கோவில் 478 - தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகன் கோவில்

🙏🙏 

தினம் ஒரு முருகன் ஆலயம்-478

பிணி தீர்க்க அருளும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகன் கோவில்

29.9.2022 வியாழன்

அருள்மிகு புற்று முருகன் திருக்கோவில்

[புற்று முருகன் சித்தர்பீடம்]

கோவில்பட்டி சாலை

சாலிக்குளம்

ஓட்டப்பிடாரம்--628401

தூத்துக்குடி மாவட்டம்

இருப்பிடம்: ஓட்டப்பிடாரம் 3 கிமீ

செல்: 9972374078


மூலவர்: புற்று முருகன் (புற்று மண்)

தல விருட்சம்: வேலமரம்

தீர்த்தம்: நாகசுனை தீர்த்தம்

பழமை: 50 ஆண்டுகள்


தலமகிமை:

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்-கோவில்பட்டி சாலையில் 3 கிமீ தொலைவில் சாலிக்குளம் புற்று முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் புற்று முருகன் சித்தர்பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் பிரதான மூர்த்தியாக முருகப்பெருமானே விளங்குகிறார். “புற்றிருக்க பிணியில்லை” என்ற புது மொழியுடன் பக்தர்கள் பிணிகளை, முருகப்பெருமான் குணமாக்குகிறார்.


முத்துச்சாமி என்ற தீவிர முருக பக்தரின் வயிற்று வலியை வயோதிகர் வடிவில் முருகப்பெருமான் வந்து புற்று மண் கொடுத்து தீர்த்து வைத்ததால் இன்றும் புற்று மண்ணே நோய் தீர்க்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. முருகன் முத்துச்சாமி பக்தருக்கு கொடுத்த ஏடுகள் இன்றும் உள்ளது. முருகனே அருட்சித்தர் அடிகளாருக்கு குருவாக அமர்ந்து உபதேசம் செய்து அருள்வாக்கு கொடுத்து வருகிறார்.


தினசரி பூஜைகளும், ஒவ்வொரு ஞாயிறு பகல் 12 மணிக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. பௌர்ணமி அன்று நடைபெறும் சிறப்பு வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திருத்தலத்தின் தல விருட்சம் வேலமரம் ஆகும். சிவகுருநாதர் தவம் செய்த இடத்தில் உருவானதே இந்த வேலமரம் இங்கு தான் சித்தருக்கு சிவபெருமானும் அன்னை பார்வதியும் சிவசக்தியாக காட்சி கொடுத்தனர். முருகப்பெருமான் அடையாளம் காட்டிய இடத்தில் நாகசுனை தீர்த்தம் உருவானது. முதலில் “ஆசாரி கிணறு” என்று அழைக்கப்பட்ட இந்த சுனை, சர்ப்பம் தோன்றியதால் நாகசுனை என்று அழைக்கப்படுகிறது. இங்கு இருந்துதான் அபிஷேகத்திற்கு தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தீர்த்ததில் நீராடி புற்று முருகனை 21 முறை “ஓம் சிவநாதா புற்று முருகா சர்ப்பராஜாவே சரணம்” என்ற மந்திரம் சொல்லி வலம் வந்தால் தீராத பிணியும், மன நோயும் தீரும், நினைத்த காரியம் கை கூடும்


தல வரலாறு:

சிவகுருநாதர் எனும் சித்தர் இங்கு பல ஆண்டுகள் தவம் செய்து அடங்கிய இடத்திலே இந்தப் புற்று தோன்றியது. சித்தர் சிவகுருநாதருக்கு சாபவிமோசனம் கொடுக்க புற்றிலே காட்சி தந்ததால், புற்று முருகன் என்ற பெயருடன் அருளாட்சி புரிகிறார்.

தல அமைப்பு:

முருகப்பெருமான் இங்கு புற்றினிலே எழுந்தருளியாதல் இத்தலம் புற்று முருகன் சித்தர் பீடம் என்று பெயர் பெற்றது. புற்று தான் இங்கு மூலவர் ஆவார். புற்று முருகன் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு நோய் தீர்த்து, அனைத்து வகை தோஷங்களையும் அகற்றுகிறார். விநாயகர் அருகில் தனி சந்நிதியில் அருளுகின்றார்.


புற்று முருகன் சித்தர்பீடத்தில் அன்னை சண்டிகா பரமேஸ்வரி காவல் தெய்வமாய் அமர்ந்து சண்டித்தனங்களை வேரறுக்கவும் தீய சக்திகளை அழிக்கவும் அருள்கிறார். அன்னை பதினெட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சப்த கன்னியர்கள் இங்கு வந்து அம்மனுக்கு பூஜை செய்கின்றனர். பக்தர்களின் திருமாங்கல்ய பூஜையை ஏற்று சிவசக்தியாகவும், ஞானசக்தியாகவும் சித்தர்களின் தலைவியாகவும் மஹா சக்தியாகவும் இருந்து மக்களை அரவனைக்கும் தாயாக இருக்கிறாள். அன்னையின் அருளால் நாகதோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நீங்குகிறது.


புற்று முருகன் சித்தர்பீடத்தில் முருகனுக்கு தாயாய் வந்து அமர்ந்த சக்தி முத்து நாகேஸ்வரி. பெரியம்மா என்று பாசத்துடன் முத்து, நாகம், ஈஸ்வரி என்று மூன்று அதிசயதாக்க முகங்களுடன் அன்னை காட்சி தருகிறாள். பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவ சக்தி ஆகிய மூன்று சக்தியாகவும் அன்னையே இருந்து கீழ்திசை நோக்கி சாந்த சொரூபியாய் அருளாட்சி செய்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல வரம் தரும் சகலகலாவல்லியாய் காட்சி தரும் அன்னையை காண கண் கோடி வேண்டும். நாக புற்று நவக்கிரகங்களாக தோற்றப்பது சிறப்பு.


திருவிழா:

சித்ரா பவுர்ணமி, சித்திரை 18 வருஷாபிஷேகம், குரு பூஜை, வைகாசி விசாகம், ஆடி கடைசி ஞாயிறு, ஆடிப்பூரம், தை கடைசி வெள்ளி, .பவுர்ணமி


பிரார்த்தனை:

பிணி தீர, சாப விமோசனம் பெற்றிட, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டி, செல்வம் செழிக்க, நாக தோஷம், செவ்வாய் தோஷம் அகல, பேச்சு குறைபாடு நீங்க, பில்லி, சூனியம், ஏவல் நீக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல்


திறக்கும் நேரம்:

காலை 6-12 மாலை 4.30-8


சாப விமோசனம் தந்தருளும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகனை வழிபட்டு நலன் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - பிணி தீர்க்க அருளும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகன்


படம் 2 - சாப விமோசனம் தந்தருளும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சாலிக்குளம் புற்று முருகன்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்