கோவில் 81 - செங்கோட்டு வேலன் குடிக்கொண்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்

 🙏🙏 

தினம் ஒரு முருகன் ஆலயம்-81

சேவற்கொடிக்கு பதில் சேவலையே கையில் கொண்டு அருளும் செங்கோட்டு வேலன் குடிக்கொண்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்

28.8.2021 சனி


அருள்மிகு செங்கோட்டு வேலன் ஆலயம்

அ/மி அர்த்தநாரிஸ்வரர் திருக்கோவில்

திருச்செங்கோடு-637211

நாமக்கல் மாவட்டம்

இருப்பிடம்: ஈரோடு 19 கிமீ, நாமக்கல் 31 கிமீ


மூலவர்: அர்த்தநாரிஸ்வரர் (சிவன் இடபாகம் சக்தி)

தாயார்: பாகம்பிரியாள் (பார்வதி தேவி)

நாயகன்: செங்கோட்டு வேலன் (முருகன்)

தல விருட்சம்: இலுப்பை மரம்

தீர்த்தம்: தேவ தீர்த்தம்

புராணப்பெயர்: திருக்கொடிமாடச் செங்குன்றூர்

பாடல்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இளங்கோ அடிகள்


தலமகிமை:

நாமக்கல் மாவட்டத்தில் 31 கிமீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு குன்றில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆணும், பெண்ணும் சமம் என்ற நோக்கில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு தன் இடப்பாகத்தையே அளித்து மாதொருபாகனாகவும், முருகப்பெருமான் சேவலை கையில் பிடித்து செங்கோட்டு வேலனாகவும் பக்தர்களுக்கு அருள்புரியும் சிறப்பு தலம் இது. கோவிலுக்குச் செல்ல மலை மீது 1200 படிகள் ஏற வேண்டும். இந்தப் படிகளில் 60-ம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம். மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால், நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு. கோவிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிகட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன. ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வாடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.

சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம். செங்கோடன் செங்கோட்டு வேலவன், செங்கோட்டுவேல் என கொங்கு நாட்டு மக்கள் இன்றும் தம் பிள்ளைகளுக்கு பெயரிட்டு மகிழ்கின்றனர். இத்தலம் பற்றிய குறிப்புக்கள் தேவாரம், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், சிலப்பதிகாரம் முதலிய தேவநூல்களில் உள்ளன. இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107-வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116-வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார். இக்கோவிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டு வேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனுபூதியில் பாடியுள்ளார்.


அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், ஆதிகேசவபெருமாள் ஆலயம், செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சந்நிதிகளையும் தனித் தனியாக இந்த மலையின் மீது ஆலயமாக அமைந்துள்ளது.


இந்த மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இம்மலையே சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்பதை உணர்த்துகிறது. இம்மலைக்கு தெய்வத்திருமலை, உரசகிரி எனப் பெயர்களும் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் தேவதீர்த்தம் ஆகும். தல மரமாக இலுப்பை மரம் உள்ளது.


தல வரலாறு:

மதுரையம்பதிக்கு வந்த ஹேமநாதப் புலவரிடம், விறகு விற்கும் எளியோனாக வந்து ஈசன் வென்ற கதைப் போலவே, ஈசனின் மகனான செங்கோட்டு வேலன், திருச்செங்கோடு தலப்பெருமையை உலகறியச் செய்ய ஆடிய திருவிளையாடல்தான் இத்தல வரலாறு.


இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டு வேலர் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக் கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே?!" - என்று வியந்து பாடி அதற்குமேல் எழுத முடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது ஆய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டு உயர்ந்த குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே" எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது.


தல அமைப்பு:

அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி: சிவனும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை என்ற கருத்தின் படி இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத, சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்க்கின்றார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். சந்நிதிக்கு முன் வாயில் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணியுள்ளது. மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. இக்கோவிலில் இருக்கும் மரகதலிங்கம் மற்றொறு சிறப்பு. கேதார கௌரி, மரகத லிங்கத்தைப் பூஜித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது. பெண்கள் புரட்டாசியில் கேதார கௌரி விரதம் இருப்பதால், தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். மலையே லிங்க வடிவில் உள்ளதால், பவுர்ணமியில் கிரிவலம் வந்தால், கைலாயத்தையும், வைகுண்டத்தையும் சுற்றி வந்த பலன் கிட்டுகிறது. எதிரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவபெருமாள் அருள்கின்றார்.

செங்கோட்டு வேலவர் சந்நிதி: இத்திருத்தலத்தில், முருகப்பெருமான் செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் தனிச் சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் உலகில் வேறு எங்கும் இல்லாதவண்ணம், இத்தலத்தில் வலது கரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அனைத்த வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறார். இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது. சற்றே கையை வளைத்து வேலின் மேல் பாகத்தை பிடித்திருக்கும் முருகனை இங்கு மட்டுமே காண முடியும். வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.


நாகர் சிலை :

நாகர் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது நாம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகர் உருவமே நாகர்மலையின் முதலிடம் ஆகும். இந்த நாகருக்கு மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதணை செய்து வழிபடுகின்றனர். ராகு தோஷம், நாகதோஷம், காலசர்ப்பதோஷம், களத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். முன்னர் மக்கள் படி வழியாக சென்று நாகதெய்வத்தை வழிபட்டனர்.


திருவிழா:

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம் மற்றும் சிவன், அம்பாள், முருகப்பெருமான் விஷேச தினங்கள்


பிரார்த்தனை:

நாக தோஷம், சர்ப்ப தோஷம், ராகு தோஷம், களத்திர தோஷம் நீங்க, கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக, கல்வி, ஞானம், செல்வம் பெருக


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாற்றுதல், திருக்காணிக்கை


திறக்கும் நேரம்:

காலை 6 முதல் மாலை 6 மணி வரை


தம்பதி ஒற்றுமை ஒங்கிட அருளுகின்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரையும், செங்கோட்டு வேலவனையும் ஒரு சேர கும்பிட்டு நற்பலன்கள் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - சேவற்கொடிக்கு பதில் சேவலையே கையில் கொண்டு அருளும் செங்கோட்டு வேலன் குடிக்கொண்டுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்


படம் 2 - தம்பதி ஒற்றுமை ஒங்கிட அருளுகின்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்


Comments

  1. Thiruchengodu Sengottu Velanuku Arohara. Thanks for this post Iya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்