கோவில் 112 - தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-112
கேட்ட வரம் தந்தளுரும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்
28.9.21 செவ்வாய்
அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோவில்
கழுகுமலை-628552
தூத்துக்குடி மாவட்டம்
இருப்பிடம்: கோவில்பட்டி 22 கிமீ, சங்கரன்கோவில் 21 கிமீ, திருநெல்வேலி 59 கிமீ
மூலவர்: கழுகாசலமூர்த்தி (முருகப்பெருமான்)
தாயார்: வள்ளி, தெய்வானை
தலவிருட்சம்: மலைக்குன்று
தீர்த்தம்: குமார தெப்பம்
பழமை: 7-ம் நூற்றாண்டு அதிசய நிறைந்த குடவரை கோவில்
பதிகம்:
அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், சங்கீத மும்மூர்த்தி களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், மகாகவி பாரதியார், ‘காவடிச்சிந்து’ பாடிய புலவர் அண்ணாமலை ரெட்டியார், கழுகுமலை பிள்ளைத்தமிழ் பாடிய சிதம்பரக் கவிராயர் ஆகியோர் இத்தலத்தில் பாடல்கள் பாடியுள்ளனர்.
1.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (634)
“வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும்
அளவில் உதவும் பெருமாளே”
2.பாம்பன் சுவாமிகள் பாடல்
"எனைத் தள்ளினாலும் எனை நம்பினவரைத் தள்ளேல்! கனைத்தண்டை சிலம்ப வரும் கழுகுமலை முருகா"
3.எட்டயபுரம் காளிப்புலவரும், சிதம்பர கவிராயர் எனும் புலவரும், ‘கழுகுமலை பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் இரண்டு நூல்களைப் படைத்துள்ளார்கள்
தல மகிமை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து கோவில்பட்டி-சங்கரன்கோவில் வழியில் 22-வது கிமீ-ல் குடவரை முருகன் அருள்புரியும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. மேற்கு முகமாக வீற்றிருக்கும் முருகப்பெருமானின் மூன்று தலங்களில், இத்தலம் ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது.
பொதிகை மலையில் உறையும் அகத்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞான குருவாகவும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் தோஷத்தை நீக்கி மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாகவும் இத்தல முருகன் கழுகாசலமூர்த்தி என்ற திருப்பெயருடன் திகழ்கிறார். எனவே இத்தலம் ‘குரு-மங்கள ஷேத்திரம்’ என்றும் போற்றப்படுகிறது. இறைவனின் கருவறை மலையின் குகையில் அமைந்து இருப்பதால், இக்கோவிலின் மலையே ஆலயத்தின் கோபுரமாக விளங்குகிறது. இறைவனை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு (முக்தி) அளிக்கவல்ல அற்புதமான திருத்தலம் இதுவாகும்.
இக்கோவில் ஒரே கல்லால் ஆன குடைவரைக் கோவில் என்பது சிறப்பு. இக்கோவில் அருகில் கழுகுமலை வேட்டுவன் கோவில் மற்றும் சமணர் படுகைகள் உள்ளன. இங்குள்ள கோவிலின் கட்டுமானம் அனைத்தும் தலைகீழ் தான். முதலில் மலையின் மீது கோபுரத்தையும், அதில் நுணுக்கமான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளனர். அடுத்தபடியாக கருவறை, சிற்பங்கள், அடித்தளம் ஆகியவற்றை செதுக்கி உருவாக்கியுள்ளனர் என்பது சிறப்பம்சம்.
இங்கு நடைபெறுகின்ற சூரசம்ஹாரம், ரொம்பவும் விசேஷமானது. ஆறு வகையான சூரர்களின் உருவச் சிலைகள் பார்க்கவே பிரமிப்பூட்டும். கனத்த சூரர்களைத் தூக்கி ஆடுவதற்கு என்றே பலசாலி வீரர்கள் பலர் உண்டு. அவர்கள் சூரர்களுக்குள் புகுந்து பேயாட்டம் போட்டு முருகக்கடவுளைச் சண்டைக்கு இழுக்கும் வல்லமை இருந்தது. இந்தத் தலத்தில் மட்டும்தான் 2 நாட்கள் சூரசம்ஹார வைபவம் நடைபெறுகின்றது.
