கோவில் 82 - காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி கோவில்
🙏 🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-82
மனதுக்கு அமைதி தரும் காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி கோவில்
29.8.2021 ஞாயிறு
அருள்மிகு நடுபழனி தண்டாயுதபாணி ஆலயம்
பெருக்கரணை-603309
செய்யூர் தாலூகா
காஞ்சிபுரம் மாவட்டம்
இருப்பிடம்: மேல்மருவத்தூரிலிருந்து 11 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
(மரகத மூலவர்)
நிறுவியவர்: முத்துசுவாமி சித்தர்
கோவில் பெயர் சூட்டியவர்: காஞ்சி பெரியவர்
சிறப்பு: 45 அடி உயர முருகன் கோவில்
தலமகிமை:
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரிலிருந்து அச்சிறுபாக்கம் செல்லும் வழியில் அச்சிறுபாக்கத்திற்கு இரண்டு கிமீ முன்னால் இடது புறத்தில் நடுபழனி முருகன் கோவில் வளைவு காணப்படும். அங்கிருந்து 6 கிமீ தொலைவில் பிரசித்திப் பெற்ற பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. பழனியில் தண்டாயுதபாணியை போலவே இங்குள்ள மரகத கல்லிலான தண்டாயுதபாணி இருப்பதால், இத்தலம் நடுப்பழனி என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படுகிறது. சென்னையில் வட பழனி திருக்கோவிலும், தெற்கில் பழனி திருக்கோவிலும் உள்ளதால், இக்கோவில் நடுபழனி தண்டாயுதபாணி கோவில் என்றழைக்கின்றார்கள்.
இங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளித்து அருள்பாலிக்கின்றார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 45 அடி உயரமுள்ள முருகன் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெறுகிறது.
மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக் காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது. சுவாமிகளின் நெருங்கிய நண்பரான முறப்பாக்கம் சுவாமிகளின் ஜீவ சமாதி மலையடிவார நவக்கிரக சந்நிதி அருகே அமைந்துள்ளது.
தைப்பூசத்திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் இந்த திருக்கோவிலுக்கு காவடியோடு பாதயாத்திரையாக வந்து தண்டாயுதபாணியை தரிசிக்கிறார்கள். இந்த முருகப் பெருமானை மனமுருகிப் பிரார்த்தித்தால் திருமணத் தடைகள் அனைத்தும் விலகும். பங்குனி உத்திரத் திருவிழா 3 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. மூலவருக்கு அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும், மாதக் கிருத்திகை தினத்திலும் பாலாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகள் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கை மேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. மன அமைதி உண்டாகிறது.
தல வரலாறு:
சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சியில் வாழ்ந்த சித்தர் முத்துசுவாமி சுவாமிகள் முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் திருத்தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார். ஒரு நாள் அவர் கனவில் முருகப்பெருமான் தோன்றி, ‘பெருக்கரணையில் உள்ள மலையில் தனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் சித்தர் முத்துசுவாமி தற்போது கோவில் உள்ள இடத்தில் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார். பின்னர் கோவில் எழுப்பினார். காஞ்சி மகாப்பெரியவர் பாதயாத்திரை மேற்கொண்டு, இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்த போது, நடுபழனி என்ற பெயரைச் சூட்டினார். பின்னர் மரகதக் கல்லில்லான தண்டாயுதபாணி சிலையை பிரதிஷ்டை செய்தனர். 1993-ல் கும்பாபிஷேகம் நடந்தது. சித்தர் முத்துசுவாமி ஜீவ சமாதி அடைந்த பிறகு, கோவிலை மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் நிர்வகித்தார். தற்போது 14.2.2002-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தல அமைப்பு:
பசுமையான பெருங்கரணையில் சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையில் அமைந்துள்ள நடுபழனி கோவிலையடைய வடக்கில் 128 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கே வாகனங்கள் ஏறும் வசதியும் இருக்கிறது. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.
முதலில் இடும்பன் தரிசித்த பிறகு சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. கருவறையில் மூலவர் மரகதக் கல்லினால் தண்டாயுதபாணி சுமார் மூன்று அடி உயரத்தில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளார். மரகத தண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் பேரழகுடன் புன்னகை ததும்ப காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். நடுபழனி மலைக்கோவிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணியின் உருவம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணியை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. தண்டாயுதபாணியின் இருபுறங்களிலும் இரண்டு மயில்களும் நாகங்களும் பின்புறத்தில் மயில் தோகையும் வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தின் இடதுபுறம் ருத்திராட்ச மண்டபம் காணப்படுகிறது. இதில் ருத்ராட்சப் பந்தலின் கீழ் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி மயிலின் மீது அமர்ந்த அழகிய திருக்கோலத்தில் தரிசனம் நல்குகிறார். ஆலய மகா மண்டபத்தின் இடதுபுறம் வள்ளி, தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகாலட்சுமி, உற்சவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அருள்பாலிகின்றனர். இக்கோவிலில், அறுபடை வீடுகளின் சுதைச் சிற்பங்கள் கண்ணைக் கவரும்வண்ணம் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன
திருவிழா:
தைப்பூசம் பங்குனி உத்திரம் (3 நாள்), கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், அனைத்து கிருத்திகை, செவ்வாய், குரு பூஜை
பிரார்த்தனை:
அனைத்து நன்மைகளும் பெற்றிட, மன அமைதி பெற, திருமணத் தடை நீங்க, மணப்பேறு, மகப்பேறு வேண்டி
நேர்த்திக்கடன்:
காவடி எடுத்தல், பாதயாத்திரை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல், திருக்காணிக்கை
திறக்கும் நேரம்:
காலை 7-12 மாலை 4.30-8
காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணியை தரிசித்தவர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைத்திடும்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - மனதுக்கு அமைதி தரும் காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி
படம் 2 - அனைத்து நன்மைகளும் கிடைத்திட அருளும் காஞ்சிபுரம் மாவட்டம் பெருக்கரணை நடுபழனி தண்டாயுதபாணி கோவில்
Kanchipuram Perukaranai Nadu Pazhani Thandayudhapaniku Arohara. Thanks for this post Iya
ReplyDelete