கோவில் 479 - கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-479
வள்ளலார் சுவாமிகளால் 'சிங்கபுரி கந்தர் பதிகம்' பாடப்பெற்ற கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில்
30.9.2022 வெள்ளி
அருள்மிகு சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
[சுப்புராய சுவாமி திருக்கோவில்]
விழப்பள்ளம்
குறிஞ்சிப்பாடி-607302
கடலூர் மாவட்டம்
இருப்பிடம்: கடலூர் 31 கிமீ, வடலூர் 6 கிமீ, சிதம்பரம் 27 கிமீ
தொலைப்பேசி: 04142 258403
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்
பாடியவர்: வள்ளலார் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள்
தலமகிமை:
வடலூர்-கடலூர் சாலையில் வடலூரிலிருந்து 6-வது கிமீ-ல் வள்ளலார் சுவாமிகளால் 'சிங்கபுரி கந்தர் பதிகம்' பாடப்பெற்ற குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. விழப்பள்ளம் செங்குந்தர் பெருமக்களுக்கு சொந்தமான இக்கோவில் சுப்புராய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
வள்ளல் பெருமான்: கந்தக்கோட்டம் குமரப்பெருமான், திருவொற்றியூர் வடிவுடையம்மை உட்பட பல்வேறு தலங்களை பாடியருளியவரும், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவியவருமான வள்ளல் பெருமான் தன் அண்ணியாரின் நோய் தீர வேண்டி சிங்கபுரி பெருமானின் ஆலயத்திற்கு வந்து சுப்பராய சுவாமிகள், கோல சுவாமிகள் இருவரையும் கண்டு தரிசித்தார். அவர்கள் இருவரிடமும் தன் அண்ணன் குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்தித்து ஆசிகளை வேண்டினார். பின் சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமியை வேண்டி சித்திரை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் ‘சிங்கபுரி கந்தர் திருப்பதிகம்’ பாடினார். கந்தர் திருப்பதிகம் என்று போற்றப்படும் இந்தப் பதிகத்தில் பிணி தீர்த்து அருள் என்று வேண்டுகிறார் அதன்படியே கந்தவேல் வள்ளலார் பெருமானின் அண்ணியாரின் குறையைப் போக்கினார் என்கிறது தலபுராணம். நாமும் சிங்கபுரி முருகனை சிங்கபுரி கந்தர் பதிகம் பாடி வணங்குவது சிறப்பு.
வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள்: இந்த பெருமான் மீது தண்டபாணி சுவாமிகளும். பதிகம் பாடியுள்ளார் சிங்கப்புரியில் வாழும் இந்த முருகப்பெருமான் நன்மைகளை அருள்பவன் என்கிறார் சுவாமிகள்.
பங்குனி உத்திர பெருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக் கொண்டாடப்படுகிறது. கொடியேற்றம், அபிஷேகம், அலங்காரம், சிரப்பு தீபாராதனைகள், சுவாமி உலா, தெப்ப உற்சவம், தேரோட்டத் திருவிழா என சிறப்பாக நடைபெறுகிறது.
தல வரலாறு:
குறிஞ்சி நிலத் தெய்வமான முருகப்பெருமான் குடிக்கொண்ட தலமானதால் இந்த இடம் குறிஞ்சிப்பாடி ஆயிற்று என்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் கந்தக்கடவுள் கோபித்து நின்ற ஆவினன்குடியில் பக்தர்களின் பழுத்த பக்திக்கு இணங்கி கருணைப் பெருக்கால் இறங்கி வந்த தலம் குறிஞ்சிப்பாடி சிங்கபுரி முருகன் கோவில் ஆகும். தீவிர முருக பக்தர் சுப்பராய சுவாமிகள் கனவில் முருகப்பெருமான் ஒரு நாள் வந்து தனக்கு இந்த இடத்தில் தனக்கு கோவில் எழுப்ப சொன்னார். அதன் படியே இத்திருக்கோவில் அனைத்து பக்தர்களின் உதவியுடன் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
அழகிய சிறு முகப்பு கோபுரத்துடன் கூடிய ஆலய கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் தண்டம் ஏந்திய படி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். விநாயகர், உமையாள், தட்சிணாமூர்த்தி, வள்ளல் பெருமான், என்று பல்வேறு தெய்வங்கள் அருளுகின்றனர்.
.
திருவிழா:
பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆடிக்கிருத்திகை, தைப்பூசம்
பிரார்த்தனை:
பிணிகள் தீர, நன்மைகள் அருள, மன நிம்மதிகிடைக்க, ஆரோக்கியம் பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்
நன்மைகள் அருளும் குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
Comments
Post a Comment