கோவில் 139 - திருப்பூர் மாவட்டம் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-139

அழகன் குடியிருக்கும் திருப்பூர் மாவட்டம் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி  கோவில் 

25.10.21 திங்கள்

அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி  திருக்கோவில் 

அலகுமலை-641665

திருப்பூர் மாவட்டம்

இருப்பிடம்: திருப்பூர் 21 கிமீ, பொங்கலூர் 15 கிமீ, கோயம்புத்தூர் 64 கிமீ  


மூலவர்: முத்துக்குமார பாலதண்டாயுதபாணி  

தேவியர்: வள்ளி, தெய்வானை

தலவிருட்சம்: வில்வம்

புராணப்பெயர்: வானவன்சேரி 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

தல மகிமை:

திருப்பூர் மாவட்டம்  திருப்பூரிலிருந்து 21 கிமீ-ல் வானவன்சேரி என்று சிறப்புடன் அழைக்கப்படும் அலகுமலையில் அழகன் குடியிருக்கும் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது.


அலகுமலை என்றால் அகன்று உயர்ந்த மலை என்று பொருள். அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகுமலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.  அதே போன்று, பச்சைப்பசேல் என்று பச்சைப்பட்டு உடுத்திய பாவை போல் இயற்கை அழகுடன் காட்சி தரும் இந்த மலையை, `அழகுமலை' என்று சொல்வதும் மிகவும் பொருத்தம்.

வடக்கே கதித்தமலை, அரசணாமலை, வெள்ளிமலை, தெற்கில் வட்டமலை, ஊதியூர்மலை, கிழக்கில் சென்னிமலை, சிவன்மலை, மேற்கே வெள்ளியங்கிரிமலை, மருதமலை என நான்கு புறமும் சூழ்ந்துள்ள மலைகளுக்கே நடுவே நடுநாயகமாய் அலகுமலை அமைந்திருக்கிறது. 


அலகுமலையில் அதிசயிக்கும் வகையில் ஒரு சிறப்பு இருக்கிறது. அழகன் முருகனின் அறுபடைவீடுகள் திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி ஆகிய திருக்கோவில்களில் முருகப்பெருமான் எவ்வாறெல்லாம் காட்சியளிக்கின்றாறோ, அதே போன்ற தோற்றங்களில் முருகன் அருளும் சந்நிதிகள் இத்திருக்கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.


குழந்தை வரம் வேண்டுவோர், சஷ்டி தினங்களில் விரதமிருந்து முருகனுக்கு 7/11/21 வாரங்கள் செவ்வரளிப் பூமாலை சாற்றி, தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். (இன்று 2022 சஷ்டி விரத முதல் நாள் 1). பிறக்கும் குழந்தைக்கு முத்துக்குமரன் என்று பெயர் வைப்பது இத்தலச்சிறப்பாகும். திருமணம், தொழில் விருத்திக்காக சிறப்பு வேண்டுதல்களும் பரிகாரங்களும் செய்யப்படுகின்றன.


தல வரலாறு:

முருகனின் ஐந்தாம் படைவீடாக புகழ்பெற்ற  குன்றுதோறாடல் தலங்களில் இந்த அலகுமலையும் ஒன்றாகும். 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் இக்கோவில் குறித்த கல்வெட்டுப்பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், ‘மூவேந்தர்கள் வழிபட்டு, நாவேந்தர் சொல்பட்டு, நமது வேலனின் சக்தி வெளிப்பட்டு, அவன் பாதம் பணிவார் தம் குறை அழிபட்டுப்போகும்’ என்ற பாடல், இத்திருக்கோவிலின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.


தல அமைப்பு:

285 படிகளைக் கொண்ட மலையேறும் பாதையில் மயில் மண்டபம், பாதவிநாயகர், இடும்பன், வரசித்தி ஆஞ்சநேயர் சந்நிதிகளைத் தரிசிக்கலாம்.


கருவறையில் மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கண்களை சற்றே தாழ்த்திய நிலையில், ஞானகுருவாக தோன்றும் அழகியத் திருக்கோலம் தந்து பக்தர்களுக்கு அருல்பாலிக்கின்றார். இது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. வள்ளியும் தெய்வானையும் தனி சந்நிதியில் காட்சி அருள்கின்றனர்.


விநாயகர், வீரபாகு, தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணியர், ஸ்கந்தர், ராமதூதன் ஆஞ்சனேயர் என்று பரிவார மூர்த்தங்களாக அருள் புரிகின்றனர். 


திருவிழா:

தைப்பூசம் (7நாள்), சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை தீபம், பவுர்ணமி 


பிரார்த்தனை:

குழந்தை வேண்டி, கல்யாணம் நடைபெற, கல்வி, ஞானம், விவசாயம், தொழில் சிறக்க, வேண்டுவன கிடைக்க


நேர்த்திக்கடன்:

காவ்டி, முடிக்காணிக்கை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம், கிரிவலம் 

 

திறக்கும் நேரம்:

காலை 6-1.30 மாலை 4-7


கல்வி, ஞானம், விவசாயம், தொழில் சிறக்க அருளும் திருப்பூர் மாவட்டம் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணியை மனமுருக தொழுவோம்!


.வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - அழகன் குடியிருக்கும் திருப்பூர் மாவட்டம் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில்



படம் 2 - கல்வி, ஞானம், விவசாயம், தொழில் சிறக்க அருளும் திருப்பூர் மாவட்டம் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி





Comments

  1. Algumalai muthukumara balathandayuthapaniku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment