், 33 வகை அபிஷேகம், முப்பழப்பூஜை, அலங்காரம், சிறப்பு பூஜைகள்,


திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மாலை 7 வரை [திங்கள், வெள்ளி இரவு 10 மணி வரை]


ராமநாதபுரம் மாவட்டம் மேலக் கொடுமலூர் ஷண்முகருக்கு மனமுருகி சத்ருசம்ஹார அர்ச்சனை செய்வித்து எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம்!


.வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏



படம் 1 - உமை அன்னையிடம் சூரனை எதிர்க்க மழு வாங்கி ராமநாதபுரம் மாவட்டம் மேலக் கொடுமலூர் சுப்பிரமணிசுவாமியின் (குமரக்கடவுள்) போர்க்கோல காட்சி


படம் 2 - உடல் வலி தீர்க்க மாவிளக்கு காணும் ராமநாதபுரம் மாவட்டம் மேலக் கொடுமலூர் சுப்பிரமணிசுவாமி (குமரக்கடவுள்)


Comments

  1. Melak kodumaloor subramaniyaswamiku arohara. Thanks for this post Iya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்