தல வரலாறு:
ராமபிரானும், சீதாப்பிராட்டியாரும் வனத்தில் இருந்தபோது, ராவணன், சீதையை கவர்ந்து சென்றான். அதனை தடுத்த சடாயுவின் இறக்கையை ராவணன் வெட்டினான். பின்னர் அங்கிருந்து சீதையோடு இலங்கைக்குச் சென்றான். சீதையின் குரல் கேட்டு ஓடி வந்த ராமனும், லட்சுமணனும் ரத்தக் காயத்துடன் விழுந்து கிடந்த சடாயுவை கண்டனர். அவர்களிடம் நடந்ததைக் கூறிவிட்டு தன் உயிரை விட்டது இதனால் ராமபிரான் மிகவும் மனம் வருந்தி, சடாயுவிற்கு செய்ய வேண்டிய சடங்குகளை தானே செய்தார். சடாயு இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது உடன்பிறப்பான சம்பாதி முனிவர், ராமபிரானை அடைந்து சடாயுவின் இறப்பிற்கு மிகவும் வருந்தியதோடு, தமது உடன்பிறந்தவனுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைக்கூட செய்ய இயலாத பாவியாகி விட்டேனே என்று புலம்பினார்.
அதைக்கேட்ட ராமபிரான், சம்பாதி முனிவரை தேற்றி, ‘தென்னாட்டில் 300 அடி உயரம் உள்ள மலையடிவாரத்தில், ஒரு குகையில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானை வணங்கி உன் பாவத்தைப் போக்கிக்கொள்’ என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். இத்தலத்திற்கு கழுகு முனிவர் சம்பாதி, வந்து, மலையிலேயே தங்கியிருந்து, ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு விளங்கும் முருகப்பெருமானை வணங்கி தனது பாவத்தை போக்கிக்கொண்டார். சகல பாவங்களையும் நீக்கும் வல்லமை கொண்ட முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இத்தலத்தில், கழுகு முனிவர் வசித்து வந்ததால் இம்மலை ‘கழுகுமலை’ என்ற பெயரைப் பெற்றது. கழுகுமலையில் அருள்பாலிக்கும் மூர்த்தி என்பதால், இத்தல இறைவனும் ‘கழுகாசலமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.
தல அமைப்பு:
இக்கோவிலில் மட்டுமே மயில் மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் 4 அடி உயர மூலவர் கழுகாசலமூர்த்த ஒரு முகமும், ஆறு கரங்களும் கொண்டு மேற்கு நோக்கியப்படி பக்தர்களுக்கு அருள்புரிகின்றார். ஒரு கரம், பக்தர்களுக்கு அபயமளிக்கிறது. மற்ற கரங்களில் ஆயுதங்கள் உள்ளன. சிவன், திருமால், பிரம்மா என்ற மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரும், சூரனை வதைக்க, முருகனுக்கு, பக்கபலமாக இருந்ததை குறிக்கும் வகையில், இந்த ஆறு கரங்கள் அமைக்கப்பட்டன. முருகப்பெருமானுக்கு இம்மாதிரியான திருக்கோலம் வேறெந்த தலத்திலும் இல்லை. தெற்கு நோக்கி படி வள்ளியும், வடக்கு நோக்கிவாறு தெய்வானையும் முருகப்பெருமானின் முன்பு பக்கவாட்டில் நின்ற கோலத்தில், இறைவனை நோக்கும் விதத்தில் அமைந்திருப்பதும் மிகவும் வித்தியாசமான கோலமாக உள்ளது.
சூரனை ஆட்கொண்டு, அவனது உடலின் ஒரு பகுதியை மயிலாக்கி அமர்ந்தார்,
முருகன். இதன் முகம், வலது பக்கமாக இருக்கும். ஆனால், இங்கு, தெய்வானையை மணம் முடித்து தந்த இந்திரன், மயிலாக மாறினான். இந்த இந்திர மயிலின் முகம், இடது பக்கமாக இருக்கும். மேலும் மயிலின் தலைப்பகுதி இறைவனின் இடப்பக்கத்தில் இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இங்கு தட்சிணாமூர்த்தி அருள்வது சிறப்பு.. முருகன் செவ்வாய்க்கு அதிபதி என்பதால், இக்கோவிலை, 'குரு மங்கள ஸ்தலம்' என்கின்றனர். இங்கு பவுர்ணமி கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பு.. இக்கோவிலின் தெப்பக்குளத்தில், பால் போன்ற நிறத்தில் குடிநீர் கிடைப்பதால், அனைவருமே இந்த நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
திருவிழா:
தைப்பூசம்(10 நாள்), பங்குனி உத்திரம்(13 நாள்), நவராத்திரி, கந்தசஷ்டி(13 நாள்), திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்(10 நாள்)
பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வி, ஞானம் சிறக்க, குரு, செவ்வாய் பரிகாரம் செய்ய, கேட்ட வரம் கிடைக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், காணிக்கை
திறக்கும் நேரம்:
காலை 6-11 மாலை 4-8
செவ்வாய் பரிகாரத்தலமான கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருவடி பணிந்து வேண்டிக் கொண்டால், அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் புரிந்திடுவார்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - கேட்ட வரம் தந்தளுரும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி
படம் 2 - அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள்புரியும் செவ்வாய் பரிகார மூர்த்தி கழுகுமலை கழுகாசலமூர்த்தி
Comments
Post a Comment