கோவில் 111 - திருப்பூர் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-111
மனநிலை பாதிக்கப்பட்டோரை குணமாக்கும் முருகன் திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்
27.9.21 திங்கள்
அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோவில்
திருமுருகன்பூண்டி-641652
திருப்பூர் மாவட்டம்
இருப்பிடம்: திருப்பூர் 9 கிமீ, அவிநாசி 13 கிமீ, கோவை 48 கிமீ
மூலவர்: திருமுருகநாதர், முருகநாதேஸ்வரர்
அம்பாள்: ஆவுடைநாயகி, மங்களாம்பிகை, ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை
நாயகர்: முருகப்பெருமான்
தலவிருட்சம்: வில்வம், குருக்கத்தி
தீர்த்தம்: சண்முகதீர்த்தம், ஞானதீர்த்தம், பிரம்மதீர்த்தம்
பதிகம்: 1. சுந்தரர் அருளிய தேவாரம் (206-வது தலம்):`வேதம் ஓதி வெண்ணீறு`
2. அருணகிரிநாதர் திருப்புகழ்: `திருமுருகன்பூண்டிப்பெருமாளே. ... திருமுருகன்பூண்டி என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே`3.செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் அருளிய தலபுராணம்
தல மகிமை:
கொங்கு நாட்டில் நொய்யல் ஆற்றின் வடக்கே, பவானி ஆற்றின் தெற்கே பரந்து விரிந்த பகுதியை வடபரிசார நாடு என்பர். இந்த பகுதியில் திருப்பூர் நகரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் அதோ முக தரிசனம் கொடுக்கும் முருகப்பெருமான் மற்றும் திருமுருகநாதர் என்ற திருப்பெயருடன் சிவபெருமான் கோவில் கொண்டிருக்குக் திருத்தலம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் ஆகும். தோழர் சுந்தரரின் சுந்தரத்தமிழில் தேமதுரப் பாடல்களைக் கேட்க சர்வேஸ்வரன் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய புண்ணிய தலமிது.
திருமுருகன்பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தன் என்று பாடப்பட்ட தலம். முருகப்பெருமான் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. தகப்பனும் தனயனும் சேர்ந்தருளும் தலம். திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனைக் வதைத்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொள்ளும் பொருட்டு இங்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோவிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக நம்பிக்கை உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் மட்டும்தான் முருகனின் ஐந்து முகங்கள் முன்னால் தெரியும் வகையில் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், ‘அதோ முகம்’ என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே என்பது தனிச்சிறப்பு.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என்பது சிறப்பு. பிரம்மஹத்தி தோஷம். கேது, நாக தோஷம் நீக்கும் தலம்.
தல வரலாறு:
திருச்செந்தூரில் வதம் செய்துவிட்டு, செந்தில்வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூலஸ்தானத்துக்கான மூலவர் இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.
சுந்தரமூர்த்தி நாயனார். தன் நண்பர் சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் அவருடைய தெள்ளு தமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோவிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது தலபுராணம்.
இத்தலத்து விநாயகர் சுந்தரரின் பரிசுப்பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் ‘கூப்பிடு விநாயகர்’ என்ற பெயரில் காட்சித் தருகின்றார். கோவிலுக்கு உள்பிரகாரத்தில் சுப்பிரமணியதீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கின்றன. சித்தப்பிரமை பிடித்தவர்களை அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை 48 நாட்கள் வழிபட்டு வர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தல அமைப்பு:
மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த திருமுருகன் பூண்டி கோவிலில் மற்றக் கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோவிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத்தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் மேற்குப் பார்த்து தரிசனம் தருகிறார்.. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச்சிற்பமாக வடித்துள்ளனர்.
மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறுமுகங்களுடன் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானைசமேதராக கருவறையில் வீற்றிருந்து ‘அதோ முகம்’தரிசனம் கொடுத்து தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 5 அடி உயரம் உள்ள முருகபெருமான் முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. முருகப்பெருமானுக்கு பிடித்த சிவலிங்கமும் சுப்பிரமணியரின் கருவறையில் இருப்பது சிறப்பு.
மூலவர் சந்நிதியின் இடதுபுறம், மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. மேலும் சுந்தர விநாயகர் (கூப்பிடு விநாயகர்) நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் இக்கோவில் சந்நதிகளில் வீற்றிருந்து அருள்கின்றனர். இங்குள்ள பிரம்ம தாண்டவ நடராஜர் சந்நிதி விசேஷமானது.
.திருவிழா:
மாசி பெருவிழா (13 நாள்), மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை, சஷ்டி, விசாகம், பிரதோஷம்
பிரார்த்தனை:
மனநோய் (சித்தபிரமை), பில்லி, சூனியம், சாபங்கள், பாவங்கள் நீங்க, பிரம்மஹத்தி தோஷம். கேது, நாக தோஷம் நீங்க, குழந்தை வரம் கிட்ட, கேட்ட வரம் கிடைக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-1 மாலை 4-8
வாழ்வில் நல்லன எல்லாம் நிறைவேற, திருமுருகன்பூண்டி முருகனையும் தந்தை திருமுருகநாதேஸ்வரரையும் தரிசித்து மகிழ்வோம்!
.வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - அதோ முகம் தரிசனம் தந்து முருகன் அருளும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில்
படம் 2 - மனநிலை பாதிக்கப்பட்டோரை குணமாக்கும் முருகன் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் அதோ முகம் முருகன்
Comments
Post a Comment