கோவில் 83 - நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🙏 

தினம் ஒரு முருகன் ஆலயம்-83

பசிப்பிணி தீர்க்கும் நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி கோவில்

30.8.2021 திங்கள்


அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி ஆலயம்

மஞ்சூர்-643219

குந்தா தாலூகா

நீலகிரி மாவட்டம்

இருப்பிடம்: ஊட்டியிலிருந்து 32 கிமீ (குந்தா வழி)


மூலவர்: தண்டாயுதபாணி சுவாமி

தல விருட்சம்: அரச மரம்

சிறப்பு: அன்னதானம்


தலமகிமை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து குந்தா வழியாக 32 கிமீ தொலைவில் மஞ்சூர் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான், பழனியைப் போன்றே தண்டாயுதபாணி சுவாமியாகக் காட்சியருள்கிறார். தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது சிறப்பு.


அன்னமலை முருகன் கோவிலில் எப்போது சென்றாலும் முருகனை தரிசிக்கலாம். கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்தக் கோவிலில் அன்னதானம் செய்தால் வேண்டுதலை முருகன் நிறைவேற்றுவதாக ஐதீகம் உள்ளது.


தல வரலாறு:

1936-ம் ஆண்டு கீழ் குந்தாவில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 8-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினார்கள். கிருஷ்ணன் சிறு வயது முதலே முருகப்பெருமானின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் சிறுவன் கிருஷ்ணனைக் காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடினார்கள். அப்போது அவன் கடவுளைத் தேடி அங்குள்ள சிவன் குகைக்குள் இருந்தான். அங்கேயே 3 ஆண்டுகள் முருகனின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் அவனுக்கு, முருகப்பெருமானின் தரிசனம் கிடைத்தது. அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், 'நான் இங்கே தான் இருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் வேள்விகளும், அன்னதானமும் நடைபெற்ற புனிதமான இடம் இது. இங்கு மீண்டும் அன்னதானம் தொடர வேண்டும். நான் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறேன். அதற்கான வேலையை நீ தொடங்குவாயாக' என்று கூறி விட்டு மறைந்தார்.


முருகனின் கட்டளையை நிறைவேற்ற கிருஷ்ணன் கற்களை சேகரித்து வந்து, மலை உச்சியில் அடுக்கிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஊர் மக்கள் விஷயம் கேள்விப்பட்டு, அவனுடன் இணைந்தனர். இதன் பலனாக அங்கு 1975-ம் ஆண்டு கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இன்று அழகாக காட்சி அளிக்கிறது அன்னமலை தண்டாயுதபாணி கோவில். முருகப்பெருமான் எப்படி கிருஷ்ணனுக்கு காட்சி அளித்தாரோ, அதே கோலத்தில் பழனி தண்டாயுதபாணியாக குடிகொண்டிருக்கிறார்.


தல அமைப்பு:

கோவிலுக்குச் செல்வதற்கு முன்பாக இடதுபுறம் உள்ள விநாயகரை தரிசிக்க வேண்டும். வலதுபுறம் அன்னதானக் கூடம் உள்ளது. இதற்கடுத்து வலது புறம் சென்றால் தண்டாயுதபாணியை தரிசனம் செய்யலாம்.


கருவறையில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி கையில் தண்டம் ஏந்தி காட்சியளித்து அருள்பாலிக்கின்றார். இத்தலத்து முருகப்பெருமான் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த அலங்காரம் வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். பெருமானது கட்டளைப்படி பழனி முருகனுக்கு செய்வதைப் போல ஆண்டி/ராஜ/சர்வ அலங்காரம் இன்றளவும் செய்கின்றனர். படுகர் இன மக்கள் பூஜை செய்கின்றனர். இந்த ஆலயத்தில் உள்ள சிவன் குகை, இங்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் உள்ளது. இது தவிர நாகராஜர் சந்நிதி, நவக்கிரகங்கள் போன்றவற்றையும் தரிசிக்கலாம். நாகராஜர் சந்நிதி அருகில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து பார்த்தால் சிவன் குகை மற்றும் மலையை வந்து முத்தமிட்டு செல்லும் மேகக்கூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.


திருவிழா:

சித்திரையில் காவடி பெருவிழா, ஆகஸ்ட் 15 அன்னதானம், கிருத்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம்

பிரார்த்தனை:

பசிப்பிணி தீர, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் வேண்டி, மன அமைதி வேண்டி, நோய்கள், துன்பங்கள் நீங்கிட, கல்வி, ஞானம், அறிவு, செல்வம், விவசாயம் செழிக்க, ஆயுள் பலம் வேண்டி


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, முடி இறக்குதல், காது குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை 6-11 மாலை 5-8


கல்வி, ஞானம், அறிவு, செல்வம் பெருக அருளும் நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமியை தொழுது பணிந்திடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏 



படம் 1 - 
பசிப்பிணி தீர்க்கும் நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - கல்வி, ஞானம், அறிவு, செல்வம் பெருக அருளும் நீலகிரி மாவட்டம் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி கோவில்




Comments

  1. Neelagiri Annamalai Thandayudhapani Swamiku Arohara. Thanks for this post Iya

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்