கோவில் 113 - ஈரோடு மாவட்டம் பவளமலை முத்துக்குமார சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-113
நம் பாவங்களை போக்கிடும் ஈரோடு மாவட்டம் பவளமலை முத்துக்குமார சுவாமி கோவில்
29.9.21 புதன்
அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோவில்
பவளமலை,
முருகன்புதுர்-638476
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: கோபி 3 கிமீ, ஈரோடு 38 கிமீ
மூலவர்: முத்துக்குமார சுவாமி
தேவியர்: வள்ளி. தெய்வானை
தல மகிமை:
குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கொங்கு நாட்டில் வாணி ஆற்றின் தென்கரையில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளன. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பாலதண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் இடம் பெற்று விளங்குகிறார்.
‘பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு’ என்ற குற்றாலக் குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர் கொடுத்த பாரி ஆண்ட பகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவளமலையே. இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்சாவ முனிவரால் உருவாக்கப்பட்டு, பூஜித்த தலம் என்றே கூறப்படுகிறது. செட்டிநாட்டு பாடல் பெற்ற தலம். பழமையான இக்கோவிலின் திருப்பணிகளை விஜயநகர மன்னர்கள் செய்துள்ளனர்.
கோபி–அந்தியூர் வழியில் 3 கிமீ-ல் முருகன்புதுர் பஸ் நிலையம் அருகில் பவளமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானை வணங்கினால் இன்னல்கள் நீங்கும். இத்தலத்தின் பளிங்குச் சிற்பங்கள் பிரசித்திப் பெற்றவை. மேற்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருளும் முருகப்பெருமானை வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தப் பெருமானிடம் 'பூ வாக்கு' கேட்டு நடத்தப்படும் காரியங்கள் வெற்றியில் முடியும்.
திரிசதார்ச்சனை: ‘திரி’ என்றால் மூன்று, ‘சதம்’ என்றால் நூறு. திரிசதை என்றால் 300. முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை. வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு ‘சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை’ என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களும் ஈஸ்வரனை போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது. சூரசம்ஹாரம், வள்ளி, தெய்வானை கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு அனுக்கிரகம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து ‘சரவணபவ’ என்ற ஆறெழுத்து மந்திரம் (க்ஷடாசரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க, ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைக்கிறது. அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகியவற்றுக்காகவும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.
செவ்வாய் தோஷம் பரிகாரம்: பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. செவ்வாய்கிழமை மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்த வடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும்.
நோய்களை குணப்படுத்தும் லிங்கம்: இக்கோவில் கைலாசநாதர் லிங்கம் அருகிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்தது. விவசாயிகள் வயலை உழும் போது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் இதனை எடுத்து வந்து கோவிலில் பூஜித்து வருவதால் சுயம்புலிங்கமாக அருளுகிறார். இவரை வணங்கினால் நோய்கள் குணமடைகின்றன.
தல வரலாறு:
ஒரு முறை வாயுவும், ஆதிசேஷனும் தமக்குள் யார் சக்தி மிக்கவர் என்று போட்டிப் போட்டனர். வாயு புயலாக மாறி வீசத் துவங்கினார். சக்தி வாய்ந்த மேருமலையையே தகர்க்கும் நோக்கத்துடன், தன்னுடைய முழுபலத்துடன் மலை மீது மோதினார். காற்றின் வேகம் தாளாமல், மலையின் சிகரங்களில் ஒன்று பூலோகத்தில் விழுந்தது. அந்த சிகரமே பவளமலை. ஞானப்பழம் கிடைக்காததால் பெற்றோரிடம் கோபித்த முருகப்பெருமான் பழனியில் தங்கினார். அதன் பிறகு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக உலகத்தார் வழிபடத் துவங்கினர். அவ்வகையில், பவளமலையிலும், முருகனுக்கு பக்தர்களால் கோவில் எழுப்பப்பட்டது. இங்குள்ள முருகனுக்கு, முத்துக்குமார சுவாமி என்பது திருநாமம்.
மகேசனாகிய சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார். இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியது என்றும், அதை எடுத்து வந்து மலைமீது வைத்து வணங்கி வருவதாக வரலாறு கூறுகிறது.
தல அமைப்பு:
மரங்கள் அடர்ந்த அழகிய பவளமலைக் குன்றின் உச்சியில் முருகக்கடவுள் முத்துக்குமார சுவாமியாக குடி கொண்டிருக்கும் காட்சியைக் காண படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம். கிரிவல பாதையில் வாகனங்களிலும் செல்லலாம்.
கருவறையில் மூலவர் முத்துக்குமாரசுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்தலத்தில் வள்ளி, தெய்வானை தவத்தில் இருப்பது சிறப்பம்சம். வாயு மூலையில் வள்ளி, தெய்வானை முருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர். அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் தனித்தனி சந்நிதிகளுல் அருளுகின்றனர். செவ்வாய் காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் மகா கணபதி, வன்னி விநாயகர், பிரம்மா, இடும்பன், நவக்கிரகங்கள் முதலானோரை வணங்க வேண்டும்.
திருவிழா:
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம், சஷ்டி, கார்த்திகை, செவ்வாய், வெள்ளி
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு வேண்டி, அரசியலில் வெற்றி பெற, தொழிலில் வளர்ச்சி பெற, எதிரிகளை முறியடிக்க, செவ்வாய் தோஷம் நீங்க, நோய்கள் குணமாக, பாவங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், கல் காவடி (குழந்தை வேண்டி), பிற காவடிகள் எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 4-8
பவளமலை ஆண்டவனை (முத்துக்குமார சுவாமி) படியேறி வணங்கினால், பக்தர்களின் சகல தோஷங்களையும் போக்கிடுவார்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - நம் பாவங்களை போக்கிடும் பவளமலை முத்துக்குமார சுவாமி
படம் 2 - சகல தோஷங்களையும் போக்கிடும் பவளமலை ஆண்டவன் (முத்துக்குமார சுவாமி)
Pavalamalai Muthukumara Swamiku Arohara. Thanks for this post Iya
ReplyDelete